DC vs LSG | சிக்சர் மழை பொழிந்த நிக்கோலஸ் பூரன் - மிட்செல் மார்ஸ்.. 209 ரன்கள் குவித்த லக்னோ!
2025 ஐபிஎல் தொடரானது மார்ச் 22-ம் தேதி முதல் தொடங்கப்பட்டு நடந்துவருகிறது. மூன்று போட்டிகள் நடந்துள்ள நிலையில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை ஆர்சிபி அணியும், ராஜஸ்தானை சன்ரைசர்ஸ் அணியையும் வீழ்த்தி வெற்றிபெற்றன.
மூன்றாவது போட்டியில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்ற நிலையில், 4வது போட்டியானது இன்று லக்னோ மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்றுவருகிறது.
சிக்சர் மழை பொழிந்த நிக்கோலஸ் பூரன்..
விசாகப்பட்டினத்தில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் பட்டேல் பந்துவீச்சை தேர்வுசெய்ய, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஸ் மற்றும் எய்டன் மார்க்ரம் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி என பறக்கவிட்ட மார்க்ரம் விரைவாகவே வெளியேறினாலும், 6 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய மிட்செல் மார்ஷ் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
36 பந்தில் 72 ரன்கள் அடித்து மிட்செல் மார்ஷ் வெளியேற, அடுத்த நிக்கோலஸ் பூரன் மார்ஸ் விட்ட இடத்திலிருந்து சிக்சர்களாக பறக்கவிட்டு டெல்லி பந்துவீச்சாளர்களை துவைத்தெடுத்தார். 17 ரன்னில் கைக்கு வந்த பூரனின் கேட்சை ரிஸ்வி கோட்டைவிட, அதற்குபிறகு ருத்ரதாண்டவம் ஆடிய பூரன் 7 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் பறக்கவிட்டு 30 பந்தில் 75 ரன்கள் அடித்து வெளியேறினார்.
15 ஓவரில் 170 ரன்களை லக்னோ அணி எட்ட எப்படியும் 250 ரன்களாகவது வரும் என எதிர்ப்பாத்த போது, 27 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கப்பட்ட கேப்டன் ரிஷப் பண்ட் 0 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்த களமிறங்கிய எந்த வீரர்களும் சோபிக்காத நிலையில், கடைசியாக போராடிய டேவிட் மில்லர் 2 சிக்சர்களை பறக்கவிட 20 ஓவரில் 209 ரன்களை சேர்த்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.
210 என்ற இலக்கை நோக்கி ஆட்டத்தை தொடங்கிய டெல்லி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. 7 ரன்களை எட்டுவதற்கு அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. ஜேக் பிரசெர் மெக்குர்க் 1, போரல் 0, ரிஸ்வி 4 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர், கேப்டன் அக்ஸர், டூ பிளசிஸ் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை மீட்க போராடி வருகின்றனர். 4.3 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்துள்ளது.