“நோன்பை கடைப்பிடிக்காமல் பாவம் செய்துவிட்டார்” - ஷமியை விமர்சித்த மதகுருவுக்கு கடும் எதிர்ப்பு!
பாகிஸ்தானில் 8 அணிகள் கலந்துகொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கடந்த 19ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி போட்டிகள் மட்டும் பாதுகாப்பு காரணமாக பிசிசிஐ கேட்டுக்கொண்டதன் பேரில் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது சாம்பியன்ஸ் டிராபி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
இந்த நிலையில், முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய வீரர் முகம்மது ஷமி நோன்பு வைக்காமல் விளையாடியது தொடர்பாக இஸ்லாமிய மதகுரு ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் மதத்தினரின் புனித மாதமாக ரம்ஜான் மாதம் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் அவர்கள், சூரிய உதயத்துக்கு முன்பாகத் தொடங்கி, சூரிய மறைவு வரை உண்ணாமல், பருகாமல், குடும்ப வாழ்வில் ஈடுபடாமல், தவறான எந்தக் காரியங்களிலும் ஈடுபடாமல் நோன்பு இருப்பர். ரம்ஜான் மாதம் முழுவதும் நோன்பு இருக்கவேண்டும் எனக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் நோயுற்றவர்கள், கர்ப்பிணிகள், வயதானவர்களுக்கு சில விதிவிலக்குகள் உள்ளன. இந்த நிலையில், சாம்பின் டிராபியின் முதலாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய வீரர் முகம்மது ஷமி நோன்பு வைக்காமல் விளையாடினார். அவரது பங்களிப்பு இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தது.
இந்தச் சூழலில் அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவர் ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி என்பவர், ”முகம்மது ஷமி நோன்பு வைக்காமல் விளையாடியது தவறு” எனத் தெரிவித்துள்ளார். அவர், “நோன்பு வைப்பது என்பது ஒவ்வொரு இஸ்லாமியர்களின் கடமை. இதனால் நோன்பு வைக்காமல் முகமது ஷமி பாவம் செய்துவிட்டார். உடல்நலம் ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒரு ஆணோ, பெண்ணோ நோன்பு வைக்காமல் இருப்பது மிகப்பெரிய குற்றமாகும். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷமி, நோன்பு வைக்காமல் போட்டியின் போது குடிநீர் குடித்திருக்கிறார். இதை பலரும் பார்த்திருக்கிறார்கள். அவரால் விளையாட முடிகிறது என்றால் அவர் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்றுதான் அர்த்தம். அப்படி இருக்கும்போது அவர் நோன்பு வைக்காமல் தண்ணீர் குடித்தால் ஒரு தவறான முன்னுதாரணமாக ஷமி விளங்குகிறார். இந்த தவற்றை ஷமி மீண்டும் செய்யக்கூடாது. ஷமி தற்போது பாவம் செய்துவிட்டார். இதற்கு அவர் இறைவனிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்" என விமர்சித்துள்ளார்.
ஆனால் இதற்கு, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் அறிஞரும் நிர்வாக உறுப்பினருமான மௌலானா காலித் ரஷீத் ஃபராங்கி மஹ்லி, ஷமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர், “கிரிக்கெட் வீரர் ஒருவர் சுற்றுப்பயணத்தில் இருப்பதாகவும், பயணிப்பவர்களுக்கு சலுகைகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், “பயணம் செய்பவர்கள் ரம்ஜான் நோன்பைத் தவிர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஒருவர் பயணத்தில் இருந்தாலோ அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ, நோன்பை அனுசரிக்காமல் இருக்க அவர்களுக்கு விருப்பம் உள்ளது என்று குர்ஆனில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. முகமது ஷமியைப் பொறுத்தவரை, அவர் ஒரு சுற்றுப்பயணத்தில் இருக்கிறார், எனவே, நோன்பை அனுசரிக்காமல் இருக்க அவருக்கு விருப்பம் உள்ளது. அவரைக் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.
அதுபோல் ஷமியின் உறவினர் மும்தாஜ், “அவர் நாட்டுக்காக விளையாடுகிறார். நோன்பு வைத்துக்கொள்ளாமல் போட்டிகளில் விளையாடும் பல பாகிஸ்தான் வீரர்களும் இங்கு உள்ளனர். எனவே இது ஒன்றும் புதிதல்ல. அவரைப் பற்றி இதுபோன்ற விஷயங்கள் கூறப்படுவது மிகவும் வெட்கக்கேடானது. முகமது ஷமி, இந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். இறுதிப்போட்டிக்குத் தயாராகுங்கள் என்றும் நாங்கள் கூறுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
முகமது ஷமியின் பயிற்சியாளர் முகமது பத்ருதீன், ”ஷமி எந்த தவறும் செய்யவில்லை. நாட்டின் ஆதரவு அவருக்கு உண்டு. தேசத்தின் முன் எதுவும் வராது. இதை விட்டுவிட்டு, நாட்டை முன்னுரிமைப்படுத்த வேண்டும்” என மதகுருமார்களை அவர் வலியுறுத்தினார்.
இந்த சர்ச்சைக்கு பதிலளித்த NCP (SP) MLA ரோஹித் பவார், ”ஷமியை அர்ப்பணிப்புள்ள ஒரு வீரர். இந்தியாவை பல முறை வெற்றிக்கு அழைத்துச் சென்றவர். உண்ணாவிரதம் தனது செயல்திறனை சிறிதளவுகூட பாதிக்கக்கூடும் என்று ஷமி நினைத்தால், அவரால் தூங்க முடியாது. அவர் ஒரு தீவிரமான இந்தியர். அவர் அணியை பல முறை வெற்றி பெறச் செய்துள்ளார். விளையாட்டுகளில் மதத்தைக் கொண்டு வரக்கூடாது. இன்று எந்த முஸ்லிமையும் கேட்டால், அவர்கள் முகமது ஷமியைப் பற்றி பெருமைப்படுவதாகக் கூறுவார்கள்" என அவர் தெரிவித்தார்.