CSK vs PBKS| முதல் வெற்றியை எட்டுமா சிஎஸ்கே.. கடைசி 3 மோதலிலும் பஞ்சாப் இடம் தோல்வி!
2026 ஐபிஎல் தொடக்கத்தில் ராஜஸ்தானிடம் அவமானகர தோல்வியால் கடைசி இடத்தில் தள்ளப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், இன்று சேப்பாக்கில் பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது. ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சியும், ஸ்பின்னர் பயன்பாட்டும் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், கடந்த மூன்று முறை இந்த மைதானத்தில் பஞ்சாபிடம் தோற்ற நினைவுகளை உடைத்து முதல் வெற்றியைப் பெற வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது.
2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக படுதோல்வியை சந்தித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. டெவால்ட் பிரேவிஸ், தோனி போன்ற வீரர்கள் ஓய்வில் இருந்தாலும் சென்னை அணியில் நட்சத்திர வீரர்கள் பட்டாளத்திற்கு குறைவே இல்லை என்றபோதிலும், வெறும் 127 ரன்களை மட்டுமே அவர்களால் அடிக்க முடிந்தது.
ருதுராஜ் கெய்க்வாட் பேட்ஸ்மேனாக சொதப்பியதோடு மட்டுமில்லாமல், கேப்டனாகவும் பல தவறான முடிவுகளை எடுத்தார். 2 இடது கை வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவருக்கும் எதிராக சென்னை அணியிடமும், கேப்டன் ருதுராஜிடமும் எந்த திட்டமும் இல்லை.
முதல் போட்டியின் முடிவில் -4.171 என்ற புள்ளிகளுடன் கடைசி இடத்தை பிடித்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்று நடக்கும் இரண்டாவது லீக் போட்டியில் பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கவிருக்கும் போட்டியில் சொந்த மண்ணில் சென்னை அணி களமிறங்குகிறது. கடந்த போட்டியில் ஏற்பட்ட சரிவுகளை எல்லாம் சரிசெய்து இந்தப்போட்டியில் சென்னை அணி முதல் வெற்றியை பதிவுசெய்ய வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை, எதிர்த்து ஆடவிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, 2026 டைட்டில் வெல்லும் அணியாக பார்க்கப்படுகிறது. அந்த அணியில் பந்துவீச்சு, பேட்டிங் இரண்டுமே வலுவாக இருப்பதால் சென்னை அணிக்கு பெரிய சவால் காத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். கடந்த 3 முறை சேப்பாக்கத்தில் மோதிய போட்டியில் எல்லாம் பஞ்சாப் கிங்ஸ் அணியே வெற்றிபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சீசனில் 10வது இடத்திலிருந்து வரும் சென்னை அணி, இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டியது அவசியமான ஒன்று.

