T20 WC | வங்கதேசத்தைப் போன்று பாகி. ஒருபோதும் தொடரிலிருந்து பின்வாங்காது.. ஏன் தெரியுமா?
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை, பாகிஸ்தான் ஒருபோதும் புறக்கணிக்காது என தகவல் வெளியாகி உள்ளது. அதன் பின்னணியில் வலுவான காரணம் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், அவ்வணி தொடருக்கான பயணங்களையும் ஏற்கெனவே திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
2026 டி20 உலகக்கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே, ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை பிசிசிஐ நீக்கியதை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என வங்கதேசம் ஐசிசிக்கு கடிதம் எழுதியது. ஆனால் தங்களுடைய முடிவில் இருந்து வங்கதேசம் பின்வாங்காத நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு 2026 டி20 உலகக்கோப்பையிலிருந்து வங்கதேசத்தை நீக்கி, அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், டி20 உலக கோப்பை தொடரிலிருந்து வங்கதேசம் நீக்கப்பட்டதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விமர்சித்திருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் இந்தத் தொடரில் கலந்து கொள்ளுமா என்பது உறுதியற்ற நிலையில் இருக்கிறது. எனினும் அதுகுறித்து பாகிஸ்தான் அரசு முடிவு எடுக்கும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி கூறியுள்ளார்.
அதேநேரத்தில், இந்த விஷயத்தில் பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பையை ஒருபோதும் புறக்கணிக்காது என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏனெனில், 2025ஆம் ஆண்டில், பிசிசிஐ, பிசிபி மற்றும் ஐசிசி ஆகியவை முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன்கீழ் 2027 வரை ஐசிசி போட்டிகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் அனைத்தும் நடுநிலையான இடங்களில் நடத்தப்படும். அந்த வகையிலேயே பாகிஸ்தானும் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தவிர, அது தொடரைப் புறக்கணித்தால் கிரிக்கெட் தடைகளையும் பெரும் பொருளாதார இழப்புகளையும் அவ்வணி சந்திக்கும்.
அதனால், இவ்விஷயத்தில் அது சும்மா விளையாட்டு காட்டுவதாகவும் அது ஒருபோதும் தொடரைப் புறக்கணிக்காது எனவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் பாகிஸ்தானின் முழு உலகக் கோப்பை அட்டவணையும் இறுதிப் போட்டி உட்பட இலங்கையில்தான் என்பது ஏற்கெனவே உறுதியாகி விட்டது. ஆகையால், இத்தொடரைப் புறக்கணிக்க பாகிஸ்தான் அணிக்கு எந்த வாய்ப்புமில்லை என்றும் சொல்லப்படுகிறது. மேலும், பாகிஸ்தான் அணி ஏற்கெனவே அவர்களின் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டதாகவும் , பிப்ரவரி 2 ஆம் தேதி அதிகாலையில் கொழும்புக்கு புறப்பட உள்ளதாகவும் PTI தெரிவித்துள்ளது.

