பிசிசிஐ தலைவரான டெல்லி அணியின் முன்னாள் கேப்டன்.. யார் இந்த மிதுன் மன்ஹாஸ்?
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் மிதுன் மன்ஹாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) தலைவராக இருந்த ரோஜர் பின்னி, தனது பதவியில் இருந்து விலகியதால், துணைத் தலைவராக இருந்த ராஜீவ் சுக்லா இடைக்கால தலைவராகப் பொறுப்பேற்றார். அடுத்த தலைவருக்கான தேர்தல் நடைபெறும் வரை ராஜீவ் சுக்லா இடைக்காலத் தலைவராக நீடிப்பார் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் BCCI-யின் வருடாந்திர கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. அப்போது, உள்நாட்டு கிரிக்கெட்டின் முன்னணி வீரரான மிதுன் மன்ஹாஸ், பிசிசிஐ தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக, இந்தத் தேர்வுக்கான பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ரகுராம் பட் (கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம்) மற்றும் முன்னாள் இந்திய பந்து வீச்சாளர் ஹர்பஜன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ராஜிவ் சுக்லா துணைத் தலைவராகவும் கொள்கை வழிகாட்டுதல்களை வழங்குவதற்கான பிரதான குழுவில் ஒரு நபர் உறுப்பினராக ஜெய் நிரஞ்சன் ஷாவும் தேர்வு செய்யப்பட்டனர்.
BCCI தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மிதுன் மன்ஹால், “உலகின் சிறந்த கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருப்பது ஒரு முழுமையான மரியாதை. அதேநேரத்தில், அது ஒரு பெரிய பொறுப்பும்கூட. எனது சிறந்த திறன்களையும், அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடனும் அதைச் செய்ய நான் உறுதிபூண்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்.
46 வயதாகும் மன்ஹாஸ் ஜம்மு-காஷ்மீரில் பிறந்தவர். 157 ரஞ்சிப் போட்டிகளிலும் 44 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்காக விளையாடினார். ரஞ்சி போட்டிகளில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்துள்ளார். அவர் டெல்லி டிரஸ்ஸிங் ரூமை வீரேந்திர சேவாக், கவுதம் காம்பீர், ஆஷிஷ் நெஹ்ரா, ஆகாஷ் சோப்ரா, ஷிகர் தவான், விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் போன்ற வீரர்களுடன் பல்வேறு காலங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். டெல்லி அணி கேப்டனாக மிதுன் மன்ஹாஸ் இருந்தபோதுதான் அந்த அணியில் விராட் கோலி இடம்பெற்று பின்னர் தேசிய அணிக்கும் தேர்வானார்.