”கோலியின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது”- பகைக்கு இடையே மனம்திறந்து பாராட்டிய சவுரவ் கங்குலி!

விராட் கோலியின் பேட்டிங் திறமை குறித்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, அவரை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
virat kohli, ganguly
virat kohli, gangulytwitter

உலகக்கோப்பை 2023: இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா

இந்தியாவில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, இன்னும் இரண்டு தினங்களில் நிறைவுபெற இருக்கிறது. 10 அணிகள் பங்கேற்று விளையாடிய நிலையில், முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன.

இரு அணிகளும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 20 ஆண்டுகளுக்குப் பின் மோத இருக்கின்றன. நவம்பர் 19ஆம் தேதி, குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதனால் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

இதையும் படிக்க: WC Final: சுழலில் திணறும் ஆஸ்திரேலியா.. அஸ்வினுக்கு வாய்ப்பு? மாற்றம் செய்யும் ரோகித்?

கோலியின் சாதனை குறித்து மனந்திறந்து பேசிய செளரவ் கங்குலி

இதற்கிடையே நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது அரையிறுதிப் போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி, ரன் வேட்டை நடத்தியதுடன் பல்வேறு இமாலய சாதனைகளையும் முறியடித்து வரலாற்றில் இடம்பிடித்தார். இதையடுத்து, அவருக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்தன. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, “இனி இதுபோன்ற ஒரு சாதனையை யாராலும் முறியடிக்க முடியுமா என்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. அதுவும் விராட் கோலி இன்னும் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கவில்லை.

அவருக்கு தற்போது 35 வயதுதான் ஆகிறது. அவர் இன்னும் நிறைய நாட்கள் இந்தியாவுக்காக விளையாடுவார். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனையாகும். என் வாழ்க்கை முழுவதும் நான் சச்சின் டெண்டுல்கர்கூடவே விளையாடி இருக்கிறேன். அவர், 49வது சதத்தை அடித்தபோது நாங்கள் அனைவரும் இது ஒரு மிகப்பெரிய சாதனை; யாராலும் இதை முறியடிக்க முடியாது என்று நினைத்தோம். ஆனால் விராட் கோலி அதனை செய்து காட்டியிருக்கிறார். அதுவும் இந்த உலகக்கோப்பையில் விராட் கோலி ஆடிய ஆட்டம் பிரமிக்கும் வகையில் இருந்தது. இந்த உலகக்கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு பாராட்டும் வகையில் இருக்கிறது. பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ”விராட் காட்டுப்பசியுடன் இருப்பது ஆச்சர்யம்” - கோலியின் சாதனை குறித்து சுப்மன் கில்

விராட் கோலி கேப்டன் பதவிபறிப்பும் செளரவ் கங்குலியின் தலையீடும்!

விராட் கோலியின் கேப்டன் பதவி பறிப்பில் அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த செளரவ் கங்குலி இருந்ததாக அந்தச் சமயத்தில் தகவல்கள் வெளியாகின. இதை, சில கிரிக்கெட் தலைவர்களும் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தனர். இதனால், கங்குலி - விராட் கோலி இடையே மோதல் தொடர்ந்து, அது கடந்த ஐபிஎல்லில் பயங்கரமாக வெடித்தது நினைவுகூரத்தக்கது. குறிப்பாக, விராட் கோலி, சவுரவ் கங்குலியின் வலைத்தள பக்கத்தைப் பின்தொடர்வதை நிறுத்தியதுடன், ஐபிஎல்லில் போட்டி முடிவடைந்த பிறகு அவருக்கு கைகொடுக்காமலும் சென்றார்.

ரோகித் சர்மா, இந்திய அணியின் தலைமைப் பொறுப்பிற்கு வருவதற்கு முன்பு, நட்சத்திர வீரர் விராட் கோலிதான் 3 வடிவிலான அணிக்கும் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்கூட செளரவ் கங்குலி, ”கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மா விரும்பவில்லை. இதில் கொஞ்சமும் விருப்பமில்லாமல் இருந்த அவரை, அப்பொறுப்பை ஏற்கும்படி நான்தான் கட்டாயப்படுத்தினேன்” என உண்மையையும் உடைத்திருந்தார்.

இதையும் படிக்க: ’தேடும் கண் பார்வை தவிக்க.. துடிக்க..’- சந்தோஷத்தில் அனுஷ்காவை தேடிய விராட் கோலி.. வைரல் வீடியோ!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com