சர்ஃபராஸை மறைமுகமாக தாக்கி பேசிய சேவாக்! தோனியை வைத்து பதில் அட்டாக் செய்த ரசிகர்கள்! என்ன நடந்தது?

முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் துருவ் ஜுரேலின் அபாரமான ஆட்டத்தை புகழும் வேளையில், “மற்ற வீரர்களை போல எந்த டிராமாவும், ஊடக விளம்பரமும் இல்லாமல் சிறப்பாக விளையாடுகிறார்” என்று சர்பராஸ் கானை அட்டாக் செய்து பதிவிட்டது பேசுபொருளாக மாறியது.
விரேந்தர் சேவாக்
விரேந்தர் சேவாக்web

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என தற்போதே கைப்பற்றி அசத்தியுள்ளது. விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, கேஎல் ராகுல், முகமது ஷமி முதலிய மூத்தவீரர்கள் இல்லாமல் இளம் வீரர்கள் கொண்டு விளையாடிய இந்திய அணி, இங்கிலாந்தின் பாஸ்பால் கிரிக்கெட் பயணத்தில் முதல் டெஸ்ட் தொடர் தோல்வியை பரிசளித்துள்ளது.

4வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ் இரண்டிலும் 90 ரன்கள், 39 ரன்கள் என கலக்கிய துருவ் ஜுரேல், இந்திய ரசிகர்களின் மனதை கவர்ந்ததோடு ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெறும் 15 முதல்தர போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கும் துருவ் ஜுரேல், பல ஜாம்பவான் அணிகளை வீழ்த்தி தோல்வியே இல்லாமல் பயணித்துவரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக தரமான எதிர்ப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்ஸில் அவர் அடித்த 90 ரன்கள், இரட்டை சதத்திற்கு நிகரானது என்று ரசிகர்களால் போற்றப்பட்டது. அவரால் தான் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது என்று ரசிகர்கள் பாராட்டிவருகின்றனர்.

Dhruv Jurel
Dhruv Jurel

இந்நிலையில், 3வது நாள் ஆட்டத்தின் போது துருவ் ஜுரேலை புகழ்ந்து பதிவிட்டிருந்த விரேந்தர் சேவாக், அவரை புகழும் அதேவேளையில் சர்பராஸ் கானை அட்டாக் செய்து எழுதியிருந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரசிகர்களின் அதிகப்படியான கமெண்டுகளால் பின்னர் யாரையும் குறிப்பிடவில்லை என்று பதில் ட்வீட் போட்டார் சேவாக்.

விரேந்தர் சேவாக்
“மனசுல என்ன ஹீரோ-னு நினைப்பா?” - சர்ஃபராஸ் கானை எச்சரித்த ரோகித் சர்மா! என்ன நடந்தது?

எந்த டிராமாவும் இல்லாமல் சிறப்பாக விளையாடுகிறார்!

துருவ் ஜுரேல் குறித்து புகழ்ந்து பதிவிட்டிருந்த சேவாக், “எந்த ஊடக விளம்பரமும், நாடகமும் இவருக்கு இல்லை, ஆனால் கடினமான நேரத்தில் அவருடைய சிறந்த திறமைகள் மற்றும் திடமான மனநிலையை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடினார். மிக அருமை துருவ் ஜுரேல், வாழ்த்துக்கள்!” என்ற பதிவை சேவாக் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

சேவாக்கின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், சமீபத்தில் சர்பராஸ் கானுக்கு தான் அதிக ஊடகங்கள் ஆதரவும், அணியில் வாய்ப்பு கிடைத்த பிறகு சர்பராஸ் மற்றும் அவருடைய தந்தை இருவரும் கண்ணீர் சிந்திய நெகிழ்ச்சியான தருணம் இருந்தது, சேவாக் சர்பராஸ் கானை தான் கூறுகிறார் என்று புரிந்துகொண்டனர்.

துருவ் ஜுரேலை பாராட்டி பேசிய வீரேந்திர சேவாக், சர்பராஸ் கானை அட்டாக் செய்து பதிவிட்டிருந்த சூழலில், “ஒருவீரரை புகழ்ந்து ஏன் மற்ற வீரரை தாக்கி பேசவேண்டும், அப்படி என்ன டிராமா சமீபத்தில் நடந்தது, சர்பராஸ் கானை சொல்கிறீர்கள் என்றால் அவர் கிடைத்த வாய்ப்பில் ஜுரேலுக்கு முன்னதாகவே நிரூபித்துவிட்டாரே” என்று பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் எழுப்பினர்.

அத்துடன் எதிர்கேள்விகளை வைத்த மற்றொரு ரசிகர், “ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக பார்க்கப்படும் ஒருவரிடமிருந்து ஒரு தாழ்வான பதிவு இது. சர்பராஸ் கான் முதல்தர கிரிக்கெட்டில் செய்யவேண்டிய அனைத்தையும் செய்துதான் அணிக்குள் வந்தார், ஊடக ஆதரவால் இல்லை” என்று பதிவிட்டார்.

மேலும் ஒருவர், “சர்ஃபராஸ் கானின் அறிமுகத்திற்குப் பிறகு ஊடகங்களில் அவருக்குக் கிடைத்த ஆதரவை கருத்தில் கொண்டு தான் இந்த தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறீர்கள். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்நாட்டு கிரிக்கெட்டில் அவருடைய போராட்டத்தை பார்க்க முடியாத ஒரு மலிவான நபராக மாறிவிட்டீர்கள். அவர் தனது இடத்திற்காக தேர்வாளர்களுக்கு மத்தியில் உண்மையில் போராடினார்” என்று பதிவிட்டார்.

மேலும் ஒருவர் தோனியுடன் ஒப்பிட்டு, “தற்போது உங்களுடைய இந்த பதிவை பார்த்தால், உங்களை அணியிலிருந்து நீக்கியது குறித்து தோனி மீது மரியாதை அதிகரிக்கிறது” என்று பதில் அட்டாக் செய்தார்.

விரேந்தர் சேவாக்
”அரசியல்வாதி மகனால் கேப்டன் பதவியை இழந்தேன்!” - அதிர்ச்சி பதிவிட்ட ஹனுமா விஹாரி! நடந்தது என்ன?

சர்பராஸ் கானை சொல்லவில்லை என மறுத்த சேவாக்!

ரசிகர்களின் தொடர் தாக்குதலுக்கு பிறகு மீண்டும் ஒரு ட்வீட் செய்த சேவாக், “யாரையும் குறைத்து கூறவில்லை, ஆனால் மிகைப்படுத்தல் என்பது வீரர்களின் செயல்திறன் சார்ந்து சமமாக இருக்க வேண்டும். சில தோழர்கள் அற்புதமாக பந்துவீசியிருக்கிறார்கள், சிலர் விதிவிலக்காக சிறப்பாக பேட்டிங் செய்திருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்குத் தகுதியான ஹைப் கிடைக்கவில்லை” என்று ஆகாஷ் தீப், ஜெய்ஸ்வால், ஜுரல் உள்ளிட்டோரை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

ஆனால் சிறிது நேரத்தில் குல்தீப் யாதவை புகழ்ந்து ட்வீட் செய்த சேவாக், மீண்டும் ஊடக ஆதரவு இல்லை என்ற டேக் லைனை பதிவிட்டார். அதில், “மிகைப்படுத்தல் என வரும்போது, ​​​​குல்தீப் யாதவ் மிகைப்படுத்தப்பட வேண்டியவர்களில் ஒருவர். பல ஆண்டுகளாக தன்னுடைய திறமைகளால் விதிவிலக்காக இருந்தார், ஆனாலும் அவரை பெரிய விஷயமாக விளம்பரப்படுத்த ஆன்லைன் ரசிகர் மன்றமோ அல்லது நபர்களோ கிடைக்கவில்லை. அவர் தற்போது பெறுவதை விட அதிக ஆதரவு மற்றும் பெருமைக்கு தகுதியானவர்” என்று பதிவிட்டார்.

விரேந்தர் சேவாக்
“நீங்கள் தேடும் வீரர் நான்தான்”-விஹாரி பதிவுக்கு ரிப்ளை செய்த அரசியல்வாதி மகன்-தீவிரமாகும் விவகாரம்?

சேவாக் மனநிலை யாருடைய பிரதிபலிப்பு?

சேவாக் எவ்வளவு மோசமான செய்தி செய்தியை கடத்துகிறார் என்பது அவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. நாட்டின் தற்போதைய சூழல் அவருக்கு நன்றாக தெரியும். இப்படி ஒரு பதிவை வெளியிட்டால் அது எப்படி புரிந்து கொள்ளப்படும் என்று அவருக்கு நிச்சயம் தெரியும்.

ஏனெனில் துருவ் ஜுரல் முதல் நாளில் நன்றாக பேட்டிங் செய்ததில் இருந்து பலரும் இது தொடர்பாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். போதாக்குறைக்கு ஜுரல் தந்தை ராணுவ பின்புலம் என்பது பலருக்கும் ரொம்பவே தோதாக மாறிவிட்டது. இந்த விவாதம் விளையாட்டில் இருந்து அரசியலை நோக்கி முதல் நாளில் இருந்தே பலரும் திரிக்க தொடங்கிவிட்டார்கள். எல்லாவற்றையும் மதத்தின் பெயராலேயே பார்த்து மனநோய்க்கு ஆளான கும்பல் தான் சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்துக் கொண்டு இத்தகைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இதெல்லாம் தாண்டி சர்ஃபராஸ் கானின் தந்தை நௌஷாத் கானுக்கு அவரது உழைப்பை பாராட்டி கார் பரிசாக தருவதாக அறிவித்திருந்த மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவையும் மிக மோசமாக ட்ரோல் செய்து வருவதெல்லாம் எத்தகைய கேவலமான செயல்.

எந்த புரிதலும் இல்லாமல் சோஷியல் மீடியாவில் கருத்து பதிவிடுபவர்கள் பற்றி கவலையில்லை. ஆனால், அனுபவம் வாய்ந்த சேவாக்கிற்கு இரண்டு வீரகளின் பின்னணியும் தெரியாதா?. அவர் செய்ததை சுட்டிக்காட்டிய பிறகும் தன்னுடய கருத்தில் அவர் பிடிவாதமாக இருப்பது எத்தகைய பண்பு.

சர்ஃபராஸ் கானின் போரட்ட பின்னணியை தெரிந்த யாரும் அவர் முதல் போட்டியில் களமிறங்கிய சூழலை புரிந்து கொள்வார்கள். அது ஒரு நீண்ட நெடிய போராட்டத்திற்கான பலன் கிடைத்த நாள். அதனை அவரும் முதல் போட்டியில் நன்றாகவே நிரூபித்தார். இரண்டாவது போட்டியில் சர்ஃபராஸ் கான் ஜோபிக்கவில்லை என்பது நிதர்சனம் தான். ஆனால், இரண்டு போட்டிகளிலேயே எப்படி ஒரு முடிவுக்கு வர முடியும்.

பட்டிதார் கூட தான் இந்த சீரிஸ் முழுவதுமே சரியாக ஆடவில்லை. ஏன் சுப்மன் கில் கூட நான்காவது போட்டியை தவிர்த்து மற்ற போட்டிகளில் மோசமாக விளையாடினார். அவருக்கு இன்னும் காலம் இருக்கிறது. பல முறை தன்னுடைய திறமையை நிரூபித்துதான் சர்ஃபராஸ் கான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். நிச்சயம் அவர் தனது போராட்ட குணத்திற்காக இந்திய அணிக்காக பல சாதனைகள் செய்வார் என்ற நம்பிக்கை அவரது ஆட்டத்தை தொடர்ச்சியாக கவனித்து வருபவர்களுக்கு புரியும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com