ஹெட், அக்‌ஷர், சௌத்தி - உலகக் கோப்பைக்கு முன் அடுத்தடுத்து காயமடையும் வீரர்கள்!

ஏற்கெனவே வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், பேட் கம்மின்ஸ், கிளென் மேக்ஸ்வெல், ஷ்ரேயாஸ் ஐயர், வனிந்து ஹசரங்கா என பல வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டுவருகின்றனர்.
Axar Patel
Axar PatelPTI

உலகக் கோப்பை தொடர் இன்னும் ஒருசில வாரங்களில் தொடங்கவிருக்கும் நிலையில் கடந்த சில நாள்களில் சில முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்து வருகின்றனர். ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட், இந்திய ஆல்ரவுண்டர் அக்‌ஷர் படேல், நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌத்தி என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

2023 ஐசிசி உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், ஒவ்வொரு அணிகளும் இந்த உலகக் கோப்பைக்காக தயாராகி வருகின்றன. தங்களின் கடைசி கட்ட தொடர்களை ஒவ்வொரு அணியும் விளையாடிக்கொண்டிருக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல அணிகள் உலகக் கோப்பைக்கான ஸ்குவாடை அறிவித்துவிட்டன. இந்நிலையில் கடந்த சில நாள்களாக பல முன்னணி வீரர்கள் காயமடைந்து வருகின்றனர்.

வெள்ளிக் கிழமை இரவு நடந்த தென்னாப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியின்போது ஆஸ்திரேலிய ஓப்பனர் டிராவிஸ் ஹெட் காயமடைந்தார். 416 என்ற மிகப் பெரிய இலக்கை ஆஸ்திரேலிய அணி சேஸ் செய்தபோது, 17 ரன்கள் எடுத்திருந்த அவர் ஜெரால்ட் கொட்சியா வீசிய பந்து இடது கையில் பட்டதால் காயமடைந்தார். முடிந்த அளவுக்கு தொடர்ந்து விளையாட அவர் நினைத்தாலும் வலி அதிகமாக இருந்ததால் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார் அவர்.

டிராவிஸ் ஹெட்
டிராவிஸ் ஹெட்

டிராவிஸ் ஹெட்டின் காயம் பற்றி போட்டி முடிந்ததும் பேசிய ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட், "ஹெட்டுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நாளை அவருக்கு மேலும் சில ஸ்கேன்கள் செய்யப்படவுள்ளன. அதன்பிறகு காயத்தின் தாக்கமும் அதிலிருந்து அவர் மீண்டு வர எவ்வளவு காலம் எடுக்கும் என்றும் தெரியவரும். நான் மருத்துவன் அல்ல. அதனால் என்னால் எதையும் தீர்க்கமாக சொல்லமுடியாது. ஆனால் காயம், விரல்களுக்கு மேலே மூட்டுப் பகுதியில் என்று நினைக்கிறேன்" என்று கூறினார். உலகக் கோப்பைக்கு 20 நாள்களே இருப்பதால் அதற்குள் டிராவிஸ் ஹெட் மீண்டு வருவது சிரமம் என்றும், அவர் உலகக் கோப்பையைத் தவறவிடலாம் என்றும் கருதப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக மிகச் சிறந்த ஃபார்மில் இருந்த ஹெட், அனைத்து ஃபார்மட்களிலும் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார். வார்னரோடு இணைந்து அவர் அதிரடி தொடக்கம் கொடுக்க, மாபெரும் ஸ்கோர்களை அநாயசமாக எட்டிக்கொண்டிருந்தது ஆஸ்திரேலிய அணி. அவர் உலகக் கோப்பையில் விளையாடாமல் போனால் அது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாக அமையும். இருந்தாலும் அந்த அணிக்கு மார்னஸ் லாபுஷான் போன்ற ஒரு உலகத்தர வீரர் மாற்றாக இருக்கக்கூடும் என்பதால், அது பெரிய அளவு ஆஸ்திரேலிய அணியை பாதிக்காது.

டிம் சௌத்தி
டிம் சௌத்தி

ஆஸ்திரேலியாவுக்கு ஒரு அடி என்றால், இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய நியூசிலாந்து அணிக்கு அடிமேல் அடி விழுந்தது. முதலில் பேர்ஸ்டோவின் கேட்சைப் பிடிக்கப் பாய்ந்த ஆல்ரவுண்டர் டேரில் மிட்செலுக்கு மோதிர விரலில் காயம் ஏற்பட்டது. அடுத்ததாக ஜோ ரூட் அடித்த பந்தை கேட்ச் பிடிக்கப் பாய்ந்த டிம் சௌத்திக்கு வலது கையின் கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. காயம் சற்று பலமாக இருந்ததால் சௌத்தி அந்தப் போட்டியில் அதற்கு மேல் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்தால் அவதிப்பட்டுவருகிறார். ஐபிஎல் தொடரின்போது காயமடைந்த அவர், இன்னும் போட்டிகளில் பங்கேற்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில் இன்னும் 2 முக்கிய வீரர்கள் காயமடைந்திருப்பது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது.

செப்டம்பர் 15 உலகின் அனைத்து ஏரியாவிலும் கிரிக்கெட் களத்தில் வீரர்கள் காயமடைந்துகொண்டே இருந்தனர். இந்த வெள்ளிக்கிழமை இந்திய அணியிலும் இதிலிருந்து தப்பவில்லை. வங்கதேசத்துக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் விளையாடிய இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்‌ஷர் படேல் இரு முறை கையில் காயமடைந்தார்.

265 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் பெரும் சிக்கலுக்குள்ளானது. அக்‌ஷர் படேல் தான் அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்தார். வங்கதேச இடது கை ஸ்பின்னர் நசுன் அஹமதுவை அவர் டார்கெட் செய்து அடித்தார். 45வது ஓவரின் இரண்டாவது பந்தில் சிக்ஸர் விளாசிய அவர், அடுத்த பந்தையும் இறங்கி வந்து அடிக்க முற்பட்டார். ஆனால் அந்தப் பந்து லெக் சைட் சென்றதால் அதைத் தவறவிட்டார். விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் பந்தைப் பிடிக்காமல் விட, ஸ்டம்பிங் வாய்ப்பைத் தவறவிட்டார். ஸ்டம்பிங்கில் இருந்து தப்பிக்க நினைத்து டைவ் அடித்த அக்‌ஷர், தன் வலது கையில் காயமடைந்தர். பிசியோ வந்து அவருக்கு சிகிச்சை அளித்தபின் தொடர்ந்து பேட்டிங் செய்தார் அவர்.

Axar Patel
SA20 | SA20 ஏலத்தில் ராபின் உத்தப்பா, நஷீம் ஷா, கேன் ரிச்சர்ட்சன்..!

ஆனால் அடுத்த ஓவரே அவருக்கு இன்னொரு அடி விழுந்தது. பந்தை லாங் ஆன் திசைக்கு அடித்துவிட்டு நான் ஸ்டிரைக்கர் எண்டுக்கு வந்தார் அக்‌ஷர். ஃபீல்டர் எறிந்த பந்து நேராக வந்து அக்‌ஷரின் இடது கையை பதம் பார்த்தது. மீண்டும் பிசியோ வந்து சிகிச்சை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. போட்டியில் தொடர்ந்து அவர் விளையாடியிருந்தாலும், அவர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது பிசிசிஐ. அவருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியோடு இணைந்திருக்கிறார்.

ஏற்கெனவே வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், பேட் கம்மின்ஸ், கிளென் மேக்ஸ்வெல், ஷ்ரேயாஸ் ஐயர், வனிந்து ஹசரங்கா என பல வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டுவருகின்றனர். அவர்களோடு இந்த வீரர்களும் அந்தப் பட்டியலில் இணைந்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் தீக்‌ஷனாவும் பங்கேற்கமாட்டார் என்று இலங்கை கிரிக்கெட் சங்கமும் இப்போது அறிவித்திருக்கிறது. இதற்கு மேலும் இந்தப் பட்டியலில் எந்த வீரர்களும் இணைந்துவிடக்கூடாது என்று ரசிகர்கள் வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com