U Mumba | இழந்த புகழை மீட்டெடுக்குமா மும்பை..!

ஒருபக்கம் ஐ.பி.எல் ட்ரேடிங்கில் மும்பை அணி பலம் வாய்ந்த அணியாக மாறிக்கொண்டிருக்க, மறுபக்கம் அந்த மும்பை பெருமையை தக்க வைக்கக் காத்திருக்கிறது யூ மும்பா.
rink narwal
rink narwalU MUMBA

ஐ.பி.எல்லைப் போலவே பி.கே.எல்லிலும் பலம் வாய்ந்த அணி மும்பை. தொடர் தொடங்கிய முதல் சீசனிலேயே ரன்னர் அப். இரண்டாவது சீசனில் வின்னர். மூன்றாவது சீசனில் மீண்டும் ரன்னர் அப் என கெத்து காட்டிக் கோலோச்சியது. ஆனால் கடந்த இரண்டு சீசன்களாக அடி மேல் அடி. பிரதான பிளேயர்களை எல்லாம் கைவிட்டு புதிய டீம் செட் செய்து, அவர்கள் சொதப்பி என தள்ளாடியது. அந்த வெறிதானோ என்னவோ இந்தமுறை ஒரு முரட்டு டிபென்ஸ் டீமை அசெம்பிள் செய்திருக்கிறது அணி நிர்வாகம்.

போன சீசனில் நூலிழையில் ப்ளே ஆப் வாய்ப்பைத் தவறவிட்டது யூ மும்பா. மற்ற விளையாட்டுகளைவிட கபடியில் மேட்ச் டிரா ஆகும் வாய்ப்புகள் அதிகம். அப்படி டிரா ஆகும்பட்சத்தில் தலா மூன்று புள்ளிகள் இரு அணிகளுக்கும். அப்படி மேட்ச்களை டிரா செய்தே புள்ளிப்பட்டியலில் முன்னேறிய அணிகள் இருக்கின்றன. ஆனால் கடந்த முறை ஒருமுறை கூட டிரா ரிசல்ட் வந்திடாத இரு அணிகளுள் ஒன்று மும்பை. மூன்று போட்டிகளில் வெறும் இரண்டே புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி. அப்போதே பிளேயர்கள் கடைசி நொடிவரை டிராவுக்காக போராடாமல் சீக்கிரமே விட்டுக்கொடுத்துவிடுகிறார்கள் எனக் குரல்கள் எழுந்தன. அந்தக் குறையை போக்கும்வகையிலோ என்னமோ சீனியர் பிளேயர்களாக பார்த்து பார்த்து ஏலத்தில் வாங்கியது அணி நிர்வாகம். பி.கே.எல்லில் அதிக வெற்றிகள் பெற்ற அணி, அதிக வெற்றி சதவீதம் உள்ள அணி என்கிற பெருமையை ஏற்கனவே வைத்திருக்கும் யூ மும்பா இரண்டாவது முறை சாம்பியன் என்கிற கூடுதல் பட்டத்தையும் ஏற்கக் காத்திருக்கிறது.

பலம்

அணியின் பலம் வாய்ந்த டிபென்ஸ்தான். நான்கு டிபென்ஸ் பொசிஷன்களுக்கும் கிரிஷ் மாருதி எர்னாக், ரிங்கு நர்வால், மகேந்தர் சிங், சுரேந்தர் சிங் என நான்கு சூப்பர் பிளேயர்களைக் களமிறக்கக் காத்திருக்கிறது யூ மும்பா. இவர்கள் நால்வரும் மொத்தமாய் இதுவரை பெற்றிருக்கும் டிபென்ஸ் புள்ளிகள் ஆயிரத்திற்கும் அதிகம். 12 அணிகளில் மிக பலம் வாய்ந்த டிபென்ஸ் இருப்பது யூ மும்பாவிடம்தான். இந்த நால்வரே மும்பை அணியின் ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யும் காரணிகளாக இருப்பார்கள்.

பலவீனம்

rink narwal
Telugu titans | இந்த முறையாவது ப்ளே ஆஃப் போகுமா டைட்டன்ஸ்..?

டிபென்ஸ் ஸ்ட்ராங்காக இருந்தாலும் ரெய்டிங் டிபார்ட்மென்ட்டில் ஒரு நிச்சயத்தன்மை இருப்பதுதான் உறுத்துகிறது. குமன் சிங்தான் கடந்த சீசனிலும் இந்த சீசனிலும் பிரதான ரைடர். ஆனால் அவரால் 18 போட்டிகளில் 137 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடிந்தது. இரண்டாவது ரெய்டராக களமிறங்கப் போகும் ஜெய் பகவானின் கடந்த சீசன் சராசரியும் 4.3 தான். மொத்தமாய் டிபென்ஸை நம்பியிருக்கப்போகும் அணியாக இந்த சீசனில் யூ மும்பா தெரிவதுதான் சிக்கல். கிரிஷ் எர்னாக், சுரேந்தர் சிங் இருவரும் ஒரு சீசனில் நன்றாக ஆடினால் அடுத்த சீசனில் ஃபார்ம் அவுட் ஆவார்கள். அவர்களின் சீரற்ற ஃபார்மும் சிக்கலாய் எழலாம்.

கவனிக்கப்பட வேண்டிய பிளேயர்

rink narwal
PKL | இந்த குஜராத்தும் கோப்பை வெல்லுமா..?

ஆசிய சாம்பியன்ஷிப் கபடியின்போது எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்த ஈரானிய பிளேயர் அலிரேஸா மிர்ஸாயேன் தன் முதல் பி.கே.எல் தொடரில் மும்பைக்காக களமிறங்குகிறார். அணியில் ஏற்கெனவே ஈரானிய சீனியர் ஹைதரலி அக்ரமி இருப்பதால் தொடக்கத்தில் சில போட்டிகளில் இவர் களமிறங்குவது சந்தேகம்தான். ஆனால் ரெய்டிங் வீக்காக இருக்கும் யூ மும்பாவிற்கு இவரின் வரவு பலம் என்பதில் சந்தேகமே இல்லை. அணிக்கும் ஈரானின் மஸான்தரனிதான் கோச் என்பதால் இவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கும் என நம்பலாம்.

ப்ளேயிங் செவன்

இந்த ப்ளேயிங் செவனில் அனேகமாய் மூன்றாவது ரைடராய் களமிறங்குவது அக்ரமியா அலிரேஸாவா என்பதில்தான் மாற்றங்கள் இருக்கும். மற்ற ஆறு பொசிஷன்களிலும் மாற்றங்கள் இருக்காது.

குமன் சிங் (ரைடர்), ஜெய் பகவான் (ரைடர்), ஹைதரலி அக்ரமி / அலிரேஸா (ரைடர்), மகேந்தர் சிங் (லெப்ட் கவர்), சுரேந்தர் சிங் (கேப்டன் - ரைட் கவர்), கிரிஷ் எர்னாக் (லெப்ட் கார்னர்), ரிங்கு (ரைட் கார்னர்)

mahendar singh
mahendar singhU MUMBA

ஒருபக்கம் ஐ.பி.எல் ட்ரேடிங்கில் மும்பை அணி பலம் வாய்ந்த அணியாக மாறிக்கொண்டிருக்க, மறுபக்கம் அந்த மும்பை பெருமையை தக்க வைக்கக் காத்திருக்கிறது யூ மும்பா. சீனியர்களின் ஃபார்மும் ஜூனியர்களின் ரெய்டிங் பங்களிப்பும் அந்தக் கோப்பைக் கனவை நனவாக்க மிக முக்கியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com