டி20 உலகக்கோப்பை| இந்தியாவிற்கு பெரிய அடி.. திலக் வர்மா தொடர்ந்து வாஷிங்டனுக்கு காயம்!
2026 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. திலக் வர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளனர். மாற்று வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் பிப்ரவரி 7 முதல் தொடங்கி நடைபெறவிருக்கிறது. 2024 டி20 உலகக்கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக இருக்கும் இந்திய அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் மீண்டும் உலகக்கோப்பையை வெல்லும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்துவருகிறது. அதற்கு ஏற்றார்போல் தொடர்ந்து அனைத்து டி20 தொடர்களையும் வென்றுவரும் இந்திய அணி உலகக்கோப்பை வெல்லும் அணியாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்த திலக் வர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது இந்தியாவிற்கு பின்னடைவை கொடுத்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன்பே திலக் வர்மாவிற்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர் டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவாரா அல்லது வேறு வீரர்கள் அறிவிக்கப்படுவார்களா என்ற சந்தேகம் இருந்துவருகிறது. அவருக்கான மாற்றுவீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்தசூழலில் தற்போது சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு தலைவலியாக மாறியுள்ளது.
ஒருநாள் தொடரிலிருந்து வாஷிங்டன் விலகல்..
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பந்துவீசும்போது வாஷிங்டன் சுந்தருக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டதால் அவதிப்பட்டார். கடைசி நேரத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கும் போதுகூட அவரால் ரன் எடுக்க ஓட முடியவில்லை. இப்படியான சூழலில் தான் மீதமிருக்கும் ஒருநாள் தொடரிலிருந்து வாஷிங்டன் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக உள்நாட்டு போட்டிகளில் அசத்திவரும் ஆயுஸ் பதோனி மாற்றுவீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே டி20 உலகக்கோப்பையில் இடம்பெற்றிருந்த திலக் வர்மா காயத்தால் விலகியநிலையில், தற்போது உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த மற்றொரு வீரரான வாஷிங்டனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது பின்னடைவாக மாறியுள்ளது. இருவரும் உலகக்கோப்பைக்குள் சரியாகி வந்துவிடுவார்களா அல்லது மாற்றுவீரர்கள் அறிவிக்கப்படுவார்களா என்ற குழப்பம் நிலவுகிறது. திலக் வர்மாவிற்கு பதில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் கூறிவருகின்றனர்.

