பேட்டிங்கில் சொதப்பும் ஜடேஜா, பௌலிங்கில் தடுமாறும் அக்‌ஷர் - இப்போது நம்பர் ஏழும் பிரச்சனை..!

2022ம் ஆண்டுக்குப் பிறகு 11 ஒருநாள் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஜடேஜா வெறும் 174 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். ஒரேயொரு இன்னிங்ஸில் மட்டுமே 30 ரன்களைக் கடந்திருக்கிறார் அவர்.
Ravindra Jadeja
Ravindra JadejaPTI
Published on

2023 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கின்றன. மிகவும் முக்கியமான கட்டத்தில் இந்திய அணியின் பிரச்சனைகள் ஒவ்வொன்றாக சரியாகும் என்று நினைத்தால், ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் புதுப்புது பிரச்சனைகள் முளைத்துக்கொண்டிருக்கின்றன. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் குழப்பங்கள் ஏற்பட்டுவந்திருந்த நிலையில், இப்போது ஆல்ரவுண்டர்கள் முறை.

2023 Cricket World Cup
2023 Cricket World CupR Senthil Kumar

12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடக்கவிருக்கிறது. சொந்த மண்ணில் நடப்பதால் இந்திய அணிக்கு மிகப் பெரிய சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இந்திய அணியின் பிரச்சனைகள் ஒவ்வொன்றும் பூதாகரமாகி வருகின்றன. கடந்த சில வாரங்களாக இந்தியாவின் நம்பர் 4 மற்றும் நம்பர் 5 யார் என்ற கேள்வி பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஃபிட்டாக இருப்பார்களா என்ற கேள்வி எழுந்த நிலையில், அவர்களுக்கு சரியான மாற்று இல்லை என்பதும் பிரச்சனையாக இருந்தது. இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளால் தொடர்ந்து போட்டியில் பங்கேற்காமலேயே இருக்கிறார். அந்த இடத்தை இஷன் கிஷன் ஓரளவு சிறப்பாக நிரப்பிக்கொண்டிருந்த நிலையில், இப்போது நம்பர் 7 பிரச்சனையாக அமைந்திருக்கிறது.

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா இருவரும் நம்பர் 6 மற்றும் 7 இடங்களில் விளையாடுவார்கள். இருவருமே பேட்டிங், பௌலிங் என இரண்டு ஏரியாவிலும் முழுமையாக பங்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், சமீப காலமாக ஜடேஜாவின் பேட்டிங் மிகவும் சுமாராக இருந்து வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடுகிறார். டி20 போட்டிகளில் கூட ஓரளவு அதிரடி காட்டி சிறு தாக்கமாகவு ஏற்படுத்துகிறார். ஆனால், ஒருநாள் போட்டிகளில் அவரது செயல்பாடு மிகவும் சுமாராக இருக்கிறது.

Ravindra Jadeja
Ravindra JadejaPTI

2022ம் ஆண்டுக்குப் பிறகு 11 ஒருநாள் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஜடேஜா வெறும் 174 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். ஒரேயொரு இன்னிங்ஸில் மட்டுமே 30 ரன்களைக் கடந்திருக்கிறார் அவர். இந்த ஆசிய கோப்பையில் பேட்டிங் செய்த 3 இன்னிங்ஸிலும் சேர்த்து 25 ரன்கள் தான் எடுத்திருக்கிறார் அவர். மிகவும் முக்கியமான் கட்டங்களில் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் தேவைப்படும்போது அவரால் ஒரு பெரிய இன்னிங்ஸை ஆட முடிவதில்லை. அந்த சிறிய இன்னிங்ஸைக் கூட அவர் அதிரடியாக ஆடுவதில்லை. இந்திய அணியின் பௌலர்கள் அவ்வளவாக பேட்டிங் செய்யமாட்டார்கள் என்பதால், ஹர்திக், ஜடேஜா இருவரும் முழுமையாக பேட்ஸ்மேன்களைப் போன்ற பங்களிப்பைக் கொடுக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் அது அவரிடமிருந்து வருவதில்லை என்பது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

அதேசமயம் அக்‌ஷர் படேல் பேட்டிங்கில் ஓரளவு நல்ல பங்களிப்பைக் கொடுக்கிறார். ஒட்டுமொத்தமாக கடந்த 2 ஆண்டுகளில் அவரது பேட்டிங் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் கடைசி கட்டத்தில் இந்திய அணியை வெற்றிக்கு அருகில் எடுத்துச் சென்று துருதிருஷ்டவசமாக ஆட்டமிழந்தார். அதே 2022ம் ஆண்டுக்குப் பிறகான காலகட்டத்தில் 14 ஒருநாள் இன்னிங்ஸில் 300 ரன்கள் எடுத்திருக்கிறார் அக்‌ஷர். அதில் இரண்டு அரைசதங்கள்.

Axar patel
Axar patelAP

பேட்டிங்கில் அக்‌ஷர் ஜடேஜாவை விட சிறந்த ஆப்ஷனாகத் தெரிந்தாலும், அக்‌ஷரால் பந்துவீச்சில் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடிவதில்லை. கடைசி 7 ஒருநாள் போட்டிகளில் 4 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்திருக்கிறார் அவர். மேலும் பெரிதளவு சிக்கனமாகவும் பந்துவீசிவிடவில்லை. இந்த விஷயத்தில் அக்‌ஷரை விட ஜடேஜா சற்று சிறந்த ஆப்ஷனாகத் தெரிகிறார். இந்த ஆசிய கோப்பையியின் 4 இன்னிங்ஸில் பந்துவீசியிருக்கும் ஜடேஜா 6 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். மேலும், எதிரணிகள் அதிரடியாக ஆடும்போது ஜடேஜாவால் சிக்கனமாகப் பந்துவீசி ரன்ரேட்டை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.

இப்படி இருவரும் ஒரு விஷயத்தில் சிறப்பாக இருந்தாலும், மற்றொரு ஏரியாவில் பின்தங்குகிறார்கள். இருவரிடமிருந்தும் இந்திய அணியால் ஒரு விஷயத்தில் மட்டுமே பயன்பெற முடிகிறது. இப்படியிருக்கையில் ஒரு முழுமையான ஆல்ரவுண்டரை நிச்சயம் இந்திய அணி உலகக் கோப்பையில் மிஸ் செய்யும். இதில் என்ன பிரச்சனை எனில் இத்தனை ஆண்டுகளில் இந்தியா வேறு ஆல்ரவுண்டர்களையும் கண்டெடுக்கவில்லை. உலகக் கோப்பை ஸ்குவாட் அறிவிக்கும்போது ஷர்துல் தாக்கூரை ஆல்ரவுண்டராக அடையாளப்படுத்தவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது இந்திய அணி.

Ravindra Jadeja
CRICKET WORLD CUP PREVIEW | இங்கிலாந்தின் பாணியைக் கடைபிடிக்கிறதா ஆஸ்திரேலியா?

எரியும் நெருப்பில் என்ணெய் ஊற்றுவதுபோல், வங்கதேச அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் அக்‌ஷர் படேல் காயமடைந்துவிட்டார். அதனால் வாஷிங்டன் சுந்தரை பேக் அப் வீரராக அழைத்திருக்கிறது இந்திய அணி. உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் இன்னும் என்னென்ன பிரச்சனைகள் எழுமே தெரியவில்லை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com