ஆஸ்திரேலிய மண்ணில் களமிறங்கிய இந்திய அணி.. விவாதத்தை கிளப்பிய விராட் கோலியின் பதிவு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரில் களமிறங்க உள்ள விராட் கோலியின் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்க இருக்கிறது. இதற்காக சுப்மன் கில் தலையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி, ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றுள்ளது. இதில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற மூத்த வீரர்களான ரோகித் சர்மாவும், விராட் கோலியும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் இடம்பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் கிண்டல் செய்து வெளியிட்டுள்ள ஒரு விளம்பர வீடியோ, இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பையில், பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்ததாகக் கூறப்படும் ஒரு நிகழ்வை கிண்டல் செய்யும் விதமாக இந்த வீடியோ அமைந்திருந்தது.
அந்த வீடியோவில், வர்ணனையாளர் இயன் ஹிக்கின்ஸ், இந்திய வீரர்களின் மிகப்பெரிய பலவீனம் என்று கூறி, கை குலுக்காத விஷயத்தைக் குறிப்பிடுகிறார். அதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் கை குலுக்கலுக்குப் பதிலாக என்னென்ன செய்யலாம் என்று தங்களது பாணியில் சில சைகைகளைச் செய்து காட்டுகின்றனர். அவர்களுடைய அருவருப்பான செயல்கள்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், அது தற்போது சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இன்னொரு புறம், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ரோகித் சர்மா, விராட் கோலி ஓய்வு பெற்றதைப்போல ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் அவர்களை ஓரங்கட்ட முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை வரை விளையாடுவதாக விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்குள்ளேயே அவர்களை வெளியேற்ற முயற்சிகள் நடப்பதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில்தான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் தொடர், கோலி மற்றும் ரோகித்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு தொடராகவே பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலிதான் விராட் கோலியின் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்டுள்ள பதிவில், "The only time you truly fail, is when you decide to give up." ("நீங்கள் எப்போது கைவிட முடிவு செய்கிறீர்களோ, அப்போதுதான் நீங்கள் உண்மையாகத் தோற்கிறீர்கள்") எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அவரது ஓய்வு பற்றிய வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார் என்றே சொல்லப்படுகிறது. சாதாரணமாக, இது ஓர் உத்வேகம் தரும் பொன்மொழி என்றாலும்கூட, இதன்மூலம் விராட் கோலி தேர்வுக் குழுவினருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் என்றே கூறப்படுகிறது. அதேநேரத்தில், இந்தப் பதிவால் மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் அவர் பேட்டாலும் தேர்வுக் குழுவினருக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றதிலிருந்தே, அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதிலும் ஒருநாள் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவையும் தற்போது மாற்றியிருப்பது கவனிக்கத்தக்கது.