“வழி விடுங்க.. வழி விடுங்க.. சேட்டாவ டிஸ்டர்ப் பண்ணாதீங்க”- கேரளாவில் சஞ்சுவை கலாய்த்த சூர்யகுமார்!
இந்தியா-நியூசிலாந்து டி20 தொடரின் கடைசி போட்டி திருவனந்தபுரத்தில் நடக்க உள்ளது. சஞ்சு சாம்சன் சொந்த மண்ணில் முதல்முறையாக விளையாடவிருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சூர்யகுமார் யாதவ் சஞ்சுவை கலாய்த்தது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சஞ்சு சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என முன்னாள் வீரர்கள் கூறியுள்ளனர்.
2026 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்தியா-நியூசிலாந்து அணிகள் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3 போட்டிகளில் இந்தியாவும், ஒரு போட்டியில் நியூசிலாந்தும் வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் 5வது டி20 போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடக்க உள்ளது.
சஞ்சு சாம்சனை கலாய்த்த சூர்யகுமார்..
இந்தசூழலில் நாளை நடைபெறவிருக்கும் 5வது டி20 போட்டியில் விளையாடுவதற்காக திருவனந்தபுரம் சென்றது இந்திய அணி. அப்போது விமான நிலையத்திலிருந்து வெளிவந்த சஞ்சு சாம்சனுக்கு சொந்த மண்ணில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் விமான நிலையத்திலிருந்து வெளியே வரும்போது சஞ்சு சாம்சனுக்கு விஐவி வரவேற்பளித்த சூர்யகுமார் யாதவ், “வழி விடுங்க, வழி விடுங்க, சேட்டாவை தொந்தரவு பண்ணாதீங்க” என கலாய்த்தார். சஞ்சு சாம்சன் இன்றைய போட்டியில் முதல்முறையாக சொந்தமண்ணில் இந்திய அணிக்காக விளையாடவிருக்கிறார். 56 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியிருந்தாலும் ஒருமுறை கூட சொந்தமண்ணில் சஞ்சு சாம்சன் விளையாடியதில்லை. சஞ்சு சாம்சன் விளையாடவிருக்கும் நிலையில் மைதானத்தில் டிக்கெட்டுகள் சில மணிநேரத்தில் விற்றுத்தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான நடப்பு தொடரில் 4 போட்டிகளில் வெறும் 40 ரன்களை சஞ்சு சாம்சன் அடித்திருக்கிறார். இந்தசூழலில் இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது, ஆனால் அவருக்கு பதிலாக இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

