ஃபார்முக்கு வந்த விராட் கோலி.. டெஸ்ட் போட்டிக்கு திரும்புகிறாரா? பிசிசிஐ வைத்த முற்றுப்புள்ளி..
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்து விமர்சனத்தைப் பூர்த்தி செய்த நிலையில், அவர் டெஸ்ட் போட்டிக்குத் திரும்புகிறாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று ராஞ்சியில் தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த வெற்றிக்கு முக்கியக் காரணங்களில் விராட் கோலியின் அதிரடி ரன் குவிப்பும் ஒன்று. அவர் 120 பந்துகளில் 11 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் 52 சதங்களை அடித்து முதல் இடத்தில் உள்ளார். தவிர, ஒரு வடிவில் அதிக சதங்கள் எடுத்த, அதாவது டெஸ்ட்டில் மட்டும் 51 சதங்கள் அடித்து முதல் இடத்தில் இருந்த இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை, பின்னுக்குத் தள்ளினார். மேலும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக அதிக சதங்கள் (6) அடித்தவர் என்ற சாதனையையும் தன்வசப்படுத்தினார்.
கடந்த சில மாதங்களாக, 37 வயதான கோலியின் எதிர்காலம் குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்து வந்தன. ஆனால், நேற்றைய போட்டியின் மூலம் தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். இதனால், அவருடைய பேட்டிங் திறமை குறித்துப் பேசப்பட்டு வருகிறது. சுப்மன் கில் தலையிலான இந்திய இளம்படை இங்கிலாந்து டெஸ்ட் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தபோதும், சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக கோட்டை விட்டிருப்பது விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது.
இதன் தோல்விக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், மூத்த வீரர்கள் இல்லாததும் பேசுபொருளானது. அந்த வகையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், ’விராட் மற்றும் ரோஹித் இருவரும் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது குறித்து பரிசீலித்து வருகின்றனர் என்பது பாதி உண்மை என்றால், அதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மிகப்பெரிய நட்சத்திரங்கள் டெஸ்ட்டை, மீண்டும் விளையாட விரும்பினால், அவர்கள் விளையாட வேண்டும்” எனப் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி, மீண்டும் விளையாட வரலாம் என்கிற பேச்சுகள் இணையத்தைச் சுற்றி வருகின்றன. ஆனால், இதற்கு பிசிசிஐ பதிலளித்துள்ளது. இந்த செய்திகளுக்கு பதிலளித்த பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, ”இந்திய கிரிக்கெட் நிர்வாகக் குழு கோலியிடம் இதுபோன்ற எந்த அணுகுமுறையையும் மேற்கொள்ளவில்லை. விராட் கோலி பற்றி கூறப்படுவது வெறும் வதந்தி. இதுகுறித்து கோலியுடன் எந்த உரையாடலும் இல்லை. வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை” என அவர் இந்தியா டுடேவுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

