“40 ஓவர்கள் பவுண்டரிக்கு ஓடச் சொன்னாலும் செய்வேன்..” 2027 உலகக்கோப்பை குறித்து கோலி!
2026 ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் 484 ரன்கள் குவித்து, 53.78 சராசரி, 165 ஸ்ட்ரைக்ரேட்டுடன் திகழும் விராட் கோலி, ஆர்சிபி போட்காஸ்டில் 2027 உலகக்கோப்பை குறித்த தனது கனவை பகிர்ந்துள்ளார். கிரிக்கெட்டின் மீதான காதலால் மட்டுமே விளையாடுவதாகவும், அணிக்கு மதிப்பு சேர்க்கும் வரை தான் இருப்பேன் என்றும், 40 ஓவர்கள் பவுண்டரிக்கு ஓடச் சொன்னாலும் தயக்கமின்றி செய்வேன் என்றும் கூறியுள்ளார்.
2026 ஐபிஎல் தொடரில் தன்னுடைய அற்புதமான திறமையை வெளிப்படுத்திவரும் விராட் கோலி, ஆர்சிபி அணியின் வெற்றியின் பெரும்பங்கு வகித்துவருகிறார். இந்த சீசனில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியிருக்கும் இவர் 3 அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் 484 ரன்கள் குவித்து 3வது இடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி வைத்திருக்கும் 53.78 சராசரியே நடப்பு சீசனில் ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்சமாகும், அவருடைய ஸ்ட்ரைக்ரேட் 165ஆக இருக்கிறது.
இந்தசூழலில் தான் ஆர்சிபி போட்காஸ்ட்டில் பங்கேற்று பேசிய விராட் கோலி, தன்னுடைய இதே ஃபார்மை 2027 உலகக்கோப்பைக்கு எடுத்துச்செல்ல விரும்புவதாகவும், இந்தியாவிற்காக உலகக்கோப்பையில் விளையாடுவது அற்புதமான விஷயம் என்றும் பேசியுள்ளார்.
போட்காஸ்டில் பேசியிருக்கும் விராட் கோலி, “கிரிக்கெட் விளையாட்டின் மீதான என்னுடைய காதல் இன்னும் குறையாததால் மட்டுமே விளையாடுகிறேன். என் மதிப்பையும் தகுதியையும் நிரூபிக்க வேண்டிய சூழல் வந்தால், அந்த இடம் நிச்சயம் எனக்கானது அல்ல. என் நிலைப்பாடு மிகவும் தெளிவானது, நான் அங்கம் வகிக்கும் அணிக்கு என்னால் மதிப்பு கூட்ட முடிந்தால், மேலும் என்னால் மதிப்பு கூட்ட முடியும் என்று அந்தச் சூழலும் உணர்ந்தால் மட்டுமே அதில் நான் நிலைத்திருக்க விரும்புகிறேன்.
நான் விளையாட வரும்போது, என் முழு கவனத்தையும் ஒருமுகப்படுத்தி, மற்றவர்களை விடக் கடினமாக இல்லாவிட்டாலும், அவர்களுக்கு நிகராகக் கடுமையாக உழைக்கிறேன். ஒருநாள் போட்டியில் 40 ஓவர்கள் முழுவதும் பவுண்டரிக்கு பவுண்டரி ஓடச் சொன்னால் கூட, நான் அதை சிறு புகார் எதுவும் இன்றிச் செய்வேன். ஏனென்றால் நான் அதற்கேற்பத் தயாராகிறேன்.
என் கிரிக்கெட் வாழ்க்கையில் இதுதான் நான் விளையாடப் போகும் கடைசிப் பந்து என்பது போல, 50 ஓவர்களும் களத்தில் நின்று ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்ள விரும்புகிறேன். அதேபோல தான் நான் பேட்டிங்கும் செய்கிறேன், விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடுவதையும், அணிக்காக அனைத்தையும் செய்கிறேன்.
இப்படிச் செயல்பட்ட பிறகு, எனது தகுதியையும் மதிப்பையும் நிரூபிக்க வேண்டிய ஓர் இடத்தில் நான் இருக்க நேர்ந்தால், அந்த இடம் எனக்கானது அல்ல” என்று பேசியுள்ளார்.

