இன்டர்நெட் வசதி கூட இல்லாத கிராமம்! 21 வயதில் செக்யூரிட்டி வேலை! WI ஜாம்பவான்களை அழவைத்த ஷமர் ஜோசப்!

உலகத்தின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக திகழ்ந்துவரும் ஆஸ்திரேலியா அணியை, அவர்களின் கோட்டை என சொல்லப்படும் கப்பாவில் வைத்து 24 வயது இளம் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஒருவர் தகர்த்தெறிந்துள்ளார்.
ஷமர் ஜோசப்
ஷமர் ஜோசப்ICC

எது உங்களை அழவைக்கும்? எந்த ஒன்றை நாம் உயிராகவும், உணர்வாகவும் வைத்து போற்றுகிறோமே! அதில் நம்மால், நம்மை சேர்ந்தவர்களால் ஒரு வெற்றியை கூட ருசிக்க முடியாதபோது எழும் ஏக்கமும், வலியும் நெஞ்சத்தில் உறைந்து நிற்கும் தருணத்தில்!... நான் இருக்கிறேன் வாருங்கள், இதோ இதற்குத்தானே இத்தனை வருடங்களாய் ஏங்கி தவமாய் காத்திருந்தீர்கள் என ஒரு வீரன் உங்களை முதல் வெற்றிக்கு அழைத்துச்செல்லும்போது! உங்களின் உள்மனம் பீரிட்டு அழும் இல்லையா? அப்படி ஒரு அழுகையைதான் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் வீரர்களான லாரா மற்றும் கார்ல் கூப்பர் இருவரும் கண்களில் தேக்கிவைத்திருந்தனர்.

21 வருடங்கள் ஆகிவிட்டது... வலிமையான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் வெல்வதற்கு! 27 வருடங்கள் ஆகிவிட்டது ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கு! 56 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆஸ்திரேலியாவை கப்பா மைதானத்தில் வைத்து வீழ்த்துவதற்கு! இப்படி ஒரு நூற்றாண்டுகால தோல்வியின் வடுக்களை ஆற்றுப்படுத்துவதற்கு, இண்டர்நெட் வசதிகூட இல்லாத குக்கிராமத்தில் இருந்து ஒரு வீரர் வரவேண்டியிருந்தது.

2021ம் ஆண்டுவரை ஒரு வணிக வளாகத்தில் செக்யூரிட்டி வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு இளைஞன்தான், 56 ஆண்டுகாலமாக ஆட்டுவைக்கும் ஆஸ்திரேலியா அணியை அவர்களின் கோட்டையான கப்பாவில் வைத்து வீழ்த்தப்போகிறான் என்றால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்! ஆனால் அதை தற்போது கண்முன்னே நடத்திக்காட்டியிருக்கும் ஷமர் ஜோசப் என்ற 24 வயது இளைஞர், வெஸ்ட் இண்டீஸ் அணியின் புது நம்பிக்கையாகவும், ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும் உத்வேகமாகவும் மாறியுள்ளார்.

கண் இமைப்பதற்குள் 7 விக்கெட்டுகளை காலிசெய்த ஷமர்!

ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் கோட்டை என கருதப்படும் கப்பா மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா வெற்றிபெற 45 ரன்களே தேவை என்ற இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற 4 விக்கெட்டுகள் தேவை என்ற இடத்திலும் போட்டியிருந்தது. காம்ரான் கிரீன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் களத்தில் இருந்தவரை 216 என்ற இலக்கை ஆஸ்திரேலியா எளிதில் எட்டிவிடுவார்கள் என்ற எண்ணமே எல்லோருக்கும் இருந்தது. ஆனால் ஒரு நம்பமுடியாத பந்துவீச்சு தாக்குதலை வெளிப்படுத்திய அறிமுக வீரர் ஷமர் ஜோசப், காம்ரான் க்ரீன் மற்றும் டிராவிஸ் ஹெட் என இரண்டு ஸ்டார் வீரர்களை அடுத்தடுத்த 2 பந்துகளில் ஸ்டம்புகளை தகர்த்து வெளியேற்றியபோது தான், எல்லாமே வெஸ்ட் இண்டீஸ் பக்கம் திரும்பியது.

green
green

அடுத்தடுத்து வந்த மிட்செல் மார்ஸ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் என ஆஸ்திரேலியாவின் 6 விக்கெட்டுகளை கண் இமைப்பதற்குள் தட்டித்தூக்கினார் ஷமர். ஒருகணம் என்னப்பா நடக்குது இங்க? ஏதும் மாயாஜாலம் நிகழ்கிறதா! என்ற எண்ணமே எல்லோருக்கும் தோன்றியது. ஆனால் என்னதான் ஷமர் ஜோசப் மாயாஜாலம் நிகழ்த்தினாலும், ஒருமுனையில் நிலைத்து நின்ற ஸ்டீவ் ஸ்மித் வெற்றிக்கான ரன்களை தேடுவதில் வெற்றிகரமாகவே இருந்தார்.

alex carey
alex carey

ஷமரின் அற்புதமான ஸ்பெல்லால் போட்டியானது ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 25 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு 1 விக்கெட்டும் என தலைகீழாக மாறியது. ஆனால் 91 ரன்களுடன் களத்திலிருந்த ஸ்டீவ் ஸ்மித் முக்கியமான நேரத்தில் சிக்சர், பவுண்டரி என பறக்கவிட்டு வெற்றிக்கு தேவையாக 10 ரன்களுக்கு எடுத்துவந்தார். எல்லோரின் பார்வையும் ஸ்டீவ் ஸ்மித் மீது இருந்த நிலையில், ஷமர் ஜோசப்பின் பார்வை மட்டும் 11வது வீரரான ஹசல்வுட் மீது தான் இருந்தது.

ஆஸ்திரேலியா வெற்றிபெற 10 ரன்கள் இருந்தபோது ஓவரின் 4வது பந்தில் சிங்கிள் எடுத்த ஸ்மித், கடைசி 2 பந்துகளை ஹசல்வுட்டிற்கு விட்டுத்தந்தார். ஆனால் இரண்டு பந்தெல்லாம் எதற்கு என கெத்துக்காட்டிய ஷமர், 5வது பந்திலேயே ஹசல்வுட்டின் ஸ்டம்பை தகர்த்தெறிந்தார். பரபரப்பான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 27 ஆண்டுகளுக்கு பிறகு புது வரலாற்றை எழுதியது.

யார் இந்த ஷமர் ஜோசப்?

1999ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி கயானாவின் பராகாராவில் பிறந்தவர் ஷமர் ஜோசப். 2018-ம் ஆண்டுவரை இண்டர்நெட் வசதிகூட இல்லாத சூழலில்தான் ஷமர் வளர்ந்துவந்தார். கிரிக்கெட்டின் மீது தீராத காதல் கொண்ட அவருடைய ரோல் மாடல் என்றால், அது வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான்களான ஆம்ப்ரோஸ் மற்றும் வால்ஸ் இருவர் மட்டும் தான். வேகப்பந்துவீச்சு மீது பைத்தியமாக இருந்த ஷமர், பந்துகள் வாங்க பணம் இல்லாத வறுமையின் காரணத்தால் உருகிய பாட்டில்களையும், கொய்யாப் பழங்களையும் கொண்டுதான் தன்னுடைய முதல் பந்துவீச்சு பயிற்சியையே மேற்கொண்டுள்ளார்.

shamar
shamar

வாட்டி வதக்கிய பொருளாதார நிலையால் 2021-ம் ஆண்டுவரை பெர்பிஸில் வணிக வளாகம் ஒன்றில் செக்யூரிட்டி வேலை பார்த்துவந்துள்ளார் ஷமர். அங்கிருந்தே கிடைக்கும் நேரத்தில் அருகில் இருக்கும் கிளப்களில் சிறப்பாக பந்துவீசினால் பணம் கிடைக்கும் என்பதால் சென்று பந்துவீசி வருவாராம். ஜோசப் முதலில் டக்பர் பார்க் கிரிக்கெட் கிளப்பிற்காக சில முதல் பிரிவு மற்றும் இரண்டாம் பிரிவு போட்டிகளில் விளையாடும்போது வெளிப்புற கண்களில் பட்டுள்ளார்.

ஷமர் ஜோசப்
27 ஆண்டு தோல்விக்கு முற்றுப்புள்ளி! 1997-க்கு பிறகு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது WI!

மாற்று வீரராக உள்ளே வந்து வரலாறு படைத்த ஷமர்!

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் ரொமாரியோ ஷெப்பர்ட் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுகமான அவர், 2022-23 மேற்கிந்தியத் தீவுகள் சாம்பியன்ஷிப் தொடரின்போது 2023 பிப்ரவரி 1ம் தேதி பார்படாஸுக்கு எதிரான ஆட்டத்தில் கயானாவுக்காக தனது முதல் தர அறிமுக போட்டியில் விளையாடினார். தொடர்ந்து தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் 2023-24 சூப்பர்50 கோப்பையின் போது லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் கயானாவுக்காக அறிமுகமானார்.

shamar
shamar

பின்னர் 2023ம் ஆண்டு நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக்கின் போது, ​​கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில் கீமோ பால் காயத்தால் வெளியேறபோது, அவருக்கு பதிலாக மாற்றுவீரராக களமிறங்கியவர்தான் ஷமர். அங்கு தன்னுடைய பந்துவீச்சு திறமையை நிரூபித்த ஷமர் ஜோசப், அதற்கு அடுத்த நகர்வாகவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கான தனது முதல் டெஸ்ட் அழைப்பைப் பெற்றார். அதற்கு பிறகு அவர் நிகழ்த்திக்காட்டியதெல்லாம் வரலாறு.

ஷமர் ஜோசப்
“இன்று வெஸ்ட் இண்டீஸ் அணி தலைநிமிர்ந்து விட்டது”!- வரலாற்று வெற்றிக்கு பின் கண்ணீருடன் பேசிய லாரா!

2 போட்டிகளில் ஷமர் படைத்த வரலாற்று சாதனைகள்!

* அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வீசிய முதல் பந்திலேயே டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தினார் ஷமர்.

முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டெரெல் ஜான்சனுக்குப் பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த இரண்டாவது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஷமர் பெற்றார்.

shamar
shamar

* கடந்த 17 ஆண்டுகளில் தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 5 விக்கெட்களை பதிவு செய்த முதல் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்தார் ஷமர் ஜோசப்.

* 1997-ல் பெர்த்தில் உள்ள WACA மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில்தான் கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்றிருந்தது. அந்தப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில், ஷமரின் ரோல் மாடலான ஆம்ப்ரோஸ் ஏழு விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

இந்நிலையில் 27 ஆண்டுகளுக்கு தன்னுடைய குரு பெற்றுத்தந்த வெற்றிக்கு பிறகு, அதேபோல் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸை வெற்றிக்கு அழைத்துச்சென்றுள்ளார் சிஷ்யன் ஷமர் ஜோசப்.

ஷமர் ஜோசப்
இதனாலதான் ஸ்போர்ட்ஸுக்கு இவ்வளவு ரசிகர்கள்! ஒரே நாளில் பதிவான 3 நம்பமுடியாத வரலாற்று சம்பவங்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com