”சொந்த மண்ணில் விளையாடினாலும்.. சஞ்சு சாம்சனை நீக்குங்க” - முன்னாள் வீரர் அதிரடி கருத்து
முன்னாள் இந்திய வீரர், சஞ்சு சாம்சனை அணியிலிருந்து நீக்கி, இஷான் கிஷானை விக்கெட் கீப்பராக தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சஞ்சுவின் சொந்த மண்ணில் போட்டி நடந்தாலும், உலகக் கோப்பைக்கான தயாரிப்பில் இஷானின் ஃபார்ம் முக்கியம் என அவர் கூறியுள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் தேர்வு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சனே இருக்கிறார். ஆனால் அவருடைய சமீபத்திய பேட்டிங் ஃபார்ம் மோசமானதாக இருக்கிறது. நடந்துவரும் நியூசிலாந்து தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 40 ரன்களை மட்டுமே அடித்திருக்கும் சஞ்சு சாம்சன், நாளை சொந்த மண்ணான திருவனந்தபுரத்தில் நடக்கும் 5வது டி20 போட்டியில் கம்பேக் கொடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தசூழலில் திலக் வர்மாவிற்கு பதில் இந்திய அணியில் இடம்பிடித்த இஷான் கிஷன் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு பெரிய பங்காற்றுகிறார். மேலும் சஞ்சு சாம்சனை ஒப்பிடுகையில் இஷான் கிஷனின் ஃபார்ம், அவருக்கு பதில் இவரை தேர்வுசெய்யுங்கள் என சொல்லும் நிலைக்கு தள்ளியுள்ளது.
விரைவில் உடற்தகுதிபெற்று திலக் வர்மா இந்திய அணிக்கு திரும்பிவிட்டால் இஷான் கிஷான் ஆடும் பிளேயிங் 11வனிலிருந்து வெளியேற்றப்படுவார். இந்நிலையில் தான் இஷான் கிஷானை வைத்துக்கொண்டு சஞ்சு சாம்சனை அணியிலிருந்து நீக்குங்கள் என முன்னாள் இந்திய வீரர் பார்த்திவ் படேல் கூறியுள்ளார்.
சஞ்சு சாம்சனை நீக்குங்க..
5வது டி20 போட்டிக்கு முன்னதாக கருத்து தெரிவித்திருக்கும் பார்த்திவ் படேல், “நான் இந்திய அணியின் குழுவில் ஒரு பகுதியாக இருந்திருந்தால், கடைசி போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக இஷான் கிஷானை விளையாட வைப்பேன். சஞ்சுவை வெளியே உட்கார வைத்து, இஷானை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறக்குவேன். டி20 உலகக் கோப்பையில் இஷானை முக்கிய விக்கெட் கீப்பராக பார்த்தால், ஐந்தாவது டி20 போட்டியிலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் நான் அவருக்கே கீப்பிங் கிளவ்ஸை வழங்குவேன்.
திலக் வர்மா டி20 உலகக்கோப்பைக்கு முன் உடல் தகுதி பெற வாய்ப்புள்ளது. ஒருவேளை அவர் அணிக்குள் வந்துவிட்டால், அவருக்கான ஒரு இடத்தை நீங்கள் வைத்திருக்க வேண்டும். அந்த இடத்தில் இஷான் கிஷனுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை வெளியேற்றுங்கள். அப்படி நடந்தால் இறுதி டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக இஷான் கிஷானை விளையாடுங்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இஷான் திரும்பி வந்துள்ளார், மேலும் அவர் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். அதனால் டி20 உலகக் கோப்பையிலும் அவரே விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும், கடைசிப் போட்டி சஞ்சு சாம்சனின் சொந்த மண்ணில் நடந்தாலும், உலகக் கோப்பைக்கான தயாரிப்புக்காக, நான் நிச்சயமாக சஞ்சுவை டிராப் செய்துவிட்டு இஷான் கிஷானை விக்கெட் கீப்பர்-தொடக்க வீரராக விளையாடுவேன்" என்று ஜியோ ஹாட்ஸ்டாரில் படேல் கூறியுள்ளார்.

