’பச்சைக்கிளிங்கிற வார்த்தையே இல்லை’ - இல்லாத திருக்குறளை அச்சிட்டு வழங்கிய ஆளுநர் மாளிகை!
ஜூலை 13-ஆம் தேதி நடந்த மருத்துவ தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் தமிழகத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு வரக்கூடிய 50 மருத்துவர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நினைவுப்பரிசு வழங்கினார்.
இந்த கேடயத்தில் திருக்குறள் ஒன்று அச்சிடப்பட்டிருந்தது. மேலும், அந்த திருக்குறளின் வரிசை எண் 944 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த திருக்குறள்தான் மிகப் பெரிய பேசுபொருளாகி உள்ளது. திருக்குறளில் அப்படி ஒரு குறளே கிடையாது என்பது தமிழ் ஆர்வளர்கள் மத்தியில் அதிச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருக்குறள் புத்தகத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் அச்சிட்ட குறளை தேடிய போது, 944 -என்ற எண் வரிசையில் அப்படி ஒரு திருக்குறள் இல்லை என்பது தெரியவந்தது. அந்த திருக்குறள் ஒரு போலியான திருக்குறள் என்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், தமிழக கவர்னர் மாளிகை நிர்வாகம் 50 மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் அனைத்தையும் திரும்ப பெற்ற திட்டமிட்டிருப்பதாகவும் திருக்குறள் திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை அச்சிட்ட திருக்குறள்
செருக்கறிந்து சீர்மை பயக்கும் மருப்பொடு
மன்னுஞ்சொல் மேல்வையப் பட்டு. (திருக்குறள் 944)
திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் 944
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
இந்த விவகாரம் குறித்து தமிழறிஞர்கள் பலரும் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். அதாவது, இது திருக்குறளுக்கும், வள்ளுவருக்கு நேர்ந்த அவமானம் என்று தெரிவிக்கின்றனர்.