கோ கோ உலகக் கோப்பை 2025: முதல் சீசனிலேயே உலகக்கோப்பை வென்று மகுடம் சூடியது இந்திய மகளிர் அணி!
சர்வதேச 'கோ கோ' கூட்டமைப்பு சார்பில் முதல் முறையாக 'கோ கோ' உலக கோப்பையானது 2025-ம் ஆண்டு நடத்தப்பட்டது. கோ கோ உலகக்கோப்பையின் முதல் சீசனானது இந்தியாவில் புதுடெல்லியில் ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது.
மொத்தம் 23 நாடுகள் பங்கேற்கும் கோ கோ உலகக்கோப்பையில், 20 ஆண்கள் அணிகள் மற்றும் 19 பெண்கள் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
மொத்தமுள்ள அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று போட்டிகளில் விளையாடின. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள், காலிறுதி சுற்றுக்கு முன்னேறும். அதனைத்தொடர்ந்து காலிறுதிப் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள் என நடைபெற்று இறுதிப்போட்டியானது ஜனவரி 19ம் தேதி நடக்க திட்டமிடப்பட்டது.
ஆண்கள் பிரிவில் இந்திய அணி, குழு ஏ பிரிவில் நேபாளம், பெரு, பிரேசில், பூடான் முதலிய அணிகளுடனும், பெண்கள் பிரிவில் இந்திய அணி, குழு ஏ பிரிவில் ஈரான், மலேசியா, கொரியா குடியரசு முதலிய அணிகளுடனும் இடம்பெற்றன.
இந்நிலையில் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட இந்தியா மற்றும் நேபாள அணிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவிலும் இறுதிப்போட்டியை எட்டி அசத்தின.
முதல் உலகக்கோப்பை வென்றது இந்திய மகளிர் அணி..
ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவிலும் இந்தியா vs நேபாளம் போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் முதலில் நடத்தப்பட்ட பெண்கள் இறுதிப்போட்டியில் நேபாளத்தை 78-40 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி முதல் சீசனிலேயே உலகக்கோப்பை வென்று மகுடம் சூடியுள்ளது இந்திய மகளிர் அணி.
பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதல் சுற்றிலேயே அபாரமாக செயல்பட்ட இந்திய மகளிர் அணி 34-0 என முன்னிலை பெற்றது. அதற்குபிறகு இரண்டாவது சுற்றில் கம்பேக் கொடுத்த நேபாளம் அணி 35-24 என போட்டியை நெருக்கமாக மாற்ற, இறுதிச்சுற்றில் விட்டுக்கொடுக்காத இந்திய அணி 78-40 என வென்று முதல் உலகக்கோப்பையை தட்டிச்சென்றது.
முதல் கோ-கோ உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாத இந்திய மகளிர் அணி, முதல் லீக் போட்டியில் 175-18 என தென்கொரியாவையும், இரண்டாவது போட்டியில் 100-16 என ஈரானையும், மூன்றாவது போட்டியில் 100-20 என மலேசியாவையும் வீழ்த்தி அசத்தியது.
அதனைத்தொடர்ந்து வங்கதேசத்தை 109-16 எனவும், தென்னாப்பிரிக்காவை 66-16 எனவும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி தற்போது நேபாளத்தையும் வீழ்த்தி அறிமுக உலகக்கோப்பை தொடரிலேயே கோப்பை வென்று மகுடம் சூடியுள்ளது.