
இந்தியாவில் நடைபெறும் ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவு பெறுவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. இந்த நிலையில் நாளை (நவ.15) நடைபெறும் முதலாவது அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து ஆகிய அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. கடந்த 2019 உலகக்கோப்பை அரையிறுதியில் இதே நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியைத் தழுவியிருந்தது. அதற்கு இந்த முறை பதிலடி தருமா என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடப்புத் தொடரில் இந்திய அணி 9 போட்டிகளிலும் வெற்றிபெற்றிருந்தாலும் ரசிகர்களுக்கு அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளே முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்திய அணியின் நட்சத்திர வீரராக விளங்கும் விராட் கோலிக்கு, இதுவே கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்தே பலரும், இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வாங்கி அவர் கையில் கொடுக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர். தற்போது இத்தொடர் இந்தியாவில் நடைபெறுவதால், இதற்குச் சாத்தியம் அதிகம் எனவும், இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது எனவும் அவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
இந்த நிலையில், விராட் கோலி நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் 9 இன்னிங்ஸ்களில் விளையாடி 2 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் உட்பட 594 ரன்களை விளாசி, அதிக ரன்கள் குவித்த வீரர்களில் முதல் இடத்தில் உள்ளார்.
எனினும், இதுவரை 4 உலகக்கோப்பை (2011, 2015, 2019. 2023) தொடர்களில் பங்கேற்றுள்ள விராட் கோலி, இதற்கு முன்பு நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தது குறித்து தற்போது அதிகம் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதாவது, உலகக்கோப்பை தொடரில் இந்தியா விளையாடிய அரையிறுதிப் போட்டிகளில் விராட் கோலி வெறும் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்துள்ளார். இதுதான் பேசுபொருளாகி உள்ளது.
- 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் வெறும் 9 ரன்களிலும்,
- 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதியில் 1 ரன்னிலும்,
- 2019ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 1 ரன்னிலும் ஆட்டமிழந்துள்ளார்.
ஆக, 3 போட்டிகளிலும் ஒற்றை இலக்கத்தில் விராட் கோலி ஆட்டமிழந்திருப்பதைக் குறிப்பிட்டு பலரும் விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இடதுகை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விராட் கோலி திணறி வருவது தொடர்கதையாகிறது. கடைசியாக ஆடிய 3 உலகக்கோப்பை தொடர்களின் அரையிறுதிச் சுற்றிலும் விராட் கோலி வஹாப் ரியாஸ், ஜான்சன் மற்றும் போல்ட் என்று இடதுகை பந்துவீச்சாளர்களிடம் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விராட் கோலி வரலாற்றை மாற்றுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.