FPL | இது எல்லா ஃபேன்டசிகளுக்கும் ஹெட் மாஸ்டர்..!

FPL பொறுத்தவரை ஆரம்பத்தில் உங்களுக்கு 100 மில்லியன் பவுண்ட் கொடுக்கப்படும்.
Fantasy Premier League
Fantasy Premier LeagueFantasy Premier League

FPL - புதிய சீசன் தொடங்கிவிட்டது. இது எல்லா ஃபேன்டசிகளுக்கும் ஹெட் மாஸ்டர்!

2023-24 சீசனுக்கான ஃபேன்டசி பிரீமியர் லீக் (FPL) தொடங்கிவிட்டது. கால்பந்து ரசிகர்கள் இப்போதே தங்களின் ஆராய்ச்சிகளில் இறங்கிவிட்டனர். சமூக வலைதளங்களில் இப்போது FPL பற்றிய விவாதங்கள் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. நீங்களும் இதை பல இடங்களில் கடந்து வந்திருக்கலாம், கால்பந்து பார்க்கும் உங்கள் நண்பர்கள் இதைப் பற்றிப் புலம்புவதைக் கேட்டிருக்கலாம். இந்த FPL மீது அப்படியென்ன மோகம்?! இப்போது இங்கே டிரீம் 11 போல் பல ஃபேன்டசி கேம்கள் விளையாடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதெற்கெல்லாம் விதை இந்த FPL தான்!

உலகின் எல்லா கால்பந்து தொடர்களையும் விட பிரீமியர் லீக் தான் பிரபலமாக. கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயோனல் மெஸ்ஸி இருவரும் லா லிகாவை ஆண்டுகொண்டிருந்தபோதும், ஸ்பானிஷ் கிளப்கள் சாம்பியன்ஸ் லீகில் ஒரு தசாப்தம் முழுக்க ஆதிக்கம் செலுத்தினாலும் பிரீமியர் லீக் தான் வியாபார ரீதியாக கோலோச்சியது. காரணம், தங்கள் பிராண்டிங்கை எப்போதும் மிகச் சிறப்பாக செய்திருக்கிறது. அதற்கு FPL ஒரு காரணம். ஏனெனில், எப்போதும் ரசிகர்களின் பார்வையை அது பிரீமியர் லீகிலிருந்து அகலாமல் பார்த்துக்கொண்டது.

FPL எப்போது தொடங்கப்பட்டது?

இங்கிலாந்தின் முதல் டிவிஷன், பிரீமியர் லீகாக உருப்பெற்றது 1992-93 சீசனில். ஆனால், அதற்கு ஒரு சீசன் முன்பே (1991-92) FPL அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த முதல் சீசனில் 700கும் குறைவானவர்களே அதை விளையாடினர். பிபிசி கால்பந்து நிகழ்ச்சிகளில் இதைப் பற்றி தொடர்ந்து விளம்பரப்படுத்தியில் நன்றாக பிரபலமடைந்தது FPL. இங்கிலாந்தைக் கடந்து இப்போது ஒட்டுமொத்த உலகமும் இதை விளையாடிக்கொண்டிருக்கிறது. 2022-23 சீசனில் சுமார் 1.14 கோடி பேர் FPL விளையாடியிருக்கிறார்கள்!

ஆனால், ஃபேன்டஸி இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது இல்லை. அமெரிக்காவில் 1990களுக்கும் முன்பிருந்தே ஃபேன்டசி கேம்கள் நடந்துவந்தன. பேஸ்பால், அமெரிக்கன் ஃபுட்பால் போன்ற விளையாட்டுகளில் ஃபேன்டசி மிகவும் பிரபலமாக இருந்தது. அதைத் தழுவித்தான் ஐரோப்பாவில் கால்பந்துக்கான ஃபேன்டசியை உருவாக்கினர். இத்தாலியில் 1990ம் ஆண்டே அதற்கான ஏற்பாடுகள் நடந்திருந்தன. இருந்தாலும், FPL அளவுக்கான பிரபல்யம் வேறு ஃபேன்டஸி கேம்கள் எதுவும் அடையவில்லை.

FPL எப்படி ஆடப்படுகிறது?

Fantasy Premier League
Fantasy Premier LeagueFPL

FPL பொறுத்தவரை ஆரம்பத்தில் உங்களுக்கு 100 மில்லியன் பவுண்ட் கொடுக்கப்படும். அதில் 15 வீரர்களை நீங்கள் எடுக்கவேண்டும். ஒவ்வொரு வீரருக்கும் அவரின் திறமை, முந்தைய சீசன் புள்ளிகளின் அடிப்படையில் ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக கடந்த சீசனில் 36 கோல்கள் அடித்து நொறுக்கிய எர்லிங் ஹாலண்டின் இந்த சீசன் மதிப்பு 14 பவுண்ட். மார்கஸ் ரேஷ்ஃபோர்ட் - 9 பவுண்ட். ரீஸ் ஜேம்ஸ் - 5.5 பவுண்ட். இதுபோல. இந்த சீசன் 4 பவுண்டில் இருந்து 14 பவுண்ட் வரை வீரர்களின் மதிப்பு மாறும்.

2 கோல்கீப்பர்கள், 5 டிஃபண்டர்கள், 5 மிட்ஃபீல்டர்கள், 3 ஃபார்வேர்ட்கள். அந்த 15 பேர் சீசனுக்கான வீரர்கள். அதில் ஒவ்வொரு கேம் வீக்கிற்கும் (மொத்தம் 38 கேம் வீக்குகள்) 11 வீரர்களை களமிறக்கவேண்டும். குறைந்தபட்சம் 1 கோல்கீப்பர், 3 டிஃபண்டர்கள், 2 மிட்ஃபீல்டர்கள் அணியில் இருக்கவேண்டும். மற்ற நால்வரும் சப்ஸ்டிட்யூட்களாகக் கருதப்படுவர். ஒரு கேப்டன், ஒரு துணைக் கேப்டன் தேர்வு செய்யவேண்டும். கேப்டன்கள் எடுக்கும் புள்ளிகள் இரட்டிப்பாக்கும். ஒருவேளை கேப்டன் விளையாடவில்லையென்றால், துணைக் கேப்டனின் புள்ளிகள் இரட்டிப்பாக்கும். அதேபோல், நாம் தேர்வு செய்யும் 11 பேரில் யாரேனும் ஒருவர் விளையாடாமல் இருந்தால், சப்ஸ்டிட்யூட்களில் ஒருவர் அணிக்குள் வருவார்.

ஒவ்வொரு கேம் வீக்கிலும் ஒரு டிரான்ஸ்ஃபர் செய்ய அனுமதிக்கப்படும். அதற்கு மேல் செய்யும் ஒவ்வொரு டிரான்ஸ்ஃபருக்கும் 4 புள்ளிகள் குறைக்கப்படும். ஒரு அணியிலிருந்து அதிகபட்சம் 3 வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும். அதுபோக இன்னும் சில Chipகள் உண்டு. Wildcard மூலம் மொத்த அணியையும் மாற்றிக்கொள்ளலாம். ஒரு சீசனில் 2 முறை வைல்ட்கார்ட் பயன்படுத்தலாம். Free Hit பயன்படுத்தியும் அணியை முழுதாக மாற்றலாம். ஆனால், அந்த கேம் வீக்குக்கான அணியாக மட்டுமே இருக்கும். அடுத்த முறை பழைய அணியே ரீசெட் ஆகிவிடும். பெஞ்ச் பூஸ்ட் பயன்படுத்தினால், அந்த ஒரு கேம் வீக்கில் 15 வீரர்களின் புள்ளிகளும் அணியில் சேரும். டிரிபிள் கேப்டன் ஆப்ஷன், அந்த ஒரு கேம் வீக்கில் கேப்டனின் புள்ளிகளை மும்மடங்காக்கும். இந்த மூன்று chipகளையும் சீசனில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.

புள்ளிகளைப் பொறுத்தவரை, கோல், அசிஸ்ட், கிளீன் ஷீட்களுக்கு வீரர்களின் பொசிஷனுக்கு ஏற்றவாறு புள்ளிகள் தரப்படும். மஞ்சள் அட்டை, சிவப்பு அட்டை பெற்றாலோ, பெனால்டியை தவறவிட்டாலோ புள்ளிகள் குறையும். வீரர்களின் செயல்பாட்டுக்கு ஏற்ப போனஸ் புள்ளிகளும் உண்டு.

அனைத்தையும் விட ஸ்பெஷல் என்னவென்றால், ஒரு வீரரின் மதிப்பு, அவர்களின் செயல்பாட்டுக்கு ஏற்ப, நெட் டிரான்ஸ்ஃபர்களுக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். ஒருவேளை இந்த சீசனில் 9 பவுண்டில் தொடங்கும் ரேஷ்ஃபோர்ட் முதல் போட்டியிலேயே 2 கோல்கள் அடித்தால், அவருக்கான டிமாண்ட் அதிகமாகும். நிறையப் பேர் உடனே அவரை தங்கள் அடுத்த வாரத்துக்கான அணிக்குள் கொண்டுவருவார்கள். அப்போது அவரின் மதிப்பு 9.1 பவுண்ட் ஆகும். இன்னும் அதிக டிரான்ஸ்ஃபர்கள் என்றால் 9.2 கூட ஆகலாம். ஹாலண்ட் இந்த சீசனில் 10 கோல்கள் கூட அடிக்கவில்லையெனில், அவரது மதிப்பு சீசன் முடிவில் 12 பவுண்ட் வரை இறங்கலாம். இந்த மதிப்பு மாற்றம்தான் FPLஐ இன்னும் ஸ்பெஷலாக்குகிறது.

Fantasy Premier League
ஃபுட்பால் சூப்பர் பவராக மாறுகிறதா சவுதி அரேபியா!

ஒவ்வொரு சீசனில் எடுக்கும் புள்ளிகள் கூட்டப்பட்டு ஒட்டுமொத்த ரேங்க் தெரியும். ஒவ்வொரு வாரமும் அந்த ரேங்க் முன்னேறவேண்டும் என்பதுதான் இதை விளையாடுபவர்களின் குறியாக இருக்கும். அதுபோக, பல லீகுகள் அதில் விளையாட முடியும். நீங்கள் ஆதரிக்கும் அணிக்கு ஒரு லீக், உங்கள் நாட்டின் லீக்... இப்படி பல. ஏன் நாம் கூட ஒரு லீக் ஆரம்பித்து நம் நண்பர்களை அதில் இணைத்து அவர்களோடு போட்டியிட முடியும். ஒரு கட்டத்துக்கு மேல் 'கப்' போட்டிகள் வேறு தொடங்கும். நேருக்கு நேர் ஒரு FPL பிளேயரோடு மோதவேண்டும். இந்த வாரம் யார் அதிக புள்ளிகள் எடுக்கிறார்களோ, அவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள். அடுத்த வாரம் வேறொருவரும் மோதவேண்டும். இறுதியில் ஒரு வெற்றியாளர். இதிலும் பல கப் போட்டிகள் உண்டு.

இப்படி பல சுவாரஸ்யமான விஷயங்கள் இருப்பதுதான் மற்ற ஃபேன்டஸி கேம்களை விட FPL பிரபலமாக இருப்பதற்கான காரணம். இங்கே பண முதலீடு எதுவுமே இல்லை. ஆனால், ஒரு உண்மையான கால்பந்து கிளப்பின் மேனெஜர் அளவுக்கு சிந்திக்கவேண்டியிருப்பதால், வீரர்கள் தங்களை இந்த கேமோடும், கால்பந்தோடும் இணைத்துக்கொள்கிறார்கள். அதனால்தான் இது பற்றி அவ்வளவு விவாதங்கள். அதனால்தான் இது வெற்றியும் பெறுகிறது. பிரீமியர் லீகையும் பிரபலமாகவே வைத்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com