"விராட் கோலி பாணியில் பதிலடி கொடுக்க வேண்டும்" - சீண்டும் வகையில் பேசிய ஸ்டோக்ஸ்! Fans கொந்தளிப்பு!
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, லார்ட்ஸில் நடைபெற்ற 3வது டெஸ்ட்டில் வீரர்களுக்கு இடையேயான மோதலால் காரசார போட்டியாக மாறியது.
லார்ட்ஸில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இரண்டு அணி வீரர்களும் தங்களுடைய வெற்றிக்காக போராடிய நிலையில், களத்தில் பல சம்பவங்கள் நடைபெற்றன. 192 ரன்னுக்கு இங்கிலாந்தை சுருட்டிய போதிலும் இந்தியாவால் வெற்றிபெற முடியவில்லை. மாறாக இங்கிலாந்து அணி ஒரு சாம்பியன் அணியை போல விளையாடியது.
இந்த சூழலில் 3வது டெஸ்ட் போட்டி வெற்றிக்கு பிறகு பேசிய பென் ஸ்டோக்ஸ், ஜாக் கிராவ்லி உடனான மோதல் குறித்து சுப்மன் கில்லையும் இந்திய அணியையும் எச்சரிக்கும் வகையில் பேசினார்.
மாறி மாறி மோதிக்கொண்ட இந்தியா, இங்கிலாந்து வீரர்கள்!
முதல் இன்னிங்ஸில் இரண்டு அணிகளும் 387 ரன்கள் அடித்ததால் ஆட்டம் சூடுபிடித்தது. இந்தசூழலில் 3-ம் நாள் ஆட்டம் முடிய 6 நிமிடங்கள் இருந்தபோது இங்கிலாந்து வீரர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய களமிறங்கினர். 2 ஓவர்கள் வீசினால் ஒரு விக்கெட்டையாவது வீழ்த்தலாம் என்ற முடிவில் இருந்த இந்திய அணிக்கு, இங்கிலாந்து ஓப்பனர் ஜாக் கிராவ்லி சைடு ஸ்கிரீன் பார்ப்பதில் பிரச்னை என்றும், கையில் அடிப்பட்டுவிட்டது என பிசியோவை கூப்பிட்டும் நேரத்தை கடத்தினார்.
தொடர்ந்து நேரத்தை விரையம் செய்ததால் ஜாக் கிராவ்லி உடன் இந்திய கேப்டன் சுப்மன் கில் வாக்குவாதம் செய்தார், சில வார்த்தைகளை பேசினார். மேலும் பும்ரா, சிராஜ் என அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் சேர்ந்து ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட்டுக்கு எதிராக நின்று, கைத்தட்டி விமர்சனம் செய்தனர்.
இந்த சூழலில் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக, இங்கிலாந்து பவுலர்கள் வேகத்தால் மிரட்டினால், இங்கிலாந்து ஃபீல்டர்கள் 3-ம் நாள் ஆட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வார்த்தைகள் மூலம் தாக்குதல் நடத்தினர். பென் டக்கெட் முதலிய வீரர்கள் கேஎல்ராகுல் போன்ற இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக கைகளை தட்டி எதிரிவினையாற்றினார்.
அதுமட்டுமில்லாமல் நிதிஷ் குமார் ரெட்டி பேட்டிங் செய்ய வந்தபோது, ‘நீ யார் என்று எனக்கு தெரியவில்லையே, சன்ரைசர்ஸ் அணியில் இருந்தபோதும் நீ யாரென்று எனக்கு தெரியாது, உன்னை பற்றி கேள்விபட்டதும் இல்லை’ என நீயெல்லாம் ஒரு வீரரா என்ற தொணியில் பேசிய ஹாரி ப்ரூக் நிதிஷ் ரெட்டியின் கவனத்தை சிதறடித்தார்.
போக பும்ரா, சிராஜ் என அனைத்து வீரர்களுக்கு எதிராகவும் இங்கிலாந்து வீரர்கள் எதிர்வினையாற்றினர். ஜடேஜாவுக்கு எதிராக வேகப்பந்துவீச்சாளர் கார்ஸ் வாக்குவாதம் நடத்தினார்.
இப்படி லார்ட்ஸில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியானது அனல்பறக்கும் ஒரு போட்டியாகவே அமைந்தது.
எச்சரித்த பென் ஸ்டோக்ஸ்..
இந்நிலையில் 3வது டெஸ்ட்டில் வெற்றிபெற்ற பிறகு பேசிய பென் ஸ்டோக்ஸ், சுப்மன் கில் மற்றும் இந்திய அணியை எச்சரிக்கும் வகையில் பேசினார்.
சீண்டும் வகையில் பேசிய ஸ்டோக்ஸ், “உங்கள் அணியின் தொடக்க வீரர்கள் 2 பேர் ஒரு ஓவர் பேட்டிங் செய்வதற்காக செல்லும்போது, எதிரணியின் 11 பேரும் ஒட்டுமொத்தமாக அவர்கள் இருவருக்கு எதிராக வருகிறார்கள் என்றால், அது மற்றொரு பக்கத்தை காட்ட வைக்கும்” என எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார்.
மேலும் வெற்றிக்கு பிறகு பேசிய ஆர்ச்சர், “நாங்கள் வெளியில் செல்லும்போது எங்களிடம் சில அணி வீரர்கள் நன்றாக நடந்துகொள்வதில்லை, நாங்கள் அதை திருப்பி கொடுக்க நினைத்தோம். அதனால் நாங்கள் ஒன்றாக சேர்ந்து அதைச்செய்தோம்” என பேசினார்.
இந்த சூழலில் பென் ஸ்டோக்ஸின் எச்சரிக்கும் கருத்திற்கு இந்திய ரசிகர்கள் எதிரிவினையாற்றி வருகின்றனர். ஒரு ரசிகர், இவர்களுக்கு விராட் கோலியின் பாணி தான் சரியாக இருக்கும், அடுத்த போட்டியில் கருணையே காட்டக்கூடாது என்று எழுதியுள்ளார்.