“இன்று வெஸ்ட் இண்டீஸ் அணி தலைநிமிர்ந்து விட்டது”!- வரலாற்று வெற்றிக்கு பின் கண்ணீருடன் பேசிய லாரா!

1968-ம் ஆண்டுக்கு பிறகு 56 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியா அணியை அவர்களின் கோட்டையான கப்பாவில் வைத்து வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி. அப்போது வர்ணனையாளர் பெட்டியில் இருந்த முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா கண்ணீர் சிந்தினார்.
பிரையன் லாரா
பிரையன் லாராX

கிரிக்கெட் தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்தில் ஒரு ஜாம்பவான் அணியாக வலம்வந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, உலக கிரிக்கெட் அணிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியது. “பார்த்தாலே பயம் வரக்கூடிய” அணியாக முதலில் வலம்வந்தது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தான். அவர்களிடம் தலைசிறந்த வீரர்கள் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து தரப்பிலும் இருந்தனர். அதன் காரணமாக தான் முதல் இரண்டு ஐசிசி கோப்பைகளை தொடர்ச்சியாக வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்றாவது முறையும் 1983 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

விவ் ரிச்சர்ட்ஸ், ப்ரைன் லாரா, வால்ஸ், சந்தர்பால், லியாட், ஆம்ரோஸ், சோபர்ஸ், க்றிஸ் கெயில், மார்ஷல், ட்வெய்ன் பிராவோ முதலிய பல ஜாம்பவான் வீரர்கள் நிரம்பி வழிந்த வெஸ்ட் இண்டீஸ் அணி தான், தற்போது நல்ல வீரர்களைக் கொண்டிருந்தாலும் தடுமாறி வருகிறது. திறமையான வீரர்கள் இருந்தபோதும் கூட அந்த அணியால் 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு கூட தகுதிபெற முடியாமல் போய்விட்டது. “ஒருகாலத்தில் எப்படி இருந்த அணி” என்ற கூற்றுமட்டுமே இருந்துவரும் நிலையில், அந்த அணியால் சமீபத்தில் பெரிய எழுச்சியை பெறமுடியவில்லை.

இந்நிலையில் தான் அறிமுக வீரரான ஷமர் ஜோசப்பின் 7 விக்கெட்டுகள் என்ற அசாத்தியமான பந்துவீச்சால், ஆஸ்திரேலியாவை அவர்களின் சொந்த மண்ணில் வைத்து 27 ஆண்டுகளுக்கு பிறகு வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது இளம் வெஸ்ட் இண்டீஸ் அணி. அந்த வெற்றியின் போது வர்ணனையாளர் பெட்டியில் இருந்த ப்ரைன் லாரா, கண்ணீர் சிந்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இனி வெஸ்ட் இண்டீஸ் அணி தலை நிமிர்ந்து நிற்கும்! - கண்ணீருடன் கூறிய லாரா

ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டியின் போது, வர்ணனையாளர் பெட்டியில் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் உடன் இருந்த பிரையன் லாரா வெற்றியின் போது கண்ணீருடன் காணப்பட்டார். வெற்றிக்கு பிறகு கில்கிறிஸ்ட் ப்ரைன் லாராவை கட்டிக்கொண்ட தருணம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது.

வரலாற்று வெற்றியின் போது வர்ணனையாளர் பெட்டியிலிருந்து பேசிய லாரா, “என்னால் நம்ப முடியவில்லை. ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 27 ஆண்டுகள் ஆகிறது. இந்த இளம் அனுபவமற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, புது வரலாற்றை எழுதியுள்ளது!. (கண்ணில் கண்ணீருடன்) இந்த வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று தலை நிமிர்ந்து நிற்கும். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் இன்று தலைநிமிர்ந்து நிற்கும். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் இன்று ஒரு மிகப்பெரிய நாள். ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்கள், இந்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்ற ஒவ்வொரு உறுப்பினருக்கும் வாழ்த்துக்கள்!” என்று கண்ணீருடன் கூறினார் பிரையன் லாரா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com