fazel atrachali
fazel atrachaliGujarat Giants

PKL | இந்த குஜராத்தும் கோப்பை வெல்லுமா..?

பைனல் வரை சென்று கோப்பையை பறிகொடுத்தாலும் ஒருகட்டத்தில் வென்றேவிட்டது குஜராத் அணி. அதே வாய்ப்பு பி.கே.எல்லின் இந்த குஜராத் அணிக்கும் கிடைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

ஐ.பி.எல்லுக்கு அடுத்தபடியாய் இந்தியாவில் அதிகம் பேரால் காணப்படும் லீக் பி.கே.எல். ப்ரோ கபடி லீக். 40 நிமிடங்களில் விறுவிறுவென நகரும் ஆட்டம், ஒருநாளைக்கு இரண்டிலிருந்து மூன்று போட்டிகள், ஹோம் - அவே பார்மெட், முக்கிய நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 12 அணிகள் என கமர்ஷியல் பார்முலாவில் கச்சிதமாய் அடங்குவதால் இந்த லீக்கிற்கு எக்கச்சக்க ரசிகர்கள். அதன் பத்தாவது சீசன் வரும் வார இறுதியில் தொடங்குகிறது. பொதுவாகவே கிரிக்கெட்டைத் தவிர்த்து பிற விளையாட்டுகளுக்கு ஊடக வெளியில் கவனம் கிடைப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு. அதைக் களையும்வகையிலேயே இந்த முன்னெடுப்பு. அடுத்த சில தினங்கள் நீங்கள் பார்க்கப்போவது இந்த சீசனில் பி.கே.எல் ஆடும் அணிகளைப் பற்றிய விலாவாரியான முன்னோட்டம்.

முதலாவது அணி குஜராத் ஜெயன்ட்ஸ். போன சீசனுக்கு முன்புவரை குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ். முதல் நான்கு சீசன்கள் வரை பி.கே.எல்லில் எட்டு அணிகள்தான். ஐந்தாவது சீசனில்தான் தமிழ் தலைவாஸ் உள்பட நான்கு புதிய அணிகளை இணைத்தார்கள். அப்படி உள்ளே வந்த அணிதான் குஜராத். வந்த வேகத்திலேயே பைனல்ஸ் வரை முன்னேறி பாட்னாவிடம் வெற்றியை பறிகொடுத்தது. அடுத்த சீசனிலும் இரண்டாமிடம். அதன்பின் தடுமாற்றம்தான். இப்படி வெற்றிக்கு அருகில் போய் தோற்றுக்கொண்டே இருந்ததாலோ என்னவோ பெயரிலிருந்த அதிர்ஷ்டத்தைத் தூக்கிவிட்டு குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகிவிட்டார்கள். போன சீசனின் மத்தியில் தொடர்ந்து தோற்றதால் லீக் போட்டிகள் முடிவில் எட்டாவது இடத்தையே பிடித்த குஜராத் இந்த சீசனில் நழுவிக்கொண்டே இருக்கும் வெற்றியை எப்படியாவது கைபற்றிவிட வேண்டும் என்கிற முடிவோடு களமிறங்குகிறது.

அந்த வெறியும் முனைப்பும் ஏலத்தின்போதே தெரிந்தது. ஈரானின் ஸ்டார் டிபெண்டராக ஃபசல் அட்ரச்சலியை 1.60 கோடி கொடுத்து அணியில் எடுத்தார்கள். அனேகமாய் அவரே கேப்டன். கூடவே டிபெண்டர்கள், ஆல்ரவுண்டர்களையும் தேடித் தேடி வாங்கினார்கள். ஏலத்திற்கு முன்னதாய் சீனியர் வீரர்கள் அனைவரையும் கழற்றிவிட்டுவிட்டு கிட்டத்தட்ட புதிதாய் டீமை கட்டமைத்திருக்கும் அணி நிர்வாகத்தின் திட்டம் பலிக்குமா?

பலம்

சந்தேகமே இல்லாமல் ஃபசல் அட்ரச்சலிதான். பி.கே.எல்லின் பெஸ்ட் டிபெண்டர். லெப்ட் கார்னரில் ஆள் நின்றால் அந்த ஏரியாப்பக்கமே யாரும் கால் வைக்க முடியாது. நல்ல கேப்டனும் கூட. மும்பை அணியை ஒருமுறை அரையிறுதி வரை அழைத்துச்சென்றவர். இவரின் அனுபவம் அணிக்கு நிச்சயம் கைகொடுக்கும். ரைட் கார்னரிலும் அனுபவம் வாய்ந்த சோம்பீர் இருப்பதால் எதிரணி ரெய்டர்கள் தயங்கித் தயங்கித்தான் இவர்களை நெருங்குவார்கள்.

ரோஹித் குலியா, முகமது நபிபக்ஷ், விகாஸ் ஜக்லான் என அணியில் ஆல்ரவுண்டர்களுக்கும் பஞ்சமில்லை. சூழ்நிலைக்கேற்றபடி காம்பினேஷன்களை மாற்ற ஏகப்பட்ட ஆப்ஷன்கள் அணி நிர்வாகத்திற்கு இருக்கிறது.

Ram meher Singh
Ram meher SinghGujarat Giants

கடந்த சீசனின் கோச் ராம் மெஹர் சிங் தான் இந்த சீசனுக்கும். பாட்னா பைரேட்ஸ் அணியை கோப்பை அடிக்க வைத்த கோச். இவரின் ஆன் பீல்ட் ஆலோசனைகள் அணிக்கு மிகப்பெரிய பலம்.

பலவீனம்

அணியின் பிரதான ரெய்டர்களாக ப்ரதீக் தஹியாவும் ராகேஷும் ஆடுவார்கள். இருவரும் கடந்த சீசனில் பிரமாதமாக ஆடியிருந்தாலும் இவர்களின் அனுபவமின்மை இக்கட்டான சூழ்நிலைகளில் அணிக்கு பலவீனமாகலாம். கவர் பொசிஷனில் ஆடக்கூடிய அர்கம் ஷேக்கும் சவுரவ் குலியாவும் நல்ல பிளேயர்கள் என்றாலும் இவர்களின் பி.கே.எல் அனுபவமும் மிகக்குறைவே. ப்ளேயிங் செவனில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் அனுபவம் குறைந்த வீரர்களைக் கொண்டிருப்பது ப்ளே ஆப் நெருக்கத்தில் பிரஷரை உருவாக்கலாம்.

கவனிக்கப்பட வேண்டிய ப்ளேயர்

parteek dahiya
parteek dahiya

ப்ரதீக் தஹியா : ஆடிய முதல் சீசனிலேயே 19 போட்டிகளில் 183 புள்ளிகள். அதில் 11 'சூப்பர் டென்'கள். இவரின் மீது நம்பிக்கை வைத்தே ஏலத்தில் முழுக்க முழுக்க டிபென்டர்களை வாங்கிக்கொண்டிருந்தது அணி நிர்வாகம். இந்த பிரதான ரெய்டர் போன சீசனின் ஃபார்மை தக்கவைக்கும்பட்சத்தில் ஸ்கோர்போர்ட்டில் புள்ளிகள் பறக்கும்.

ப்ளேயிங் செவன்

அனேகமாய் இந்த ஏழு பேரே தொடக்க ஏழு வீரர்களாய் களமிறங்குவார்கள்.

ப்ரதீக் தஹியா (ரைடர்), ராகேஷ் (ரைடர்) , ரோஹித் குலியா (ஆல்ரவுண்டர்), அர்கம் ஷேக் (லெப்ட் கவர்), சவுரவ் குலியா (ரைட் கவர்), பசல் அட்ரச்சலி (கேப்டன் - லெப்ட் கார்னர்), சோம்பீர் (ரைட் கார்னர்)

ஐ.பி.எல்லில் ஆரம்பகால சீசன்களில் இதேபோல பைனல் வரை சென்று கோப்பையை பறிகொடுத்தாலும் ஒருகட்டத்தில் வென்றேவிட்டது குஜராத் அணி. அதே வாய்ப்பு பி.கே.எல்லின் இந்த குஜராத் அணிக்கும் கிடைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com