மல்யுத்தம் பிரச்னைகள்
மல்யுத்தம் பிரச்னைகள்ட்விட்டர்

மல்யுத்தம்: தொடரும் பிரச்னைகள்.. திடீரென கலைத்த மத்திய அரசு.. குற்றஞ்சாட்டும் பிரியங்கா காந்தி!

“குற்றம்சாட்டப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்காக மல்யுத்த சம்மேளனம் தொடர்பாக பாஜக பொய் செய்தியைப் பரப்புகிறது” என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு: பிரிஜ் பூஷண் மீது விசாரணை

பாஜக எம்.பியும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருவரான பிரிஜ் பூஷண் சிங் மீது, இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். அவர்மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சக வீராங்கனைகளோடு டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பிரிஜ் பூஷண் மீது வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

மல்யுத்த வீரர்கள், பிரிஜ் பூஷன் சரண் சிங்
மல்யுத்த வீரர்கள், பிரிஜ் பூஷன் சரண் சிங் twitter page

இதனிடையே முன்னாள் நிர்வாகிகள் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குப் பின், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உயர்பதவிகளுக்கான தேர்தலை நடத்தத் தவறியதற்காக இந்திய மல்யுத்த கூட்டமைப்பினை, சர்வதேச மல்யுத்த நிர்வாக அமைப்பான United World Wrestling இடைநீக்கம் செய்தது.

இதைத்தொடர்ந்து, நீண்ட நாட்கள் கழித்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த டிச.21ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. தேர்தலில் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் வீரங்கனைகளால் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டவருமான பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய உதவியாளரான சஞ்சய் சிங் வெற்றி பெற்றார்.

மல்யுத்தம் பிரச்னைகள்
வீராங்கனை அனிதா ஷியோரன் தோல்வி.. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக சஞ்சய் சிங் தேர்வு!

மல்யுத்த கூட்டமைப்புத் தேர்தல்: சஞ்சய் சிங் தேர்வுக்கு எதிர்ப்பு!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வான சஞ்சய் சிங், ”15 வயதுக்கு உட்பட்ட மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் உத்தரப்பிரதேசத்தின் கோண்டாவில் உள்ள நந்தினி நகரில் நடைபெறும்” என்ற அறிவிப்பை வெளிட்டார்.

பிரிஜ் பூஷன் சரண் சிங், சஞ்சய் சிங்
பிரிஜ் பூஷன் சரண் சிங், சஞ்சய் சிங்pt web

அதேநேரத்தில், சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்தை விட்டுவிலகுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திரும்ப ஒப்படைப்பதாக கூறி, கடந்த டிசம். 22ஆம் தேதி விருதை பிரதமர் இல்லத்தின் வாசலில் வைத்துவிட்டுச் சென்றார். இவர்களைத் தொடர்ந்து தங்களுடைய விருதுகளைத் திரும்ப ஒப்படைப்பதாக சிலர் அறிவித்தனர். மேலும், சிலர் விளையாட்டில் இருந்து விலகுவதாகக் கூறி தொடர்ந்து மத்திய அரசுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

மல்யுத்தம் பிரச்னைகள்
சஞ்சய் சிங் மல்யுத்த தலைவரானதற்கு எதிர்ப்பு! ”பத்மஸ்ரீ” விருதை திருப்பியளிக்கும் பஜ்ரங் புனியா!

பிரியங்கா காந்தியைச் சந்தித்த மல்யுத்த வீரர்கள்!

இதற்கிடையே சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியைச் சந்தித்தனர். இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் விஷயத்தில் நிலவும் கடும் அதிருப்தி காரணமாக, அந்த நிர்வாக அமைப்பை இடைநீக்கம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த இடைநீக்கம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனிடையே இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க தற்காலிக அமைப்பை உருவாக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்தினை (ஐஒஏ) மத்திய விளையாட்டுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய அரசின் இடைநீக்க முடிவினை வரவேற்றுள்ள சாக்‌ஷி மாலிக், "நான் இன்னும் எழுத்துப்பூர்வமாக எதையும் பார்க்கவில்லை. புதிய தலைவர் மட்டுமா அல்லது ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. எங்களது போராட்டம் அரசாங்கத்துக்கு எதிரானது இல்லை. எங்களது போராட்டம் மல்யுத்த வீராங்கனைகளுக்கானது. நான் ஓய்வை அறிவித்துள்ளேன். ஆனால் வரும் வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிக்க: ரூ.700க்கு Thar car வாங்க ஆசைப்பட்ட சிறுவன்.. ருசிகர பதிலளித்த ஆனந்த் மகேந்திரா!

பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

இந்த நிலையில், “குற்றம்சாட்டப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்காக மல்யுத்த சம்மேளனம் தொடர்பாக பாஜக பொய் செய்தியைப் பரப்புகிறது” என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர், “இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட்டதாக பாஜக பொய் செய்தியைப் பரப்பி வருகிறது. சம்மேளனம் கலைக்கப்படவில்லை, அதன் செயல்பாடுகள் மட்டும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இதன்மூலம் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த முடியும்” என அதில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சிங், கூறுகையில், "நான் சரியானாவனா, இல்லையா என்பதை காலம் தீர்மானிக்கும். மல்யுத்தத்தில் இருந்து என்னை விலக்கிக்கொள்கிறேன். இப்போது என்ன செய்ய வேண்டுமோ அதை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக அமைப்பினர் செய்வார்கள். புதிய தலைவராக தேர்வாகியுள்ள சஞ்சய் சிங், எனக்கு நெருக்கமானவரே தவிர, உறவினர் இல்லை. மல்யுத்தத்துடன் தொடர்புடைய அனைவரும் எனக்கு நெருக்கமானவர்களே. மல்யுத்தத்தில் இருந்து எனது ஓய்வு டிச.21ல் இருந்து அமலுக்கு வருகிறது. இனி நான் எதிர்காலத்தை பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: ஒடிசா: தோட்டத்தில் காலிஃபிளவரைப் பறித்த தாய்... மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்த மகன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com