50 பந்தில் சதம் விளாசி ஸ்மிரிதி மந்தனா சாதனை
50 பந்தில் சதம் விளாசி ஸ்மிரிதி மந்தனா சாதனைx

50 பந்தில் ODI சதம்| விராட் கோலி சாதனையை உடைத்த மந்தனா.. அதிவேக இந்தியராக வரலாறு!

இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆடவர்-மகளிர் இரண்டு கிரிக்கெட்டையும் சேர்த்து அதிவேக சதம் விளாசினார் ஸ்மிரிதி மந்தனா.
Published on

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் வரும் செப்டம்பர் 30-ம் தேதிமுதல் தொடங்கி நடைபெறவிருக்கிறது.

அதற்கு முன்னதாக இந்தியாவிற்கு வந்திருக்கும் ஆஸ்திரேலியா மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

ஆஸ்திரேலியா - இந்தியா
ஆஸ்திரேலியா - இந்தியா

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா நிர்ணயித்த 282 ரன்கள் இலக்கை 44.1 ஓவரில் சேஸ் செய்த ஆஸ்திரேலியா வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது.

2வது ஒருநாள் போட்டியில் கம்பேக் கொடுத்த இந்திய அணி ஆஸ்திரேலியாவை 102 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாற்று தோல்வியை பரிசளித்தது. 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்பது இதுவே முதல்முறை.

இந்நிலையில் தொடரை நிர்ணயிக்கும் 3வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கி நடைபெற்றது.

412 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா..

பரபரப்பாக தொடங்கிய 3வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியில், அனைத்து வீரர்களும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ஜார்ஜியா 81 ரன்னிலும், எல்லிஸ் பெர்ரி 68 ரன்னிலும் வெளியேற, 4வது வீராங்கனையாக களமிறங்கிய பெத் மூனி 23 பவுண்டரிகள் 1 சிக்சர் என துவம்சம் செய்து 138 ரன்கள் குவித்து அசத்தினார். அதுமட்டுமில்லாமல் 57 பந்தில் சதம் விளாசி இந்திய பவுலிங்கை சிதறடித்தார். அவரின் அதிரடியால் 412 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய மகளிர் அணி..

413 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்மிரிதி மந்தனா ஆஸ்திரேலியாவிற்கு பதிலடி கொடுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 50 பந்தில் சதம் விளாசிய மிரட்டிய மந்தனா 63 பந்தில் 17 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 125 ரன்கள் அடித்து அசத்தினார். அவருக்குபிறகு வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 34 பந்தில் அரைசதமடித்து அசத்த இந்திய அணி 23 ஓவரில் 230 ரன்களை குவித்து வலுவான நிலையில் இருந்தது.

ஆனால் அடுத்தடுத்து மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத் இருவரும் அவுட்டாக இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு பறிபோனது. இறுதிவரை போராடிய தீப்தி ஷர்மா 72 ரன்கள் அடித்தாலும், இந்திய அணி 369 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது. முடிவில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.

புதிய வரலாறு படைத்த மந்தனா..

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 50 பந்தில் சதம் விளாசிய ஸ்மிரிதி மந்தனா, ஆடவர் - மகளிர் இரண்டு கிரிக்கெட்டையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த முதல் இந்தியராக மாறி வரலாறு படைத்தார்.

இதற்கு முன்பு 52 பந்தில் ஒருநாள் சதமடித்து முதலிடத்தில் இருந்த விராட் கோலியின் சாதனையை முறியடித்து முதல் இடம் பிடித்தார் ஸ்மிரிதி மந்தனா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com