ஃபுட்பால் சூப்பர் பவராக மாறுகிறதா சவுதி அரேபியா!

ஒருவேளை சீனாவின் கால்பந்து புரட்சி முயற்சியைப் போல் இது தோல்வியடைந்து விடலாம் என சிலர் நினைக்கலாம். ஆனால், சவுதி அணிகள் ஜாம்பவான்கள், இளம் வீரர்கள் என சமமாக முதலீடு செய்துகொண்டிருக்கின்றன.
Football
FootballImage by Phillip Kofler from Pixabay

கால்பந்து உலகில் பெரும் சக்தியாக உருவெடுக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறது சவுதி அரேபியா. 2023-24 கால்பந்து சீசனுக்கு முன்பாக, கரிம் பென்சிமா, என்கோலோ கான்டே போன்ற பல முன்னணி ஐரோப்பிய வீரர்களை சில சவுதி கிளப்கள் ஒப்பந்தம் செய்திருக்கின்றன. இன்னும் ஒருசில வீரர்களை இழுக்கும் முயற்சிகளுக்கும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது!

Karim Benzema
Karim BenzemaAP

கால்பந்தைப் பொறுத்தவரை வீரர்கள் முதல், ரசிகர்கள் வரை அனைவரும் ரசிப்பது ஐரோப்பிய கால்பந்தைத் தான். உலகின் பிரசித்தி பெற்ற கிளப்கள் ஐரோப்பாவையே மையம் கொண்டிருக்கின்றன. சர்வதேச அரங்கில் மிகப் பெரிய அணிகளாக இருந்தாலும் பிரேசிலிலோ அர்ஜென்டினாவிலோ பெரிய அளவு பிரபலமான கிளப்கள் ஏதுமில்லை. மெஸ்ஸியாக இருந்தாலும், நெய்மராக இருந்தாலும் கூட ஐரோப்பாவில் விளையாடுவதே அவர்களின் கனவாக இருக்கும். மற்ற கண்டங்களிலும் தொழில்ரீதியான கால்பந்து நடந்துவந்தாலும், அந்த தொடர்களால் பிரீமியர் லீக், லா லிகா போல் பிரபலம் அடைய முடியவில்லை.

பெரிய வீரர்கள், பெரிய கிளப்கள் இருப்பதால் ஐரோப்பிய கால்பந்து ஒரு மிகப் பெரிய பிசினஸாக இருக்கிறது. ஒட்டுமொத்த உலகமும் ரசிக்கும் விளையாட்டாக கால்பந்து இருப்பதால், அதைத் தங்கள் நாட்டில் பிரபலப்படுத்த பல நாடுகளும் முயற்சி செய்தன. 10 ஆண்டுகளுக்கு முன்பாக சீனா ஒரு மிகப் பெரிய முன்னெடுப்பை எடுத்தது. சைனீஸ் சூப்பர் லீக் தொடரை பிரபலப்படுத்த முடிவெடுத்து பெரும் முதலீடு செய்யப்பட்டது. சீன கிளப்கள் ஆஸ்கர், ஹல்க், ரமிரஸ் போன்ற பிரபலமான நட்சத்திர வீரர்களை பெரும் தொகை கொடுத்து வாங்கின. அது சில காலம் தலைப்புச் செய்தியாய் இருந்தது. ஆனால், அதன்பிறகு அதை சீன கிளப்களால் தொடர முடியவில்லை. அந்த முயற்சி தோல்வியைத் தழுவியது.

சீனாவுக்குப் பிறகு கால்பந்தை பயன்படுத்தும் வித்தையை மத்திய கிழக்கு நாடுகள் தொடங்கின. தங்கள் நாட்டை உலக வரைபடத்தில் ஜொலிக்க வைக்க, பல்வேறு ஊழல்கள் செய்து ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பையை தங்கள் நாட்டுக்குக் கொண்டு வந்தது கத்தார். அதுமட்டுமல்லாமல், மான்செஸ்டர் சிட்டி, பி.எஸ்.ஜி போன்ற பிரபலமான அணிகளையும் கத்தாரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் வாங்கினார்கள்.

கத்தாருக்கு அடுத்ததாக சவுதி அரேபியா அந்தப் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. சவுதி அரேபியாவின் PIF (Public Investment Fund - சவுதி இளவரசர் கட்டுப்பாட்டில் இருக்கும் பொது முதலீட்டு நிதி. இதன் மதிப்பு சுமார் 650 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 53 லட்சம் கோடி ரூபாய்) தலைமையிலான ஒரு குழு பிரீமியர் லீகை சேர்ந்த நியூகாசில் யுனைடட் அணியை வாங்கியது. பல பிரச்னைகளுக்கு மத்தியில் அந்தப் பரிவர்த்தனை நடந்த நிலையில், சவுதி அரேபிய அரசு கிளப்பின் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என்ற கட்டுப்பாட்டோடு அதற்கு பிரீமியர் லீக் ஒத்துக்கொண்டது. ஆனால், கடந்த 6 மாதங்களில் தான் மிகப் பெரிய பாய்ச்சலை காட்டியிருக்கிறது சவுதி!

Cristiano Ronaldo
Cristiano RonaldoAP

கடந்த ஜனவரி மாதம் கால்பந்து உலகின் மிகப் பெரிய பெயரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை சவுதி அரேபியாவின் அல் நசர் கால்பந்து கிளப் ஒப்பந்தம் செய்து மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. அவருக்கு ஆண்டு ஊதியமாக சுமார் 220 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 1800 கோடி ரூபாய்) என்ற நினைத்துப் பார்க்க முடியாத தொகை கொடுக்கப்படப்போவதாக தெரிவிக்கப்பட்டது. உலகிலேயே அதிக சமூக வலைதள ஃபாலோயர்கள் வைத்திருக்கும் ஒரு பிரபலம் சவுதியை நோக்கிப் படையெடுக்கவும், மொத்த உலகின் பார்வையும் சவுதி கால்பந்தின் மீது திரும்பியது. ஆனால், அதோடு சவுதி கிளப்கள் நின்றுவிடவில்லை.

2022-23 கால்பந்து சீசன் முடிந்ததும் இன்னொரு சூப்பர் ஸ்டாரான லியோனல் மெஸ்ஸிக்கும் வலை விரிக்கப்பட்டது. ரொனால்டோவுக்கு கொடுக்கப்பட்டதைவிட இரு மடங்கு ஊதியம் கொடுக்கப்படலாம் என்று பேசப்பட்டாலும், அவர் அமெரிக்காவின் இன்டர் மியாமி கிளப்பை தேர்வு செய்தார். இருந்தாலும், ரொனால்டோவின் முன்னாள் டீம் மேட் கரிம் பென்சாமை இழுத்துவிட்டது அல் இத்திஹாத் அணி. அவர் ஆண்டுக்கு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 900 கோடி ரூபாய்) பெறுவார். அவரை மட்டுமல்லாது பிரான்ஸின் உலகக் கோப்பை வின்னர் என்கோலோ கான்டேவையும் ஒப்பந்தம் செய்திருக்கிறது அந்த அணி. மற்றொரு சவுதி அணியான அல் ஹிலால், கலிடு கூலிபாலி, ரூபன் நெவஸ் ஆகியோரை பெரும் தொகைக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது. சாம்பியன்ஸ் லீக் தொடரை வென்ற கோல்கீப்பர் எடுவார்ட் மெண்டியை அல் ஆலி அணி ஒப்பந்தம் செய்திருக்கிறது.

இந்த நான்கு கிளப்களின் 75 சதவிகித பங்குகளை PIF வைத்திருப்பதால் தான் இப்படி எண்ணெயாய் காசை செலவு செய்து அந்த அணிகள் வீரர்களை ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கின்றன. இதுவரை வாங்கிய வீரர்கள் மட்டுமல்லாது, மார்செலோ புரோசோவிச், ஹகிம் ஜியெச், ஃபிர்மினோ, வில்ஃப்ரைட் சாஹா என பல வீரர்களையும் ஒப்பந்தம் செய்யும் முயற்சிகள் நடந்துவருகின்றன. வீரர்கள் மட்டுமல்லாது பிரபல மேனேஜர்களை ஒப்பந்தம் செய்யவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 32 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ரோமாவின் ஜோஸே மொரினியோ நிராகரித்ததாக சமீபத்தில் செய்திகள் வந்திருக்கின்றன. வீரர்கள், மேனேஜர்கள் என சவுதியின் வேட்டை நிற்காமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது!

ஒருவேளை சீனாவின் கால்பந்து புரட்சி முயற்சியைப் போல் இது தோல்வியடைந்து விடலாம் என சிலர் நினைக்கலாம். ஆனால், சவுதி அணிகள் ஜாம்பவான்கள், இளம் வீரர்கள் என சமமாக முதலீடு செய்துகொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அல்ல அல்ல குறையாமல் பணம் கொழிக்கப்போகும் PIF பக்கபலமாக இருக்கப்போவதால், இது அடுத்தடுத்த டிரான்ஸ்ஃபர் விண்டோக்களிலும் தொடரும் என்று கணிக்கப்படுகிறது. ஐரோப்பிய கால்பந்தின் உயரம் அளவுக்கு இல்லையென்றாலும், ஓரளவு நல்ல முன்னேற்றத்தையும் கவனத்தையும் சவுதி கால்பந்து பெற்றுவிடும். ஒளிபரப்பில் மட்டும் சரியான திட்டங்கள் இருந்தால், நிச்சயம் சவுதி கால்பந்தை அடுத்த கட்டத்துக்கு சில ஆண்டுகளில் எடுத்துச் செல்ல முடியும்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com