இந்தியா vs நியூசிலாந்து FINAL| ஆட்டம் சமன் (or) மழையால் ரத்தானால் என்னவாகும்? யாருக்கு கோப்பை?
2025 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியானது துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் மார்ச் 9-ம் தேதி நடக்கவிருக்கிறது. 2002 மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளை வென்ற இந்திய அணி 3வது கோப்பைக்காக களம்காண உள்ளது. அதேவேளையில் 2000 ஆண்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை வென்ற நியூசிலாந்து அணி இரண்டாவது கோப்பைக்காக களம்புக உள்ளது.
நடப்பு தொடரில் இந்திய அணி ஒருதோல்வி கூட அடையாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது, நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு எதிரான லீக் போட்டி ஒன்றில் மட்டுமே தோற்றுள்ளது.
இந்த சூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான மோதல் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒருவேளை இறுதிப்போட்டி சமனில் முடிந்தாலோ அல்லது மழையால் ஆட்டம் நடத்தப்படாமல் ரத்துசெய்யப்பட்டாலோ என்னவாகும்? யாருக்கு கோப்பை வழங்கப்படும்? என்பதை பார்க்கலாம்.
ஆட்டம் சமனில் முடிந்தால் என்ன நடக்கும்?
2019 ஒருநாள் உலகக்கோப்பையின் முடிவை யாரால் மறக்க முடியும். இன்றளவும் கிரிக்கெட் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக 2019 உலகக்கோப்பை முடிவானது இருந்துவருகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இரண்டு அணிகளும் சரிக்கு சமமாக 241 ரன்கள் அடித்ததால், போட்டி சமனில் முடிந்து சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. ஆனால், சூப்பர் ஓவரிலும் இரண்டு அணிகளும் 15 ரன்களை சமமாக அடித்ததால் முடிவு எட்டப்படாமல் பவுண்டரிகளின் எண்ணிக்கை அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.
இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வல்லுநர்கள் என அனைவராலும் விமர்சிக்கப்பட்ட நிலையில், பவுண்டரி கவுண்ட் என்ற விதிமுறை தற்போது பின்பற்றப்படவில்லை.
அப்படியானால் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி சமனில் முடிந்தால் என்ன நடக்கும்?, ஒருவேளை இறுதிப்போட்டி சமன்செய்யப்பட்டால் சூப்பர் ஓவர் நடைபெறும், அந்த சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தால் முடிவு எட்டும்வரை அடுத்தடுத்த சூப்பர் ஓவர்கள் நடத்தப்படும்.
மழையால் ஆட்டம் தடைபட்டால் என்னவாகும்?
மார்ச் 9-ம் தேதி நடக்கும் இறுதிப்போட்டி மழையால் தடைபட்டால் ரிசர்வ் டே வழங்கப்பட்டுள்ளது. முதல் நாள் ஆட்டம் மழையால் வாஷ்அவுட் செய்யப்பட்டால், போட்டியானது ரிசர்வ் டேவான மார்ச் 10-ம் தேதி நடத்தப்படும். மறுநாளில் நடக்கும் ஆட்டம் முதல்நாள் இடைநிறுத்தப்பட்ட இடத்திலிருந்தே நடத்தப்படும்.
ஒருவேளை ரிசர்வ் டேவிலும் மழையால் போட்டி நடக்காமல் போனால் இரண்டு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து வழங்கப்படும்.
2002-ம் ஆண்டு நடத்தப்பட்ட சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியும் அசல் மற்றும் ரிசர்வ் நாளில் மழையால் நடக்காமல் போனதால் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு கோப்பை பகிர்ந்து வழங்கப்பட்டது.
நடப்பு தொடரில் பாகிஸ்தானில் இடம்பெற்ற 3 லீக் போட்டிகள் மழையால் முழுமையாக ரத்துசெய்யப்பட்டன, துபாயில் எந்த போட்டிகளும் மழையால் பாதிக்கப்படவில்லை. அதனால் துபாயில் நடக்கவிருக்கும் இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு மிகவும் குறைவானதாகவே இருக்கிறது.
நியூசிலாந்து அணி இதுவரை 6 முறை ஐசிசி தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கும் நிலையில், 2 முறை மட்டுமே கோப்பை வென்றுள்ளது. அந்த இரண்டுமுறையும் இந்தியாவிற்கு எதிராக கோப்பை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்திய அணி தற்போது உலகின் நம்பர் 1 அணியாக வலம்வரும் நிலையில், நியூசிலாந்துக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.