உலக கிரிக்கெட்டின் 2 ராஜாக்கள்.. சச்சினுக்கு பிறகு 2வது வீரராக கோலி படைத்த வரலாறு!
சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை முறியடித்து, சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்களை அதிவேகமாக அடித்த வீரராக விராட் கோலி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். 624 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்து, குமார் சங்ககராவை பின்னுக்கு தள்ளி, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் சாதனைகளை முறியடிக்கக் கூடிய ஒரே வீரராக விராட் கோலி பார்க்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு சாதனையாக முறியடித்து அதற்கு நேர்சேர்த்துவருகிறார் கிங் கோலி.. என்னுடைய சாதனைகளை இன்னொரு இந்தியர் முறியடித்தால் அதைவிட எனக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும் என சச்சின் டெண்டுல்கர் ஒருமுறை கூறியிருந்தார்.
அந்தவகையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என மூன்று வடிவத்தையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினுக்கு பிறகு இரண்டாவது இடத்தை பிடித்து வரலாறு படைத்துள்ளார் விராட் கோலி..
அதிவேகமாக 28,000 ரன்கள் அடித்து வரலாறு..
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 89 ரன்கள் அடித்து விளையாடிவரும் கிங் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 28000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். அதிவேகமாக இந்த சாதனையை படைத்த வீரராகவும் மாறி, சச்சினை பின்னுக்கு தள்ளி வரலாறு படைத்தார். சச்சின் 644 இன்னிங்ஸ்களில் 28,000 ரன்களை கடந்த நிலையில், விராட் கோலி 624 இன்னிங்ஸ்களில் அடித்து சம்பவம் செய்துள்ளார்.
மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த உலக வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்த இலங்கையின் குமார் சங்ககராவை பின்னுக்கு தள்ளி விராட் கோலி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். முதலிடத்தில் 34,357 ரன்களுடன் சச்சின் நீடிக்கும் நிலையில், 28,017* ரன்களுடன் இரண்டாவது இடம்பிடித்தார் கோலி.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள்:
1. சச்சின் டெண்டுல்கர் - இந்தியா - 782 இன்னிங்ஸ்கள் - 34,357 ரன்கள்
2. விராட் கோலி - இந்தியா - 624 இன்னிங்ஸ்கள் - 28,017* ரன்கள்
3. குமார் சங்ககரா - இலங்கை - 666 இன்னிங்ஸ்கள் - 28,016 ரன்கள்

