கோ கோ உலகக் கோப்பை 2025: முதல் போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி!
சர்வதேச 'கோ கோ' கூட்டமைப்பு சார்பில் முதல் முறையாக 'கோ கோ' உலக கோப்பையானது 2025-ம் ஆண்டு நடத்தப்படுகிறது. கோ கோ உலகக்கோப்பையின் முதல் சீசனானது இந்தியாவில் புதுடெல்லியில் இன்று தொடங்கியது.
மொத்தம் 23 நாடுகள் பங்கேற்கும் கோ கோ உலகக்கோப்பையில், 20 ஆண்கள் அணிகள் மற்றும் 19 பெண்கள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.
மொத்தமுள்ள 20 ஆண்கள் அணிகள், 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று போட்டிகளில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள், காலிறுதி சுற்றுக்கு முன்னேறும். அதனைத்தொடர்ந்து காலிறுதி போட்டிகள், அரையிறுதி போட்டிகள் என நடைபெற்று இறுதிப்போட்டியானது ஜனவரி 19ம் தேதி நடக்கவிருக்கிறது.
ஆண்கள் பிரிவில் இந்திய அணி, குழு ஏ பிரிவில் நேபாளம், பெரு, பிரேசில், பூடான் முதலிய அணிகளுடனும், பெண்கள் பிரிவில் இந்திய அணி, குழு ஏ பிரிவில் ஈரான், மலேசியா, கொரியா குடியரசு முதலிய அணிகளுடனும் இடம்பெற்றுள்ளன.
கோ கோ உலகக்கோப்பையின் முதல் போட்டியானது தொடரை நடத்தும் இந்தியாவிற்கும், நேபாளத்திற்கும் இடையே இன்று நடைபெற்றது.
நேபாளத்தை வீழ்த்தி முதல் போட்டியில் இந்தியா வெற்றி..
கோ கோ உலகக்கோப்பையின் முதல் பதிப்பின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. புது டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் பரபரப்பான மோதலை கொண்டிருந்தன.
முதல் சீசனின் முதல் போட்டியில் வெல்வதற்கான இரண்டு அணிகளும் இறுதிவரை விட்டுக்கொடுக்காமல் போராடின. யாருக்கு வெற்றிசெல்லும் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி விறுவிறுப்பாக சென்ற போட்டியில் இந்தியா 42-37 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
நாளை நடைபெறவிருக்கும் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் கானா அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.