”தோனி, கபிலிடம் மன்னிப்பு கேட்கிறேன்..” தந்தையின் கருத்துக்காக வருத்தப்பட்ட யுவராஜ் சிங்!
தனது தந்தை யோக்ராஜ் சிங் மீண்டும் மீண்டும் கூறிவரும் கருத்துக்களுக்காக எம்.எஸ். தோனி மற்றும் கபில் தேவ் ஆகியோரிடம் முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்திய அணி வென்ற இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்றிருந்தவர் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங். எனினும், எதிர்பாராத சூழல்களால் யுவராஜ் சிங் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடிக்க முடியாமல் போனார். இதையடுத்து இவரது தந்தையான யோக்ராஜ் சிங், யுவராஜை இந்திய அணியிலிருந்து தோனி நீக்கிவிட்டதாகக் குற்றம்சாட்டி அவரை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
அதேபோல், முன்னாள் கேப்டன் கபில் தேவ் மீதும் அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். கபில் தன்னை மிரட்டியதாகவும், 1980-களின் முற்பகுதியில் தனது கிரிக்கெட் வாழ்க்கையைச் சீர்குலைத்ததாகவும், ஒருமுறை கபிலை நேருக்கு நேர் சந்திப்பதற்காகத் துப்பாக்கியுடன் அவரது வீட்டிற்குச் சென்றதாகவும் யோக்ராஜ் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நிலையில், தந்தையின் குற்றச்சாட்டுகளுக்கு யுவராஜ் சிங் பாட்காஸ்ட் ஒன்றில் பதிலளித்துள்ளார். அதில், தனது தந்தை யோக்ராஜ் சிங் மீண்டும் மீண்டும் கூறிவரும் கருத்துக்களுக்காக எம்.எஸ். தோனி மற்றும் கபில் தேவ் ஆகியோரிடம் முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், இதுபோன்ற கூற்றுகளைத் தாம் ஆதரிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பெரும்பாலும் தந்தையின் குற்றச்சாட்டுகளுக்கு யுவராஜ் பதிலளிப்பதில்லை. இந்த நிலையில், அவர் மன்னிப்பு கேட்டிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.

