சொந்த நாட்டிலேயே அவமரியாதை.. ஓய்வை அறிவித்த ஜாம்பவான் ரொனால்டோ! உலகம் பார்க்காத கதை!
லியோனல் மெஸ்ஸிக்கு சொந்த அணியிடமிருந்து என்னவெல்லாம் கிடைத்ததோ அது கடைசிவரை ரொனால்டோவுக்கு கிடைக்கவில்லை என்பது ஒவ்வொரு ரொனால்டோ ரசிகனின் ஆதங்கமாகவே இருக்கிறது.
சொந்த நாட்டின் அணியிலேயே மரியாதை கிடைக்காதபோது, ரசிகர்கள் எது நடக்கக்கூடாது என நினைத்தார்களே அந்த அறிவிப்பு வந்துவிட்டது. தங்களுடைய ஆதர்ச நாயகனும், கால்பந்து ஜாம்பவானுமான ரொனால்டோ சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வை அறிவித்துவிட்டார்.. சொந்தமண்ணில் நடக்கவிருக்கும் கால்பந்து உலகக்கோப்பையில் கடைசியாக பங்கேற்பார் என்ற ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகள் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. போர்ச்சுக்கல் பயிற்சியாளர் ஜீசஸ் உடனான மோதலுக்கு பிறகு இந்த ஓய்வு அறிவிப்பு வந்துள்ளது.
100 ஆண்டுக்கு பின் முதல் கோப்பை!
ரொனால்டோ.. ரொனால்டோ என்ற பெயரே ஒரு சகாப்தம் தான்.. மெஸ்ஸியை போல மரடோனா கட்டமைத்த பாதையை பின்பற்றி, லெகஸியை பின்தொடர்ந்து வந்தவர் அல்ல கிறிஸ்டியானோ ரொனால்டோ.. அவருக்கு முன்னதாக மிகப்பெரிய சவால்கள் இருந்தன.. தன் நாட்டிற்கான தனி சகாப்தத்தை உருவாக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. 1960களில் கொடிகட்டி பறந்த போர்ச்சுக்கல்லின் மாபெரும் வீரர் யூசிபியோவால் (Eusébio) கூட ஒரு மேஜர் டிராபியை வெல்லமுடியவில்லை. லூயிஸ் ஃபிகோ (Luís Figo), ரூய் கோஸ்டா (Rui Costa) போன்ற சிறந்த வீரர்கள் அடுத்தடுத்து வந்தாலும், வரலாற்றையே திருப்பக்கூடிய ஒரு வீரனை அதுவரை போர்ச்சுக்கல் பார்க்கவில்லை.
2003ஆம் ஆண்டு 18 வயதில் போர்ச்சுக்கல் அணிக்காக முதல் சர்வதேச போட்டியில் களம்கண்ட ரொனால்டோ, பின்னர் போர்ச்சுக்கல்லின் முகமாக மாறி, தொடர்ந்து கால்பந்தின் முகமாகவே மாறினார். 2016 யூரோ கோப்பையை வென்றபோது உலகின் ஒரே தலைசிறந்த வீரனாக ரொனால்டோ திகழ்ந்தார். காரணம் 100 ஆண்டுகளாக கோப்பைக்காக ஏங்கிக்கொண்டிருந்த ஒரு நாட்டை உச்சிகுளிரச்செய்தார் ரொனால்டோ.. கிட்டத்தட்ட போர்ச்சுக்கல் அணி சர்வதேச கால்பந்தில் அறிமுகமாகி 100 ஆண்டுகள் ஆனபிறகு முதல் சர்வதேச கோப்பையை முத்தமிட்டது.
யாராலும் தொட முடியாத சாதனை!
போர்ச்சுக்கல்லை கடந்து, கிளப் அணிகளான மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மேட்ரிட், ஜுவென்டஸ், அல்-நசர் என அனைத்து அணிகளுக்காகவும் பல்வேறு கோப்பைகளை வென்றுகொடுத்துள்ளார் ரொனால்டோ.
தன்னுடைய 23 ஆண்டுகால கால்பந்து தொழிற்வாழ்க்கையில் 36 கோப்பைகளை வென்றிருக்கும் ரொனால்டோ, உடைக்கவே முடியாத பல்வேறு சாதனைகளை தன் பாக்கெட்டில் வைத்துள்ளார்.
தன்னுடைய உடற்தகுதியின் மூலம் உலக வீரர்களிலேயே அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடியிருக்கும் ரொனால்டோ, 234 போட்டிகளில் விளையாடி அதிக சர்வதேச கோல்கள் அடித்த வீரராக 146 கோல்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் 6 வெவ்வேறு உலகக்கோப்பைகளில் விளையாடி அனைத்திலும் கோலடித்த ஒரே வீரராகவும், சர்வதேச போட்டிகளில் அதிக ஹாட்ரிக் (10) கோல்கள் அடித்த வீரராகவும் தன் திறமையால் மிளிர்ந்துள்ளார்.
இவற்றையெல்லாம் கடந்து கால்பந்து வரலாற்றில் ஆயிரம் கோல்கள் என்ற இமாலய சாதனை படைக்க அவருக்கு 15 கோல்களே மீதமுள்ளன. 985 கோல்களுடன் அதிக கோல்கள் அடித்த வீரராக முதலிடத்தில் நீடிக்கிறார்.
அதைத்தொடர்ந்து மூன்று வெவ்வேறு கிளப் அணிகளுக்காக 100+ கோல்கள் அடித்த முதல் வீரர், UEFA சாம்பியன்ஸ் லீக்கில் தொடர்ந்து 11 லீக்கில் கோலடித்த ஒரே வீரர், 5 Ballon d'Or விருதுகள், முதல் Ballon d'Or of All Time விருது என அவருடைய சாதனைப் பட்டியல்கள் நீண்டுகொண்டே போகின்றன..
கால்பந்து வரலாற்றில் தனி ஒருவனாக தன் நாட்டை உலக அரங்கில் மிளிரச்செய்து தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ரொனால்டோ, எப்போதும் ரசிகர்களின் ஆதர்ச நாயகனாக இருந்துகொண்டே இருப்பார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை! பல மறக்கமுடியாத கால்பந்து அனுபவங்களை கொடுத்ததற்கும், பல எதிர்கால தலைமுறையின் உத்வேகமாக விளங்குவதற்கும் மிகப்பெரியநன்றி ஜாம்பவான் ரொனால்டோ!

