U19 ஒருநாள் போட்டியில் 346* ரன்கள் அடித்த 14 வயது வீராங்கனை.. 50 ஓவரில் 563 ரன் குவிப்பு!
ஞாயிற்றுக்கிழமையான நேற்று பெங்களூருவின் ஆலூரில் நடந்த U19 மகளிர் ஒரு நாள் டிராபியில் மேகாலயா மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் மேகாலயா அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 50 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 563 ரன்கள் குவித்தது.
அபாரமாக விளையாடிய தொடக்க வீராங்கனையான 14 வயது ஐரா ஜாதவ் 157 பந்துகளில் 42 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்சர்களுடன் 220 ஸ்டிரைக்ரேட்டில் 346* ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதற்குபிறகு விளையாடிய மேகாலயா அணி வெறும் 19 ரன்களுக்கே ஆல் அவுட்டான நிலையில், மும்பை அணி 544 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்தது. இதில் 6 மேகாலயா வீரர்கள் டக் அவுட்டில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
முதல் இந்தியராக ஐரா ஜாதவ் படைத்த பிரமாண்ட சாதனை..
சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியிலிருந்து சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி மற்றும் அஜித் அகர்கர் ஆகியோரின் கால்தடங்களை பின்பற்றிவரும் 14 வயதான ஐரா ஜாதவ், 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பிரமாண்ட சாதனையை படைத்து அசத்தியுள்ளார். யூத் லிஸ்ட் ஏ போட்டிகளிலும் ஒரு இந்தியரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
ஆனால் ஒட்டுமொத்தமாக 19 வயதுக்குட்பட்டோருக்கான அதிகபட்ச ரன்கள் இல்லை. இந்த பிரிவில் படைக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்ற உலக சாதனையானது தென்னாப்பிரிக்காவின் லிசெல் லீ பெயரில் உள்ளது. அவர் 2010-ம் ஆண்டில் உள்நாட்டுப் போட்டியில் 427 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்துவருகிறது.
2025 மகளிர் ஐபிஎல் தொடரில் இல்லையென்றாலும், மலேசியாவுக்குச் செல்லும் இந்தியாவின் யு19 டி20 உலகக் கோப்பை அணிக்கான காத்திருப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.