திலக் வர்மா - இந்தியாவின் நம்பர் 4 தேடலுக்கான பதிலாக இருப்பாரா?

எவ்வித அச்சமும் இல்லாமல் மிகச் சிறப்பாக ஆடும் இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான திலக் வர்மாவுக்கு நிச்சயம் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.
திலக் வர்மா
திலக் வர்மா@TilakV9 | Twitter

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் தொடங்குகிறது. சொந்த மண்னில் நடக்கும் இந்தத் தொடரில் இந்திய அணி கோப்பை வெல்லவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்திய அணிக்கு அது எளிதான விஷயமாக இருக்கப்போவதில்லை. பலமான எதிரணிகளை விடவும், உள்ளுக்குள் இருக்கும் சிக்கல்கள் தான் இந்திய அணிக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கப்போகிறது.

திலக் வர்மா
அதிக ரன்கள் குவித்த திலக், சூர்யா! வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இந்திய வீரர்களின் ரிப்போர்ட் கார்ட்!

கேள்விக்குறியாகும் ஃபிட்னஸ்!

உலகக் கோப்பை தொடருக்கு சுமார் இன்னும் 2 மாதங்களே இருக்கும் நிலையில் பல வீரர்களின் ஃபிட்னஸும் கேள்விக்குறியாக இருக்கிறது. விபத்தில் காயமடைந்த காரணத்தால் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கப் போவதில்லை. நீண்ட காலமாக காயத்தால் அவதிப்பட்ட நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா இப்போதுதான் அதிலிருந்து மீண்டிருக்கிறார்.

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கும் அவர், எவ்வளவு ஃபிட்டாக இருக்கிறார் என்பது இந்தத் தொடரின்போது தான் தெரியும். அவர் முன்பைப் போல் விளையாடத் தொடங்கினால்.... ஏன் அவர் 3 போட்டிகளிலும் முழு 4 ஓவர் கோட்டாவையும் நிறைவு செய்தாலே இந்திய அணிக்கு அது மகிழ்ச்சிகரமான விஷயம்.

தொடரும் நம்பர் 4 பிரச்னை!

பந்துவீச்சில் இருக்கும் பிரச்னையை விட பேட்டிங்கில் தான் இந்திய அணிக்கு பல சிக்கல்கள் இருக்கின்றன. அதில் தலையாய ஒன்று நம்பர் 4! இப்போதென்று இல்லை கிட்டத்தட்ட ஆறேழு ஆண்டுகளாக இந்த இடம் இந்திய அணிக்கு சிக்கலாகத்தான் இருக்கிறது. 2019 உலகக் கோப்பையிலும் இதுதான் பெரும் பேசுபொருளாக இருந்தது.

உலகக் கோப்பைக்கு முன்பாக தினேஷ் கார்த்திக், அம்பதி ராயுடு, ரிஷப் பண்ட், மனீஷ் பாண்டே, கே.எல்.ராகுல் என பல்வேறு வீரர்களை 2 ஆண்டுகளுக்கு மேல் பரிசோதித்துவிட்டு, கடைசியில் 3D பிளேயர் என்று கூறி விஜய் ஷங்கரை அணியில் சேர்த்தது இந்திய நிர்வாகம். அப்போது இருந்த இப்போது வரை தீரவேயில்லை. சொல்லப்போனால் யுவ்ராஜ் சிங் ஓய்வு பெற்றதிலிருந்தே இந்த நம்பர் 4 விவகாரம் இந்தியாவுக்கு தலைவலியாகவே இருக்கிறது. இதை சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கேப்டன் ரோகித் ஷர்மாவே கூட ஒத்துக்கொண்டிருக்கிறார்.

இந்த உலகக் கோப்பைக்கு வருவோம். கடந்த சில ஆண்டுகளாக கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் இந்திய அணிக்காக நம்பர் 4 பொசிஷனில் விளையாடினர். ஆனால் கடந்த சில மாதங்களாக அவர்கள் இருவருமே காயத்தால் அவதிப்பட்டுவருகின்றனர். இப்போதுதான் அதிலிருந்து மீண்டு பயிற்சி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இருந்தாலும் உலகக் கோப்பைக்கு முன்பாக அவர்கள் ஃபிட் ஆவார்களா என்பது சந்தேகம்தான்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் போன்றவர்களை பயன்படுத்திப் பார்த்தது இந்திய அணி. இடது கை பேட்ஸ்மேன் வேண்டும் என்பதால் அக்‌ஷர் படேல் கூட ஒரு போட்டியில் அந்த இடத்தில் களமிறக்கப்பட்டார். ஆனால், எதுவுமே செட் ஆகவில்லை.

திலக் வர்மா
வெளுத்து வாங்கிய பிரண்டன் - பூரான்; 17 வருடங்களுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸிடம் தொடரை இழந்த இந்திய அணி!

இடது கை பேட்ஸ்மேன்!

இந்த இடத்தில் குறிப்பிடவேண்டிய இன்னொரு விஷயம் - அந்த இடது கை பேட்ஸ்மேன்!

இந்திய அணியில் டாப் 6 இடங்களில் ஆடக்கூடிய இடது கை பேட்ஸ்மேன்களே இல்லை. இருக்கும் இஷான் கிஷனும் டாப் ஆர்டரில் தான் சுமாராக ஆடுகிறார். அவருக்கு மிடில் ஆர்டர் செட் ஆகவில்லை. இந்நிலையில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டிருக்கும் திலக் வர்மா பலரின் கவனத்தையும் தன் மீது ஈர்த்திருக்கிறார்.

திலக் வர்மா
"எங்களுக்கென்று சொந்த வீடு கூட இல்லை; ஐபிஎல் சம்பளத்தில்தான்.." - மும்பை வீரர் திலக் வர்மா

இடது கை பேட்ஸ்மேனான அவர், தன் முதல் தொடரிலேயே சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் டாப் ரன் ஸ்கோரராக உருவெடுத்தார். 5 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் உள்பட 173 ரன்கள் எடுத்தார் அவர். கடந்த 2 ஐபிஎல் சீசன்களிலும் எப்படி அதிரடி காட்டி அசத்தினாரோ, அதேபோல எவ்வித அச்சமும் இல்லாமல் விளையாடினார். அணி இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் அது இவரது ஆட்டத்தை பாதிக்கவில்லை. அனுபவம் மிக்க ஒரு வீரரைப் போலவே ஆட்டத்தை எதிர்கொண்டார் அவர்.

திலக் வர்மா சிறப்பாக செயல்பட்டிருப்பதும், மற்ற வீரர்கள் தங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியிருப்பதும், ஒரு இடது கை பேட்ஸ்மேனுக்கான தேவை இந்திய அணியில் இருப்பதும், அந்த 20 வயது இளம் வீரரை உலகக் கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்ற வாதத்தை வலுவாக்கியிருக்கிறது.

திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்!

இந்திய அணி உலகக் கோப்பைக்கு முன்பாக ஆசிய கோப்பை போட்டியிலும், 3 போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் விளையாடுகிறது. மொத்தம் 8 அல்லது 9 (ஆசிய கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற்றால்) போட்டிகள் தான் இந்திய அணிக்கு இருக்கிறது. அதனால் இந்தத் தொடர்களில் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும் என்று பல வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அவர் ஆஃப் ஸ்பின் வீசக்கூடியவர் என்பதாலும், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஆஃப் ஸ்பின் வீசக்கூடிய வீரர்கள் இருக்க வாய்ப்பில்லை என்பதாலும், அதுவும் திலக்குக்கு சாதகமான அம்சமாக இருக்கிறது.

சொல்லப்போனால் அது சரியானதும் கூட. சூர்யகுமார் யாதவால் ஒருநாள் போட்டிகளில் தன் திறனை வெளிக்கொண்டுவர முடியவில்லை. சஞ்சு சாம்சன் சர்வதேச அரங்கில் எத்தனை வாய்ப்புகள் பெற்றாலும் அதைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறியிருக்கிறார். அப்படி இருக்கும்போது எவ்வித அச்சமும் இல்லாமல் மிகச் சிறப்பாக ஆடும் ஒரு இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பு நிச்சயம் தரப்படவேண்டும் தானே! திலக் வர்மாவுக்கு நிச்சயம் அந்த வாய்ப்புகள் கொடுக்கப்படவேண்டும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com