என்ன பெரிய பாக்ஸிங் டே டெஸ்ட்.. பொங்கல் டெஸ்ட் கிரிக்கெட் தெரியுமா!?
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாளை Boxing Day (டிசம்பர் 26) ஆக கொண்டாடும் ஆஸ்திரேலியா, அன்றைய தினம் தொடங்கும் வகையில் மெல்பர்ன் மைதானத்தில் ஏதாவது அணியுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறது.
இதைப் போல பொங்கல் திருநாளை ஒட்டி சென்னையில் இந்திய அணி விளையாடும் டெஸ்ட் போட்டி 1988 வரை நடத்தப்பட்டு வந்தது என்பது இன்றைய தலைமுறையினருக்கு முற்றிலும் புதிய தகவலாக இருக்கலாம்.
ஆனால் உங்கள் அப்பாவிடமோ தாத்தாவிடமோ கேட்டுப் பாருங்கள். அவர் கிரிக்கெட் ரசிகர் என்றால், சென்னையில் நடந்த பொங்கல் டெஸ்ட் போட்டியை அரங்குக்குச் சென்று நேரில் கண்டு களித்தவராக இருக்கலாம். அல்லது அந்தப் போட்டி, அது நடந்தபோது நிலவிய சூழல் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.
பொங்கல் டெஸ்ட்
சென்னையில் 1960 தொடங்கி 1988 வரை பொங்கல் பண்டிகையை ஒட்டி இந்திய அணி விளையாடும் சர்வதேச டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டன. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியைப் போல் இது பொங்கல் பண்டிகை நாள் அன்று தொடங்க வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படவில்லை. ஆனால் பொங்கல் பண்டிகையன்றும் போட்டி நடக்கும் வகையில் இது திட்டமிடப்பட்டது.
இடையில் சில ஆண்டுகள் நடத்தப்படாமல் போனாலும் தமிழர்களின் தொன்மையான பண்டிகையான பொங்கல் திருநாள் அன்று இந்திய கிரிக்கெட் அணியினர் சென்னையில் விளையாடி இந்த மண்ணின் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விப்பது பொதுவான வழக்கமாகக் கடைபிடிப்பக்கப்பட்டுவந்தது.
மறக்க முடியாத சாதனைகள்!
1960இல் குலாப்ராய் ராம்சந்த் தலைமையிலான இந்திய அணிக்கும் ரிச்சி பெனாட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி ஜனவரி 13 முதல் 17 வரை நடைபெற்றது. நான்கு டெஸ்ட்கள் கொண்ட இந்தத் தொடரின் கடைசிப் போட்டியில் இந்திய அணி 55 ரன்களில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.
அடுத்த ஆண்டுகளில் நடைபெற்ற பொங்கல் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றியும் தோல்வியும் மாறி மாறிக் கிடைத்தன. ஆனால் இந்தப் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் சில முக்கியமான சாதனைகளைப் படைத்தனர்.
பட்டோடியும், தோனியும்!
1961இல் பாகிஸ்தானுடனான போட்டி டிராவில் முடிந்தது. 1962இல் இங்கிலாந்துடனான போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது. அப்போது 21 வயது இளைஞராக இருந்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் நவாப் மன்சூர் அலிகான் பட்டோடி சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்குப் பங்களித்தார்.
1964இல் இங்கிலாந்துடனான போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான புதி குந்தேரன் (Budhi Kundheran) 192 ரன்களைக் குவித்தார். இதன் மூலம் அதிகபட்ச ஸ்கோர் அடித்த விக்கெட் கீப்பர் என்னும் புகழைப் பெற்றார். 2013இல் ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் எம்.எஸ்.தோனி 224 அடித்து அந்தப் புகழைத் தன் வசம் ஆக்கினார். (அதுவும் சென்னையில்தான் நிகழ்ந்தது என்பது வரலாற்றின் சுவாரசியம்!). இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சுழற்பந்துவீச்சாளர் பாபு நாட்கர்னி தொடர்ச்சியாக 21 மெய்டன் ஓவர்களை வீசினார்.
1967 மேற்கிந்தியத் தீவுகளுடனான பொங்கல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
மே.இ.தீவுகளுடன் வெற்றி!
1974-75இல் இந்தியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி 1975 ஜனவரி 11 முதல் 15 வரை சென்னையில் நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதற்கு முன்பு கொல்கத்தாவில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வென்றிருந்தது. அன்றைய கிரிக்கெட்டின் அசைக்கமுடியாத கில்லியாகத் திகழ்ந்த மே.இ.தீவுகளை தொடர்ச்சியாக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வீழ்த்தியது அதுவே முதல் முறை.
1979 ஜனவரி 12 முதல் 16 வரை சென்னையில் நடைபெற்ற பொங்கல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் குண்டப்பா விஸ்வநாத் சதம் அடித்தார். ஆறு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் மற்ற போட்டிகள் அனைத்தும் டிராவில் முடிந்தன.
முறியடிக்கப்படாத சாதனை
1988 ஜனவரி 11 முதல் 15 வரை சென்னையில் நடைபெற்ற இந்திய - மே.இ தீவுகள் அணிகளுக்கு இடையிலான பொங்கல் டெஸ்ட் போட்டியில் 255 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நரேந்திர ஹிர்வானி முதல் இன்னிங்ஸில் 18.3 ஓவர்களை வீசி 61 ரன்களுக்கு எட்டு விக்கெட்களை வீழ்த்தினார். இதுவே இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது.
தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்தியப் பந்துவீச்சாளர் என்னும் ஹிர்வானியின் சாதனை இன்று வரை முறியடிக்கப்படவில்லை.
வரலாற்றாய்வாளரின் பதிவுகள்
“சென்னையில் நடத்தப்பட்ட ’பொங்கல் டெஸ்ட்’ வழக்கமான கிரிக்கெட் போட்டியாக இருக்கவில்லை. பொங்கல் பண்டிகையின் கொண்டாட்ட மனநிலை ஒட்டுமொத்த அரங்கையும் ஆக்கிரமித்திருந்தது” என்று நினைவுகூர்ந்திருக்கிறார் சென்னை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டவரான வரலாற்று ஆய்வாளர் வி.ஸ்ரீராம்.
மேலும் இந்தியாவில் தொழில்முறையிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே அன்றைய மதராஸ் ராஜதானியில் உள்ளூர் அளவிலான போட்டிகள் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டதை ஸ்ரீராம் பதிவுசெய்துள்ளார். சென்னையில் வெயில், மழை இல்லாமல் மிதமான குளிர் நிலவும் ஜனவரி மாதம் கிரிக்கெட் போட்டிகள் நடத்த உகந்த காலமாக இருந்துள்ளது.
1916 முதல் 1952 வரை ஜனவரி மூன்றாம் வாரத்தில் சென்னையில் ஐரோப்பியர்களின் அணிக்கும் இந்தியர்களின் அணிக்கும் இடையில் 30 டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றில் 14 போட்டிகளில் இந்தியர்களும் எட்டு போட்டிகளில் ஐரோப்பியர்களும் வென்றுள்ளனர். சி.கே.நாயுடு, சி.ராமசுவாமி, எம்.ஜி.கோபாலன் உள்ளிட்ட ஆதிகால இந்திய கிரிகெட் ஜாம்பவான்கள் இந்தப் போட்டிகளில் விளையாடியுள்ளனர். சர்வதேச அளவில் தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கத் தொடங்கிய பிறகு பொங்கலை ஒட்டி சென்னையில் டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படும் வழக்கத்தை இதன் தொடர்ச்சியாகக் கருதலாம்.
மறக்கப்பட்ட மரபுகள்
டெஸ்ட் கிரிக்கெட் என்பது கிரிக்கெட்டின் பழமையான வடிவம். ஒரு சில மணி நேரங்களில் முடிந்துவிடும் டி20 போட்டிகளும் ஐபிஎல் போட்டிகளும் இன்றைய அதிவேக யுகத்துக்கு தகுந்த கிரிக்கெட் வடிவமாக மாறிவிட்டாலும் ஐந்து நாட்கள் விளையாடப்படும் டெஸ்ட் போட்டிகளுக்கான மவுசு குறையவில்லை. ஆனால் இன்று கிரிக்கெட் வீரர்கள் குறிப்பாக இந்திய அணியினர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாகத் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளை விளையாடிவருகின்றனர். எனவே டெஸ்ட் போட்டிகள் தொடர்பான சில மரபுகளை கடைபிடிப்பது சாத்தியமற்றதாகிவிட்டது.
உதாரணமாக இங்கிலாந்தில் நடத்தப்படும் டெஸ்ட் போட்டிகள் வியாழக்கிழமையும் ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் டெஸ்ட் போட்டிகள் வெள்ளிக்கிழமையும்தான் தொடங்கும் என்ற நடைமுறை இப்போது வழக்கொழிந்துவிட்டது. இதுபோல் காலமாற்றத்தில் பல வழக்கங்கள் கைவிடப்படும்.
சென்னை நகரம் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்லாமல் அந்நிய வீரர்களுக்கும் மனதுக்கு நெருக்கமானதாக உள்ளது. இங்குள்ள ரசிகர்கள் முதிர்ச்சியானவர்கள், கண்ணியமானவர்கள் என பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் உள்ளிட்ட பல வெளிநாட்டு வீரர்கள் பாராட்டியுள்ளனர். கிரிக்கெட்டுக்கும் சென்னைக்குமான மிக நீண்ட நெடிய தொடர்புக்கான முக்கிய சாட்சியமாக பொங்கல் டெஸ்ட் கடந்தகால நினைவுகளாக எஞ்சிவிட்டது வரலாற்றின் நகைமுரண்தான்.
இந்த நினைவுகளை இன்றைய தலைமுறையினருக்குக் கடத்தும் வகையில், பொங்கலையொட்டி டி20 மாதிரியான போட்டிகளை நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் யோசிக்க வேண்டும்!