”அரசியல்வாதி மகனால் கேப்டன் பதவியை இழந்தேன்!” - அதிர்ச்சி பதிவிட்ட ஹனுமா விஹாரி! நடந்தது என்ன?

2024 ரஞ்சிக்கோப்பை தொடரின் காலிறுதிப்போட்டியில் மத்திய பிரதேச அணிக்கு எதிராக ஹனுமான் விஹாரியின் ஆந்திரா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவெளியேறியது.
ஹனுமா விஹாரி
ஹனுமா விஹாரிX

2024 ரஞ்சிக்கோப்பை தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி 5ம் தேதி தொடங்கிய 89வது ரஞ்சி சீசன், தற்போது காலிறுதி போட்டிகளை எட்டியுள்ளது. கோப்பைக்காக 38 அணிகள் மோதிய நிலையில், சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு, மும்பை, விதர்பா, கர்நாடகா, பரோடா, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரா ஆகிய 8 அணிகள் காலிறுதிப்போட்டியில் விளையாடுகின்றன.

இந்நிலையில் நான்கு காலிறுதி ஆட்டங்களில் 2 காலிறுதிப்போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளன. முடிவுக்கு வந்துள்ள 3வது காலிறுதிப்போட்டியில் சாய்கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணி நடப்பு சாம்பியன் அணியான சட்டீஸ்வர் புஜாராவின் சௌராஷ்டிரா அணியை வீழ்த்தி 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

சாய் கிஷோர்
சாய் கிஷோர்

அதேபோல 4வது காலிறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேச அணிக்கு எதிராக கடைசிவரை போராடிய ஹனுமா விஹாரியின் ஆந்திரா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அரையிறுதிசெல்லும் வாய்ப்பை இழந்தது. கடந்த 2023 ரஞ்சிக்கோப்பை தொடரிலும் மத்திய பிரதேச அணிக்கு எதிராக காலிறுதியில் தோற்று வெளியேறிய ஆந்திரா அணி, தொடர்ச்சியாக இரண்டாவது முறையும் வாய்ப்பை தவறவிட்டு வெளியேறியது.

முஷீர் கான்
முஷீர் கான்cricinfo

முதல் காலிறுதிப்போட்டியில் கர்நாடாகாவை எதிர்த்து விதர்பா அணியும், 2வது காலிறுதிப்போட்டியில் மும்பை அணியை எதிர்த்து பரோடா அணியும் விளையாடிவருகின்றன. இந்த சூழலில் தான் மத்திய பிரதேச அணிக்கு எதிராக 4 ரன்னில் தோற்றபிறகு பேசியிருக்கும் ஆந்திரா அணி வீரரான ஹனுமா விஹாரி, தான் ஏன் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அதிர்ச்சிக்குரிய தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

ஹனுமா விஹாரி
“மனசுல என்ன ஹீரோ-னு நினைப்பா?” - சர்ஃபராஸ் கானை எச்சரித்த ரோகித் சர்மா! என்ன நடந்தது?

அரசியல்வாதி மகனால் பறிபோன கேப்டன் பதவி!

காலிறுதிப்போட்டியில் தோற்றபிறகு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் ஹனுமா விஹாரி, காலிறுதிப்போட்டியில் 4 ரன்னில் தோல்வியடைந்ததற்காக வருத்தம் தெரிவித்தார். அதேவேளையில் முதல் போட்டியில் கேப்டனாக இருந்த தான், ஏன் அதற்கு பிறகு கேப்டனாக செயல்படவில்லை என்ற அதிர்ச்சிக்குரிய தகவலை பகிர்ந்துகொண்டார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பதிவில் பேசியிருக்கும் அவர், “காலிறுதிப்போட்டியில் கடைசி வரை நாங்கள் கடுமையாக போராடினோம் ஆனால் அது நடக்கவில்லை. மீண்டுமொரு காலிறுதியில் ஆந்திரா தோல்வியடைந்தது வருத்தமளிக்கிறது. இந்தப் பதிவில் நான் சில உண்மைகளை முன்வைக்க விரும்புகிறேன். பெங்கால் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் நான் கேப்டனாக இருந்தேன், அந்த ஆட்டத்தின் போது 17வது வீரர் ஒருவரை தவறு செய்ததற்காக கேப்டன் என்ற முறையில் நான் கத்தினேன், அவர் தனது அப்பாவிடம் (அரசியல்வாதி) புகார் செய்தார், பதிலுக்கு அவரது அப்பா என் மீது நடவடிக்கை எடுக்குமாறு கிரிக்கெட் சங்கத்திடம் கேட்டார். இருப்பினும் அந்த போட்டியில் கடந்தாண்டு பைனலிஸ்ட் அணியான பெங்கால் அணிக்கு எதிராக நாங்கள் 410 ரன்களை எதிர்கொண்டு வெற்றிகரமாக விரட்டினோம். ஆனால் அந்த வீரரின் விவகாரத்தால் என்மீது எந்தத் தவறும் இல்லாதபோதும் கேப்டன் பதவியிலிருந்து விலகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன்” என்று அதிர்ச்சிக்குரிய தகவலை வெளிப்படுத்தினார்.

hanuma vihari
hanuma vihari

மேலும் அந்த வீரரிடம் தனிப்பட்ட முறையில் எதற்காகவும் கத்தவில்லை என்று தெரிவித்திருக்கும் விஹாரி, “அந்த வீரரிடம் நான் தனிப்பட்ட ரீதியில் எதுவும் சொல்லவில்லை. இருந்தபோதும் என்னை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது சங்கம். கடந்தாண்டு ரஞ்சிக்கோப்பையில் உடல்நிலை மோசமாக இருந்தபோது அணிக்காக இடதுகையால் பேட்டிங் செய்த வீரர், கடந்த 7 ஆண்டுகளில் ஆந்திராவை 5 முறை நாக்அவுட் சுற்றுக்கு அழைத்துச்சென்ற வீரர் மற்றும் இந்தியாவுக்காக 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரரை விட அந்த 17வது வீரர் மற்றும் அரசியல்வாதியின் கூற்று தான் முக்கியம் என்று சங்கம் நடந்துகொண்டது வருத்தமளிக்கிறது.

hanuma vihari
hanuma vihari

அந்த நிகழ்வுக்கு பிறகு நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன், இருந்தபோதும் இந்த சீசனில் நான் தொடர்ந்து விளையாடியதற்கு ஒரே காரணம் நான் எனது விளையாட்டையும் எனது அணியையும் மதிக்கிறேன் என்பதால் தான். இதில் சோகமான பகுதி என்னவென்றால், வீரர்கள் எதைச் சொன்னாலும் கேட்க வேண்டும் என்று சங்கம் நினைக்கிறது. கடந்த ஜனவரி 5ம் தேதி நடந்த போட்டியில் ஏற்பட்ட நிகழ்வால் நான் அவமானமாகவும் வெட்கமாகவும் உணர்ந்தேன், ஆனாலும் ஒரு மாதமாக இன்று வரை நான் எதையும் வெளிப்படுத்தவில்லை” என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

hanuma vihari
hanuma vihari

மேலும் பேசிய அவர், “எனது சுயமரியாதையை இழந்த பிறகு இனி ஆந்திராவுக்காக ஒருபோதும் விளையாட மாட்டேன் என்று முடிவு செய்துள்ளேன். நான் அணியை விரும்புகிறேன். ஒவ்வொரு ரஞ்சிக்கோப்பை சீசனிலும் நாம் வளரும் விதத்தை பார்த்து நான் மகிழ்ச்சியடைந்துள்ளேன், ஆனால் நாம் வளருவதை சங்கம் விரும்பவில்லை” என்று விரக்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்தாண்டு ரஞ்சிக்கோப்பை காலிறுதிப்போட்டியில் 76 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை ஆந்திரா அணி இழந்து தடுமாறியபோது, அப்போது கையில் அடிப்பட்டதால் ரிட்டர்ய்ட் ஹர்ட்டில் வெளியேறியிருந்த ஹனுமா விஹாரி மீண்டும் களத்திற்கு வந்து உடந்தை கையுடன் இடது கையால் பேட்டிங் செய்தார். 2023 காலிறுதியில் முதல் இன்னிங்ஸில் 379 ரன்களை குவித்து நல்ல நிலைமையில் இருந்த ஆந்திரா அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது.

ஹனுமா விஹாரி
INDvENG|“வெளிப்படைத்தன்மை தேவை; DRS இயக்குபவர்களை கேமரா கொண்டு கண்காணிக்க வேண்டும்!”- மைக்கேல் வாகன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com