இந்திய வரலாற்றில் முதல்முறை.. ரஞ்சி கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷிக்கு துணை கேப்டன் பதவி!
ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் ஓர் அணியின் துணை கேப்டன் பதவிக்கு 14 வயது நிறைந்த வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட 14 வயது பாலகனான வைபவ் சூர்யவன்ஷி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார். அந்த தொடரிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதம் விளாசி, ஐபிஎல் தொடரில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர், ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம் அடித்த வீரர் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற பல்வேறு சாதனைகளை சூர்யவன்ஷி படைத்தார். இதன்மூலம் ஒரேநாளில் உலகையே திரும்பிப் பார்க்கவைத்தார்.
தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான யூ19 ஒருநாள் தொடரிலும் வைபவ் இடம்பிடித்தார். அங்கேயும் தனது பேட்டிங்கை நிரூபித்தார். இங்கிலாந்துக்கு எதிரான u19 ஒருநாள் போட்டிகளில், 174.02 என்ற அசுரத்தனமான ஸ்டிரைக் ரேட்டுடன் 355 ரன்களைக் குவித்தார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இளைஞர் (யூத்) டெஸ்ட் போட்டியிலேயேயும் 113 ரன்கள் குவித்து, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தான் சாதனை படைக்க முடியும் என நிரூபித்தார். இப்படி, உலகின் வலிமையான அணிகளுக்கு எதிராக தனது பேட்டிங்கைச் சிறப்பாக வெளிப்படுத்தி வரும் வைபவ் சூர்யவன்ஷிக்கும் அதிர்ஷ்டக் காற்று அடித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
ஆம், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நம்பமுடியாத நிகழ்வாக 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 2025/26 ரஞ்சி டிராபித் தொடருக்கான பீகார் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதற்குமுன் எந்தவொரு மாநில கிரிக்கெட் அணியிலும் துணை கேப்டனாக 14 வயது வீரர் நியமிக்கப்பட்டதே இல்லாத நிலையில், அது சூர்யவன்ஷிக்கு கிடைத்திருப்பது உலகம் முழுவது பேசுபொருளாகி இருக்கிறது. அக்டோபர் 15ஆம் தேதி மொயின்-உல்-ஹக் மைதானத்தில் நடைபெறும் பிளேட் லீக் சீசன் தொடக்க ஆட்டத்தில் பீகார் அணி அருணாச்சலப் பிரதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தத் தொடரில் சகிபுல் கனி கேப்டனாகவும், வைபவ் சூர்யவன்ஷி துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். வைபவ் சூர்யவன்ஷியின் அபாரமான திறமையின் மீது நம்பிக்கை வைத்து, பீகார் கிரிக்கெட் சங்கம் இந்த மிகப்பெரிய பொறுப்பை அவருக்கு வழங்கியுள்ளது. என்றாலும், அவருக்கு கூடுதல் சுமை ஏற்படுத்தும் வகையில் துணை கேப்டன் பதவியை அவசரப்பட்டு அளிக்கலாமா என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் இருந்து 100 கி.மீ தொலைவில் இருக்கும் சமஸ்திபூர் மாவட்டத்தில் மோதிபூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, 2023-24 ரஞ்சிக் கோப்பை தொடரில் பீகார் அணிக்காக 12 வயதிலேயே அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.