\
erling haaland
erling haalandweb

ஹாலண்ட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. நோயால் அவதிப்படும் நார்வே அணி.. சவாலாகும் காலிறுதி!

2026 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் அச்சுறுத்தும் அணியாக விளங்கிவரும் நார்வே அணி, உடல்நலக்குறைவால் தங்களுடைய முக்கிய வீரர்களை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
Published on
Summary

2026 உலகக்கோப்பையில் டார்க் ஹார்ஸாக விளங்கும் நார்வே, பிரேசிலை வீழ்த்தி காலிறுதிக்கு வந்தாலும், அணியில் பரவும் உடல்நலக்குறைவு புதிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கோச் ஸ்டேல் சோல்பக்கன், ஜோர்ஜென் ஸ்ட்ராண்ட் லார்சன், மார்கஸ் ஹோம்கிரென் பெடர்சன் உள்ளிட்டோர் இருமல், சோர்வு காரணமாக பாதிக்கப்பட்டதாக கூறியதால், ஹாலண்ட், ஓடேகார்ட் உட்பட முக்கிய வீரர்கள் குறித்து ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

2026 ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. முதல்முறையாக 48 அணிகள் பங்கேற்ற இத்தொடரானது எதிர்ப்பார்த்ததை விட அசத்தலாகவே நடைபெற்றுவருகிறது. லீக் சுற்று முடிவில் 32 அணிகள் தகுதிபெற்ற நிலையில், ரவுண்ட் 32-ல் சிறப்பாக செயல்பட்ட 16 அணிகள் அடுத்தச்சுற்றுக்கு முன்னேறின.

FIFA 2026
FIFA 2026

இந்நிலையில் ரவுண்ட் 16 நாக் அவுட் சுற்று பரபரப்பாக நடந்துவந்த நிலையில், பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பிரேசில் மற்றும் போர்ச்சுகல் அணிகள் படுதோல்வியை சந்தித்து உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளன. சூப்பர் ஸ்டார் வீரர்களான நெய்மார் மற்றும் ரொனால்டோ இருவரும் தங்களுடைய கடைசி உலகக்கோப்பையில் கண்ணீருடன் விடைபெற்றனர்.

இந்தசூழலில் நாக் அவுட் சுற்றில் வெற்றிபெற்ற ஃபிரான்ஸ், மொராக்கோ, ஸ்பெயின், பெல்ஜியம், நார்வே, இங்கிலாந்து, அர்ஜெண்டினா, சுவிட்சர்லாந்து முதலிய 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.

erling haaland
ஒரு சகாப்தத்தின் முடிவு.. முடிவுக்கு வந்த ரொனால்டோவின் பயணம்.. இறுதிவரை நிறைவேறாத கனவு!

நார்வே அணியை அச்சுறுத்தும் உடல்நலக்குறைவு..

நடப்பு உலகக்கோப்பை தொடரில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், அச்சுறுத்தும் ஒரு அணியாக டார்க் ஹார்ஸ் டீமாக மாறியுள்ளது நார்வே அணி. குரூப் சுற்றில் ஃபிரான்ஸுக்கு அடுத்து 2வது இடத்தில் முடித்த நார்வே அணி, ரவுண்ட் 32-ல் ஐவரி கோஸ்ட்டை 2-1 என வீழ்த்தி அடுத்தச்சுற்றுக்கு முன்னேறியது.

ரவுண்ட் 16-ல் ஐந்து முறை சாம்பியன் அணியான பிரேசிலை 2-1 என தோற்கடித்த நார்வே, ஒரு அசாதாரண அணியாக மாறி காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. இத்தொடரில் நார்வேவின் நட்சத்திர நாயகனாக விளங்கும் எர்லிங் ஹாலண்ட் வெறும் 18 தொடுதலில் 7 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நார்வே அணிக்காக கடைசி 54 ஆட்டங்களில் 62 கோல்கள் அடித்து அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்.

எர்லிங் ஹாலண்ட்
எர்லிங் ஹாலண்ட்

இந்தசூழலில் காலிறுதிப்போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ள காத்திருக்கும் நார்வே அணிக்கு உடல்நலக்குறைவு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஆரம்ப போட்டிகளில் இருமிக்கொண்டிருந்த நார்வே அணியின் கோச் ஸ்டேல் சோல்பக்கன், தன்னுடைய அணியிலும் உடல்நலக்குறைவு பரவியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜோர்ஜென் ஸ்ட்ராண்ட் லார்சன் உடல்நலக்குறைவு காரணமாக தொடக்க ஆட்டங்களில் பங்கேற்காத நிலையில், மார்கஸ் ஹோம்கிரென் பெடர்சனுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருமல் உடல்சோர்வுடன் பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தை தவறவிட்டார். நாள்பட்ட பயணம், சோர்வு மற்றும் குளிரூட்டப்பட்ட அறைகளில் தங்குவது போன்ற காரணிகளால் இந்தசூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அனைவரும் ஒன்றாக இருக்கும் சூழல் இருப்பதாலும் இது ஏற்படுவதாகவும் கூறியுள்ளார்.

ஓடேகார்ட்
ஓடேகார்ட்

இந்நிலையில் இது அவர்களின் முக்கிய வீரர்களான எர்லிங் ஹாலண்ட், ஓடேகார்ட் போன்ற வீரர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. காலிறுதி சுற்றில் பலம்வாய்ந்த இங்கிலாந்தை எதிர்கொள்ளும் நார்வே அணி உடல்நலக்குறைவு என்ற மற்றொரு சவாலையும் எதிர்கொண்டுள்ளது.

erling haaland
2-0 என ஆட்டம் காட்டிய எகிப்து.. கடைசி 15 நிமிடத்தில் கம்பேக் கொடுத்த அர்ஜென்டினா! த்ரில் வெற்றி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com