ஐபிஎல் 2026 | வெளியேறும் PBKS.. உள்ளே போகும் CSK.. 8 அணிகளுக்கான Playoff வாய்ப்புகள்..?
19வது ஐபிஎல் சீசனில் 12 போட்டிகள் முடிவில் பிளேஆஃப் புள்ளிவிவரங்கள் பரபரப்பை கிளப்பியுள்ளன. குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி அணிகள் தலா 8 வெற்றியுடன் 90% மேல் வாய்ப்பை உறுதி செய்துள்ளன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 67.4% சாத்தியத்துடன் 3வது இடத்தில். பஞ்சாப் கிங்ஸ் வீழ்ச்சியால் சிஎஸ்கே, ராஜஸ்தான் தலா 47% வாய்ப்புடன் மீண்டும் போட்டியில் தீவிரமாக உள்ளன.
19வது ஐபிஎல் சீசனானது கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கி பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. தொடக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மிரட்டலான தொடக்கத்தை பெற்று புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தின. ஆனால் போகப்போக மற்ற அணிகள் தங்களுடைய ஃபார்மிற்கு திரும்ப புள்ளிப்பட்டியலில் பரமபத விளையாட்டு நடந்துவருகிறது.
முதல் 7 போட்டிகளில் தோல்வியே இல்லாமல் மிரட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணி அடுத்த 5 போட்டிகளில் வரிசையாக தோற்றிருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
இந்நிலையில் 12 போட்டிகளின் முடிவில் இன்னும் எந்த அணிக்கு எத்தனை வாய்ப்புகள் உள்ளன என்பதை இங்கே பார்க்கலாம்..
GT, RCB
12 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பிடித்துள்ளன. மீதமுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வென்றால் கூட அவர்கள் முதலிரண்டு இடங்களை சீல் செய்துவிடுவார்கள். இந்த சூழலில் பிளேஆஃப்க்கு செல்ல குஜராத் டைட்டன்ஸுக்கு 96.6% வாய்ப்பும், ஆர்சிபிக்கு 94.5% வாய்ப்பும் இருக்கிறது.
SRH
12 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. அவர்களுக்கு பிளேஆஃப் செல்ல 67.4% வாய்ப்பு இருக்கிறது, இருப்பினும் மீதமிருக்கும் 2 போட்டிகளையும் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு எதிராக விளையாடவிருப்பதால் இரண்டிலும் தோற்றால் ஹைதராபாத் அணியும் தொடரிலிருந்து வெளியேற வாய்ப்பு உள்ளது.
CSK, RR, PBKS
12 போட்டிகள் முடிவில் 6 வெற்றி மற்றும் ஒரு புள்ளிபகிர்வுடன் 13 புள்ளிகளுடன் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி 3வது இடத்தில் நீடிக்கிறது. முதல் 7 போட்டிகளில் தோல்வியே அடையாத இந்த அணி, அடுத்த 5 போட்டிகளில் வரிசையாக தோற்றதால் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நேற்றைய மும்பைக்கு எதிரான போட்டிக்கு முன்பு 62.8%ஆக இருந்த பஞ்சாபின் பிளேஆஃப் வாய்ப்பு தற்போது 42.7%ஆக குறைந்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் மோசமான நிலையால் அடுத்த இடத்தில் இருக்கும் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கான பிளே ஆஃப் வாய்ப்பு அதிகரித்துள்ளது. 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் இருக்கும் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு 47% வாய்ப்பு இருக்கிறது.
DC, KKR
டெல்லி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்து பிளேஆஃப் செல்வதற்கான வாய்ப்பாக 2.6% மற்றும் 2.2% வாய்ப்புகள் உள்ளன.
தொடரிலிருந்து வெளியேறிய மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளை தவிர மற்ற 8 அணிகளுக்கும் பிளேஆஃப் செல்லும் வாய்ப்பு இருக்கிறது.

