அடேங்கப்பா இவ்ளோ சிக்ஸர்களா... பொளந்து கட்டிய வைபவ் சூர்யவன்ஷி.. 32 பந்தில் சதம்!
ஏசிசி ஆண்கள் ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2025 தொடரில் ஐக்கிய அரபு அணிக்கு எதிராக இந்திய அணி வீரர் வைபவ் சூர்ய்வன்ஷி 144 ரன்கள் எடுத்தார்.
ஏசிசி ஆண்கள் ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2025 தொடர் கத்தாரில் இன்று தொடங்கியது. இத்தொடரில் இந்தியா ஏ, ஆப்கானிஸ்தான் ஏ, இலங்கை ஏ, வங்கதேசம் ஏ, ஓமன், ஹாங்ஹாங், ஐக்கிய அரபு, பாகிஸ்தான் ஷாகீன்ஸ் ஆகிய 8 அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஜித்தேஷ் சர்மா தலைமையிலான இந்திய ஏ அணி பி பிரிவில் இடம்பிடித்துள்ளது. இவ்வணியில், கடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் களமிறங்கி அதிரடி சதமடித்து உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த வைபவ் சூர்யவன்ஷி இடம்பிடித்துள்ளார்.
இந்த நிலையில், இந்திய ஏ அணியும், ஐக்கிய அரபு அணியும் இன்று பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய ஏ அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்ஷியும், பிரியாஷ் ஆர்யாவும் களமிறங்கினர். இதில் பிரியாஷ் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால் தொடக்கம் முதலே ஐக்கிய அரபு அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். குறிப்பாக, அவர் மைதானத்தில் ருத்ரதாண்டவம் ஆடினார். அவருடைய ஆட்டத்தைப் பார்த்து ஐக்கிய அரபு அணி வீரர்கள் கதிகலங்கி போயினர்.
ஆம், இறுதிவரை அவர் சந்தித்த பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் பறக்க விட்டப்படியே இருந்தார். 17 பந்துகளில் அரைசதம் அடித்த வைபவ் சூர்யவன்ஷி, தொடர்ந்து அதிரடி காட்டி 32 பந்துகளில் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். அத்துடன் நிற்காமல் தொடர்ந்து சிக்ஸர், பவுண்டரி என விரட்டிய அவர் 42 பந்துகளை எதிர்கொண்டு 144 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 11 பவுண்டரிகளும், 15 சிக்ஸர்களும் அடக்கம். மறுபுறம், அவருக்குத் துணையாக கேப்டன் ஜிதேஷ் சர்மா 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் இந்திய ஏ அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்தது.
ஒருவேளை, வைபவ் சூர்யவன்ஷி 12.3 ஓவரில் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால், டி20யில் இரட்டைச் சதத்தைப் பதிவு செய்திருப்பார். மேலும், அணியை 400 ரன்களுக்கு மேலேயும் எடுக்க வைத்திருப்பார். பின்னர் மிகக் கடுமையான இலக்கை நோக்கி களமிறங்கிய ஐக்கிய அரபு அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு வெறும் 149 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம், இந்திய அணி 148 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி தரப்பில் குர்ஜன்பினித் சிங் 3 விக்கெட்களையும், ஹர்சி துபே 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

