
சச்சின் டெண்டுல்கரின் 49 ஒருநாள் சதங்கள் என்ற இமாலய சாதனையை யாராவது முறியடிப்பார்களா என்ற கேள்வி 10 வருடங்களுக்கு முன்பு கேட்கப்பட்டிருந்தால், முடியவே முடியாது என்ற குரல்கள் தான் அதிகமாக இருந்திருக்கும். ஆனால் தற்போது அந்த நம்பவே முடியாத உலக சாதனையை இந்தியாவின் ரன் மெஷின் வீரரான விராட் கோலி, சமன் செய்து அசத்தியுள்ளார். சச்சினின் இந்த உலகசாதனையை முறியடிப்பதற்கு இன்னும் ஒரு சதம் மட்டுமே விராட் கோலிக்கு மீதம் உள்ளது.
நடப்பு உலகக்கோப்பையில் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என மூன்றிலும் தரமான ஒரு கிரிக்கெட்டை விளையாடிவரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், இன்று ஈடன் கார்டனில் களம்கண்டது இந்திய அணி. விறுவிறுப்பான ஒரு போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். நல்ல தொடக்கத்திற்கு பிறகு ரோகித் மற்றும் கில் இருவரும் அடுத்தடுத்து வெளியேற, 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விராட் கோலி இருவரும் ஒரு பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
35 ஓவர்கள் வரை நிதானமாக விளையாடிய இந்த ஜோடி, ரன்ரேட்டை 6க்கு குறையாமல் பார்த்துக்கொண்டனர். பின்னர் அதிரடிக்கு திரும்பிய அடுத்தடுத்து சிக்சர் பவுண்டரிகளாக விரட்டி 77 ரன்களில் வெளியேறினார் ஸ்ரேயாஸ். பின்னர் களத்திற்கு வந்த கேஎல் ராகுல் விரைவாகவே வெளியேற, இறுதியாக கைக்கோர்த்த கோலி மற்றும் சூர்யா இருவரும் 40 ஓவர்களுக்கு மேல் ரன்களை எடுத்துவந்தனர்.
சூர்யா 5 பவுண்டரிகளை விரட்டி ரன் எடுத்துவருவதை பார்த்துக்கொள்ள, நிதானமாக விளையாடிய கோலி 119வது பந்தில் தன்னுடைய 49வது ஒடிஐ சதத்தை பதிவு செய்து அசத்தினார். நீண்ட எதிர்ப்பார்ப்பிற்கு பிறகு சச்சினின் 49 ஒடிஐ சதங்கள் என்ற இமாலய சாதனையை சமன் செய்துள்ளார் கிங் கோலி. கடைசி ஓவரில் 1 சிக்சர், 2 பவுண்டரிகள் என ஜடேஜா பறக்கவிட 50 ஓவர் முடிவில் 326 ரன்களை குவித்துள்ளது இந்திய அணி.
தன்னுடைய 35வது பிறந்தநாளை கொண்டாடும் விராட் கோலி, தன்னுடைய வரலாற்று சதத்தை பிறந்தநாளில் எடுத்துவந்து கலக்கியுள்ளார். இதன்மூலம் உலகக்கோப்பையில் சதமடித்த நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் (2011), ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஸ் (2023) இருவருக்கும் அடுத்தபடியாக 3வது வீரராக தன்னுடைய பிறந்த நாளில் உலகக்கோப்பை சதத்தை பதிவுசெய்து அசத்தியுள்ளார் விராட் கோலி.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடத்தில் சச்சின் (49), விராட் கோலி (49) மற்றும் ரோகித் சர்மா (31) மூன்று இந்திய வீரர்கள் இடம்பெற்று வரலாறு படைத்துள்ளனர்.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் 49 ஒடிஐ சதங்கள் என்ற உலக சாதனையை சமன்செய்திருக்கும் விராட் கோலி, அதை குறைவான போட்டிகளில் பதிவுசெய்து சாதனை படைத்துள்ளார். சச்சின் 452 போட்டிகளில் 49 சதங்கள் அடித்திருந்த நிலையில், விராட் கோலி 277 போட்டிகளிலே பதிவுசெய்து மிரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.