உலகக்கோப்பை| வெஸ்ட் இண்டீஸ் படுதோல்வி.. இந்தியாவிற்கு அதிகரித்த அரையிறுதி வாய்ப்பு!
2026 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் தோல்வி, இந்திய அணிக்கு மீதமிருக்கும் போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலம் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை வழங்கியுள்ளது. மேலும், மழையால் போட்டி கைவிடப்பட்டாலும், நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் இந்தியா முன்னேற வாய்ப்பு உள்ளது.
2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுப் பிரிவில் விளையாடி வரும் நிலையில், இங்கிலாந்து அணி அடுத்தடுத்த 2 போட்டிகளில் வெற்றிபெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. அதேபோல தொடர்ந்து 2 போட்டிகளில் தோற்ற இலங்கை அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தோல்வியை தழுவியிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கான வாய்ப்புக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்திய அணி எளிதாக அரையிறுதிக்கு செல்லவேண்டுமானால் இன்று நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ்- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை தழுவ வேண்டும். அப்படி நடந்தால் இந்திய அணி மீதமிருக்கும் 2 போட்டிகளில் வென்றால் மட்டுமே போதும் அரையிறுதிக்கு சென்றுவிடலாம் என எதிர்ப்பார்ப்பு இருந்தது.
வெஸ்ட் இண்டீஸ் படுதோல்வி..
அகமதாபாத்தில் பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதலிரண்டு ஓவரில் 29 ரன்களை குவித்து மிரட்டலாக தொடங்கியது. ஆனால் பந்துவீச்சில் தரமான கம்பேக் கொடுத்த தென்னாப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளாக வீழ்த்த 83 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது வெஸ்ட் இண்டீஸ்.
எளிதாக வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட்டாகிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போது, 8வது விக்கெட்டுக்கு ஜோடிசேர்ந்த ரொமாரியோ ஷெபர்ட் மற்றும் ஜேசன் ஹோல்டர் இருவரும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி அணியை மீட்டு எடுத்துவந்தனர். 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகளை பறக்கவிட்ட ஷெபர்ட் 52 ரன்களும், 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களை விரட்டிய ஜேசன் ஹோல்டர் 49 ரன்களும் அடிக்க 20 ஓவர் முடிவில் 176/8 ரன்களை குவித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.
177 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 16.1 ஓவரில் 1 விக்கெட்டை மட்டுமே விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது. தென்னாப்பிரிக்கா கேப்டன் எய்டன் மாக்ரம் 82 ரன்கள் அடித்து மிரட்டினார்.
இந்தியாவிற்கு அதிகரித்த வாய்ப்பு..
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தோல்விக்கு முன்பு +5 நெட் ரன்ரேட்டில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, தென்னாப்பிரிக்கா உடனான தோல்விக்கு பிறகு +1.7ஆக குறைந்துள்ளது. இது இந்தியாவிற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.
முதலில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் தோற்றதையடுத்து இந்தியா மீதமிருக்கும் 2 போட்டிகளை வென்றாலே அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிடும். ஆனால் ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகள் மோதும் போட்டி மழையால் கைவிடப்பட்டால் கூட இந்திய அணி நெட் ரன்ரேட் அடிப்படையில் முன்னேறக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது.
ஜிம்பாப்வேவுக்கு எதிராக நடைபெறும் இன்றைய போட்டியில் 148 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றால், வெஸ்ட் இண்டீஸ் வைத்திருக்கும் ரன்ரேட்டை விட இந்தியா அதிக புள்ளிகளை பெறும். அப்படி நடைபெறும் பட்சத்தில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும்போட்டி நடைபெறாமல் போனால் கூட இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிடும். இரண்டு அணிகளும் மோதும் கடைசிபோட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது.

