காபா டெஸ்ட் | பும்ரா விக்கெட் வேட்டை... சதம் கடந்த ஹெட் மற்றும் ஸ்மித்.. வலுவான நிலையில் ஆஸி..
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலிரு டெஸ்ட் போட்டிகளில் தலா ஒன்றில் வெற்றி பெற்று இரு அணிகளும் சமநிலையில் உள்ள நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
போட்டியின் முதல் நாளில், மழை காரணமாக, 13 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. ஆஸ்திரேலியா 28 ரன்கள் எடுத்திருந்தது. 2 ஆவது நாளான இன்று, பும்ராவின் வேகத்தில் கவாஜா மற்றும் மெக்ஸ்வீனி அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனை தொடர்ந்து வந்த லபுஷேன் 12 ரன்களில் நிதிஷ் குமார் பந்தில் ஆட்டமிழக்க, ஸ்மித் நிதானமாக விளையாடி சதம் கடந்து அசத்தினார். இந்த சதத்தின் மூலம் இந்தியாவுக்கு டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஸ்மித் முதலிடம் பிடித்தார். இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 41 இன்னிங்ஸ்களில் ஸ்டீவ் ஸ்மித் 10 சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் காபாவில் தான் களமிறங்கிய மூன்று இன்னிங்ஸ்களிலும் ட்ராவிஸ் ஹெட் டக் அவுட் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தினை ஆடிய ஹெட் 152 ரன்களைக் குவித்து வெளியேறினார். ட்ராவிஸ் ஹெட் மற்றும் ஸ்மித் இணைந்து 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
பின்வந்த மிட்செல் மார்ஷ் சொற்ப ரன்னில் வெளியேற ஆஸ்திரேலிய அணி, இரண்டாம் நாள் முடிவில், 7 விக்கெட்கள் இழப்பிற்கு 405 ரன்களைக் குவித்துள்ளது. ஸ்டார்க் 7 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 45 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அசத்தலாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.