நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு ஐசிசி ஃபைனல்களில் தோல்வி.. பதிலடி கொடுக்குமா இந்திய அணி?
ஐசிசி தொடர் என்றாலே இரண்டு அணிகள் இந்தியாவிற்கு எதிராக அச்சுறுத்தும் அணியாக இருந்துள்ளன.
ஆஸ்திரேலியா அணி 2003 உலகக்கோப்பை ஃபைனல், 2023 உலகக்கோப்பை ஃபைனல், 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் என மூன்று முறை ஐசிசி இறுதிப்போட்டிகளில் இந்திய அணியை தோற்கடித்துள்ள அதேவேளையில், நியூசிலாந்து அணியானது 2000-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல், 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் என இரண்டு முறை இந்தியாவின் கோப்பை கனவை தட்டிப்பறித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் 2019 உலகக்கோப்பை அரையிறுதி உட்பட, இதுவரை 20 முறை ஐசிசி போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியிருக்கும் நிலையில் இந்திய அணி 6 போட்டிகளில் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது. மாறாக நியூசிலாந்து அணி 12 வெற்றிகளை ருசித்துள்ளது. 2 போட்டிகள் முடிவை பெறவில்லை.
இந்த சூழலில் 2025 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது.
NZ vs IND ஐசிசி மோதல்..
ஐசிசி போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 20 முறை மோதியுள்ளன. அதில் இந்திய அணி 6 முறை மட்டுமே நியூசிலாந்தை தோற்கடித்துள்ளது, மாறாக நியூசிலாந்து 12 முறை வெற்றியை பதிவுசெய்து அச்சுறுத்தும் அணியாக இருந்துள்ளது.
2000-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் காலிறுதி மற்றும் அரையிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி, இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் சதம் விளாசிய போதும், கோப்பையை வெல்லமுடியவில்லை.
அதேபோல 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிவரை முன்னேறிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அதுமட்டுமில்லாமல் 2019 உலகக்கோப்பையை வெல்லும் அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் 240 ரன்களை அடிக்க முடியாமல் 18 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
2007 டி20 உலகக்கோப்பையை வென்றபோது இந்திய அணியால் நியூசிலாந்தை தோற்கடிக்க முடியவில்லை.
ஐசிசி மோதலில் இந்தியா vs நியூசிலாந்து:
ஐசிசி உலகக்கோப்பை : 11 மோதல் - இந்தியா 5 வெற்றி - நியூசிலாந்து 5 வெற்றி - 1 முடிவில்லை
ஐசிசி டி20 உலகக்கோப்பை : 3 மோதல் - இந்தியா 0 - நியூசிலாந்து 3 வெற்றி
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி : 2 மோதல் - நியூசிலாந்து 1 வெற்றி - இந்தியா 1 வெற்றி
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : 5 மோதல் - இந்தியா 1 வெற்றி - நியூசிலாந்து 3 வெற்றி - 1 முடிவில்லை
பழி தீர்க்குமா இந்தியா?
ஐசிசி போட்டிகளில் இந்தியாவிற்கு மறக்க முடியாத தோல்விகளை கொடுத்திருக்கும் நியூசிலாந்து அணி, சமீபத்தில் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை 3-0 என வென்று ஒயிட்வாஷ் செய்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது.
இந்த சூழலில் 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும் நிலையில், இதுவரையிலான தோல்விகளுக்கு எல்லாம் இந்தியா பழிதீர்க்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.