surendar gill
surendar gillUP Yoddhas

UP Yoddhas | பலமான அணி... ஆனாலும் இந்த கோப்பை..?

பேப்பரில் பலமான அணிகளுள் ஒன்றாக காட்சியளிக்கும் யுபி யோதா ரப்பர் மேட்டிலும் அதே பலத்தைக் காட்டினால் வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்!
Published on

'லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்' பன்ச் பி.கே.எல்லில் பக்காவாக செட்டாவது யுபி யோதா அணிக்குத்தான். ஐந்தாவது சீசனில் புதிதாய் சேர்க்கப்பட்ட நான்கு அணிகளுள் யோதாவும் ஒன்று. அப்போதிருந்து கடந்த ஐந்து சீசன்களாக தொடர்ந்து ப்ளே ஆப் சுற்றுக்குள் தகுதி பெற்றுவரும் ஒரே அணி யுபிதான். இதுவரை ஆடிய போட்டிகளில் மொத்தப் புள்ளிகளுக்கு சராசரி எடுத்துப் பார்த்தால் அதிலும் யுபிக்கு இரண்டாமிடம். இப்படி சீசனுக்கு சீசன் கெத்து குறையாமலேயே இருப்பதால் ஏலத்திற்கு முன்னதாக பெரும்பாலான டீமை அப்படியே ரீட்டெயின் செய்வதாக அறிவித்தார்கள்.

அனேகம் பேரை ரீட்டெயின் செய்துவிட்டதால் ஏலத்திற்குள் இரண்டு கோடி என்கிற குறைவான தொகையுடனே களமிறங்கியது அணி நிர்வாகம். இரண்டு பிரதான ரெய்டர்கள், கார்னர் பொஷிஷன் டிபென்டர்கள், ஒரு கவர் டிபென்டர் என ஏழில் ஐந்து இடங்கள் ஏற்கெனவே செட்டாகிவிட்டதால் மீதி இரண்டு இடங்களுக்கும் பேக்கப் ஆப்ஷன்களுக்காகவும் மட்டுமேதான் ஏல டேபிளுக்கு வந்தார்கள். அதிலும் ஆல்ரவுண்டர் விஜய் மாலிக்கை 85 லட்சத்திற்கு டெல்லியிடமிருந்து தட்டிப் பறித்ததெல்லாம் முரட்டு டீல். காலியாய் இருந்த லெப்ட் கவருக்கென ஹரேந்திர குமாரையும் எடுத்து தம்ஸ் அப் காட்டினார்கள். இவை எல்லாவற்றையும் விட மற்ற அணிகளின் கண்களை ஈர்த்தது கென்ய வீரர்கள் மேல் அணி நிர்வாகம் காட்டிய ஆர்வம். பி.கே.எல்லில் இந்திய வீரர்களுக்கு அடுத்தபடியாய் முறையே ஈரானிய, கொரிய வீரர்களுக்கே மவுசு. ஆனால் யுபி அணி நிர்வாகம் கென்ய வீரர்கள் மேல் காட்டிய ஈடுபாடு ஏகப்பட்ட புருவங்களை உயர்த்தியது.

பலம்

முன் சொன்னதுபோல கோர் டீம் என ஒன்று செட்டாகி இருப்பதுதான். 11 பேர் ஆடும் கிரிக்கெட்டுக்கே கோர் டீம் என்பது 5 பேர்தான். ஏழே பேர் ஆடும் கபடியில் ஐந்து பேர் கோர் டீம் என்றால் கெமிஸ்ட்ரிக்கு சொல்லவா வேண்டும்? மற்ற அணிகளைப் போல பழகிப் பார்த்து நிறைகுறை தெரிந்து அதற்கேற்றார் போல திட்டம் வகுக்க எல்லாம் தேவையே இல்லை. முதலடியிலிருந்தே சரவெடிதான்.

surendar gill
U Mumba | இழந்த புகழை மீட்டெடுக்குமா மும்பை..!
surendar gill
PKL | இந்த குஜராத்தும் கோப்பை வெல்லுமா..?
surendar gill
Telugu titans | இந்த முறையாவது ப்ளே ஆஃப் போகுமா டைட்டன்ஸ்..?

பர்தீ நர்வால், சுரேந்தர் கில் இருவருமே தனித்தனி அணிகளில் இருந்தால் அந்தந்த அணிகளின் முதன்மை ரைடர்களாக வலம்வரத் தகுதியானவர்கள். பர்தீப் தான் பி.கே.எல் வரலாற்றில் அதிக பாயின்ட்கள் எடுத்திருக்கும் ரைடர். எட்டு சீசன்களில் 1568 ரெய்ட் பாயின்ட்கள். கில் அவர் பங்கிற்கு குறைந்தது 150 பாயின்ட்கள் எடுப்பார். இதுபோக, இவர்கள் மூன்றாவது ரைடர் என எடுத்துவைத்திருக்கும் விஜய் மாலிக்குமே இன்னொரு அணியில் முதன்மை ரைடராகும் அத்தனை அம்சங்களும் கொண்டவர்தான். இப்படி ஒரு ரைடிங் கூட்டணி வேறெந்த அணிகளுக்கும் இந்த சீசன் அமையவில்லை. சுமித், நிதேஷ் குமார், அஷு சிங் ஆகிய டிபென்டர்களும் காலங்காலமாய் யுபி யோதாவுக்காக களமிறங்கி வெற்றிகளைக் குவித்தவர்கள்தான்.

பலவீனம்

ரைடிங் மூம்மூர்த்திகளுக்கும் திறமை மட்டுமே பொதுவான அம்சம் இல்லை. காயமும்தான். பர்தீப்பிடம் முன்பிருந்த வேகம் கடந்த இரண்டு சீசன்களாக இல்லை. காரணம், காயம். சுரேந்தரும் விஜய்யும் போன சீசனில் பாதி ஆட்டங்களில் மட்டுமே காயம் காரணமாக பங்கெடுக்க முடிந்தது. இந்த எஸ்.டி.டி தொடரும்பட்சத்தில் யுபி போட்டு வைத்திருக்கும் திட்டங்கள் எல்லாம் கலகலத்துவிடும்.

லெப்ட் கவரில் ஆடப்போகும் ஹரேந்திர குமாரின் சமீபத்திய ஃபார்ம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஒருவேளை அவர் சரியாக ஆடாவிட்டால் அவரிடத்தை நிரப்பும்படியான பொருத்தமான மாற்றுவீரரும் பெஞ்ச்சில் இல்லை.

கவனிக்கப்படவேண்டிய வீரர்

விஜய் மாலிக் கடந்த மூன்று சீசன்களாக டெல்லி அணியின் இரண்டாவது ரைடராக வலம்வந்தவர். யுபி போன்ற அணியில் அவரின் ப்ளேஸ்மென்ட் என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளவே ஆர்வமாகத்தான் இருக்கிறது. அவர் முழு உடல்தகுதியுடன் இருக்கும்பட்சத்தில் சுரேந்தரை முந்தி அணியில் அடுத்த சீசனுக்கும் சேர்த்துத் தன் இடத்தைத் தக்கவைத்துக்கொள்வார் என்பதில் சந்தேகமே இல்லை.

ப்ளேயிங் செவன்

இந்த எழுவர்தான் ஆரம்ப ஆட்டங்களில் ஆடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. யார் செகண்ட் ரைடர் என்பதில்தான் மாற்றங்கள் இருக்கலாம்.

பர்தீப் நர்வால் (கேப்டன் - ரைடர்), சுரேந்தர் கில் (ரைடர்), விஜய் மாலிக் (ரைடர்), ஹரேந்திர குமார் (லெப்ட் கவர்), அஷு சிங் (ரைட் கவர்), சுமித் (லெப்ட் கார்னர்), நிதேஷ் குமார் ( ரைட் கார்னர்)

தொடர்ந்து ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும் கோப்பையை தொட்டுவிடும் தூரத்திற்கு யுபி யோதா அணியால் நகர முடிந்ததில்லை. இந்தமுறை தொட்டுவிடவேண்டும் என்பதற்காகவே பலமான அணியை செட் செய்திருக்கிறார்கள். பேப்பரில் பலமான அணிகளுள் ஒன்றாக காட்சியளிக்கும் யுபி யோதா ரப்பர் மேட்டிலும் அதே பலத்தைக் காட்டினால் வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com