பிசிசிஐ புதிய ஒப்பந்தம்.. பதவி இறக்கம் செய்யப்படும் கோலி, ரோகித்? முன்னேறும் கில்!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ, விரைவில் 2025/26 சீசனுக்கான வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, விராட் மற்றும் ரோஹித் ஆகியோர் மாற்றம் பெறலாம் எனக் கூறப்படுகிறது.
பிசிசியின் பொதுக்கூட்டம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு 2025/26 சீசனுக்கான வீரர்களின் ஒப்பந்தப் பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதன்படி, புதிய பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் பதவி இறக்கம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. முன்னாள் கேப்டன்களான இருவரும் கிரேடு ஏ+ பிரிவில் உள்ளனர். தவிர தலா ரூ.7 கோடி சம்பளம் பெறுகிறார்கள்.
2018ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து விராட் கோலி, கிரேடு ஏ+ பிரிவில் இருந்து வருகிறார். ஆனால் இப்போது அதில் மாற்றம் வரும் எனத் தெரிகிறது. டெஸ்ட், ஒருநாள், டி20 உள்ளிட்ட 3 வடிவங்களிலும் விளையாடும் வீரர்களே ஏ பிரிவில் இடம்பெறுவர். அந்த வகையில் அவர்கள் இருவரும் டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு அவ்வகையான போட்டியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும் அவர்கள் ஏ பிரிவு பட்டியலில் இடம்பெற்றனர்.
காரணம், அவர்களின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் எதிர்காலத்தைக் கொண்டு கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஏனெனில், டி20யைவிட டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் வெயிட்டேஜ் கொண்டவை. ஆனால், அவர்கள் தற்போது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியிருப்பதால், அவர்களைப் பதவி இறக்கம் செய்யப்படுவதற்கு பிசிசிஐ தயாராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிசிசிஐ அவர்களை மாற்றம் செய்யும்பட்சத்தில், அவர்களுக்கு A கிரேடு ஒப்பந்தம் வழங்கப்படலாம்.
A கிரேடில் உள்ள வீரர்கள் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், 2024 உலகக்கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரவீந்திர ஜடேஜா, கிரேடு ஏ+ பிரிவிலேயே தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்வார் எனவும், கிரேடு ஏ ஒப்பந்தத்தில் உள்ள ஷுப்மான் கில் பதவி உயர்வு பெற்று ஏ+க்குச் செல்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடுவதுடன், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டனாகவும் உள்ளார்.

