T20 WC | அரையிறுதிக்குள் நுழையுமா பாகிஸ்தான்? வாய்ப்பு எப்படி?
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழையுமா என்பது குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தற்போது எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுப் பிரிவில் விளையாடி வருகின்றன. இந்த அணிகள், அரையிறுதிக்குச் செல்லும் முனைப்புடன் விளையாடி வருகின்றன. அந்த வகையில், இந்தியாவும் பாகிஸ்தானும் அரையிறுதி வாய்ப்பை எட்டுமா என்பதே பல ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்த இந்தியா, அடுத்து வரும் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸிடம் அதிக ரன்ரேட்டில், கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல், பரம எதிரியான பி பிரிவில் இடம்பிடித்திருக்கும் பாகிஸ்தானுக்கும் இதே நிலைமை என்றுதான் சொல்ல வேண்டும்.
இங்கிலாந்திடம் தோல்வி கண்ட பாகிஸ்தான் அணி, தனது கடைசி சூப்பர் 8 போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது. அரையிறுதிக்கு தகுதிபெற இந்தப் போட்டியில் பாகிஸ்தான் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற்றால் பாகிஸ்தானின் புள்ளி எண்ணிக்கை மூன்றாக உயரும். அதேநேரத்தில், இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தால், எந்தவித வாய்ப்புமின்றி தொடரைவிட்டு வெளியேறிவிடும்.
ஒருவேளை அந்த அணியுடன் வெற்றிபெற்றால், மற்ற அணிகளின் போட்டி முடிவுகளும் பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைய வேண்டும். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்தும், மற்றொரு போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இலங்கையும் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு நடந்தால், பாகிஸ்தான் அரையிறுதி செல்வதற்கு ஒரு வாய்ப்பு கிட்டும்.
இன்னொரு புறம், நியூசிலாந்து அணி தங்களுக்கு மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்று, மற்றொன்றில் தோல்வியடைந்தால், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். (பாகிஸ்தான் இலங்கையை வீழ்த்தியிருக்க வேண்டும்). இந்தச் சூழ்நிலையில் எந்த அணியின் நிகர ரன் ரேட் அதிகமாக உள்ளதோ, அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும். ஒருவேளை மழை காரணமாக போட்டிகள் ரத்தானால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும். அப்படியும் ரன் ரேட்டில் இருக்கும் அணியே அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றும். மொத்தத்தில் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு அதலபாதாளத்தில் உள்ளது என்பதே உண்மை.

