WC அரையிறுதி| கடைசி இடத்திற்கு இந்தியா, நியூசிலாந்து, இலங்கை அணிகள் போட்டி.. யாருக்கு அதிக வாய்ப்பு?
2025 மகளிர் உலகக்கோப்பையின் அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தகுதிபெற்றுள்ள நிலையில், கடைசி 1 இடத்திற்கு 3 அணிகள் போராடி வருகின்றன.
8 அணிகள் பங்கேற்றுள்ள 2025 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கை மற்றும் இந்தியாவில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பரபரப்பாக நடந்துவரும் உலகக்கோப்பை தொடர் நாக் அவுட் போட்டிகளை எட்டியுள்ளது. லீக் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா 3 அணிகளும் அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன.
ஆனால் சொந்தமண்ணில் விளையாடும் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இன்னும் அரையிறுதிக்கான வாய்ப்பில் ஊசலாடி வருகின்றன..
கடைசி 1 அரையிறுதி இடத்திற்கு இந்தியா, நியூசிலாந்து மற்றும் இலங்கை என 3 அணிகள் போட்டியிடும் நிலையில், எந்த அணிக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது என்று இங்கே பார்க்கலாம்..
இந்தியா – 4 புள்ளிகள், +0.526 NRR
இந்திய அணி கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் தோல்வியை தழுவியுள்ளது. சிறப்பாக விளையாடிய போதும் களத்தில் வீராங்கனைகள் செய்யும் தவறுகளால், கையிலிருந்த 3 போட்டிகளை கோட்டை விட்டுள்ளது இந்தியா..
அரையிறுதி செல்வதற்கான 4வது அணியாக இந்தியாவிற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் 5 போட்டியில் இரண்டில் வென்று 4 புள்ளிகள் மற்றும் +0.526 NRR உடன் பட்டியலில் 4வது இடத்தில் நீடிக்கின்றனர். நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளை விட இந்திய அணியின் என்ஆர்ஆர் அதிகமாக இருப்பது இந்தியாவிற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது.
நாளை நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியையும், வங்கதேசத்துக்கு எதிரான கடைசி போட்டியையும் வென்றால் இந்தியா 8 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்யும். ஒருவேளை இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக தோற்றால், அவர்கள் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் தோற்பதற்காக இந்தியா காத்திருக்க வேண்டும்..
நியூசிலாந்து – 4 புள்ளிகள், -0.245 NRR
நியூசிலாந்து அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில், அவர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக வெற்றிபெற வேண்டும்.. ஒருவேளை இரண்டு போட்டிகளிலும் வென்றால் நியூசிலாந்து நேரடியாக தகுதிபெறும்..
ஆனால் இந்தியா அல்லது இங்கிலாந்துக்கு எதிராக தோற்றால், அவர்கள் இந்தியாவின் கடைசி ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் இலங்கையை விட அதிக ரன்ரேட்டை கொண்டிருக்க வேண்டும்.
இலங்கை – 4 புள்ளிகள், -1.035 NRR
இலங்கை அணிக்கு கடைசி லீக் ஆட்டம் மட்டுமே உள்ளதால், பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியில் நல்ல ரன்ரேட்டுடன் வெற்றிபெற வேண்டும். அதுமட்டுமில்லாமல் இந்தியா 2 போட்டியிலும், நியூசிலாந்து ஒரு போட்டியிலாவது தோற்றால் இலங்கைக்காக வாய்ப்பு இருக்கிறது.
ஒருவேளை இரண்டு அணிகள் சரிசமமான புள்ளிகளுடன் முடித்தால், அவர்கள் நெட் ரன்ரேட் மூலம் தகுதிபெறுவார்கள்..