"மரியாதை கிடைக்கவில்லை.. ரசித்து விளையாட முடியவில்லை.."- ஓய்வு குறித்து மனம்திறந்த யுவராஜ்!
யுவராஜ் சிங், இந்திய கிரிக்கெட்டில் தனித்துவமான வீரர், தனது ஓய்வுக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். மரியாதை இல்லாமை மற்றும் ரசிக்க முடியாத விளையாட்டால் மனதளவில் பாதிக்கப்பட்டதால், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தார். தனது உடல் மற்றும் மனதளவில் அதிகம் கொடுத்தாலும், மேலும் எதுவும் செய்ய முடியாது என உணர்ந்தார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் பெயர்களில் யுவராஜ் சிங் என்ற பெயருக்கு தனி இடம் உண்டு. தன் நாட்டிற்காக உயிரை கொடுத்து யாராவது கிரிக்கெட் விளையாடுவாங்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டால், முதல் பெயராக யுவராஜ் சிங்கின் பெயரே எழுதப்படும். 2011 உலகக்கோப்பையில் புற்றுநோயுடன் போராடி இந்தியாவிற்கு கோப்பை வென்று கொடுத்தார் யுவராஜ் சிங்.
அப்படியான தலைசிறந்த வீரருக்கு கேன்சர் பாதிப்பு பெரிய வில்லனாக வந்துசேர்ந்தது. கேன்சரால் சிகிச்சை பெற்றுக்கொண்ட யுவராஜ் சிங், மீண்டும் களத்திற்கு திரும்பும்போது அவருடைய பழைய ஆட்டத்தை மீட்டுக்கொண்டுவர முடியவில்லை. கம்பேக் கொடுத்து சதமடித்தாலும், அதை கன்சிஸ்டன்ஸியாக அவரால் செய்யமுடியவில்லை.
இதனால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதும், பின்னர் வெளியேற்றப்படுவதுமாக இருந்தார் யுவராஜ் சிங். 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகு இந்திய அணியின் ஒருநாள் வடிவத்திலிருந்து நீக்கப்பட்டார் யுவராஜ் சிங். அதனால் 2019ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
இந்தநிலையில் 6 வருடங்களுக்கு பிறகு தன்னுடைய ஓய்வுக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார் யுவராஜ் சிங்.
மரியாதை கிடைக்கவில்லை.. ரசித்து விளையாட முடியவில்லை..
சானியா மிர்சா உடனான சமீபத்திய உரையாடலில் ஓய்வு குறித்து பேசியிருக்கும் யுவராஜ் சிங், “கிரிக்கெட்டை என்னால் ரசித்து விளையாட முடியவில்லை. எனக்கு யாரும் துணை நிற்கவில்லை, மரியாதை அளிக்கவில்லை. யாரிடம் நிரூபிக்க இதை செய்கிறேன்? என எனக்குள் கேள்வி எழுந்தது.
ரசிக்க முடியாத ஒன்றை எதற்காக தொடர்ந்து விளையாடி கொண்டிருக்கிறேன்? கிரிக்கெட்டிற்காக நான் அனைத்தையும் கொடுத்துள்ளேன், மனதளவிலும் உடலளவிலும் இதை விட அதிகமாக என்னால் எதுவும் செய்ய முடியாது என தோன்றியது. இது என்னை மனதளவில் மிகவும் பாதித்ததால் ஓய்வு பெற வேண்டும் என்ற முடிவை எடுத்தேன்” என பேசியுள்ளார்.

