\
ban vs aus
ban vs auscricket australia

1 1/2 நாளில் முடிந்த டெஸ்ட்.. திட்டமிட்டே செய்ததா ஆஸி? இந்தியா என்றால் மட்டும் இளக்காரமா?

வங்கதேசம் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் வெறும் ஒன்றரை நாட்களிலேயே முடிவை எட்டியுள்ளது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on
Summary

அகமதாபாத் டெஸ்ட் இரண்டு நாளில் முடிந்தபோது இந்தியா தேர்ந்தெடுத்த ஆடுகளம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் வங்கதேசம்-ஆஸ்திரேலியா மக்கே டெஸ்ட் வெறும் ஒன்றரை நாளில் முடிந்தபோதும், ஆடுகளம் குறித்த கேள்விகள் எழாமல் ஸ்டார்க்கின் பந்துவீச்சே புகழப்பட்டது. இதனால் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கு வேறு வேறு தரநிலைகள் பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வி ரசிகர்களிடையே தீவிரமாக எழுந்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடத்தப்பட்ட டெஸ்ட் போட்டி வெறும் 2 நாட்களுக்குள் முடிவை எட்டியபோது, இந்தியா தேர்வுசெய்த ஆடுகளத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூட, வெளிநாட்டு ஆடுகளங்களில் போட்டி 2 நாட்களில் முடிந்தால் அடடா அற்புதமான பந்துவீச்சு என்று புகழ்கிறார்கள், அதுவே இந்தியாவில் 2 நாட்களில் ஒரு டெஸ்ட் போட்டி முடிவை எட்டினால் கடுமையாக விமர்சிக்கிறார்கள் என குற்றஞ்சாட்டியிருந்தார்.

ENG vs IND test series
ENG vs IND test seriescricinfo

இந்தமுறையும் அதே அணுகுமுறைதான் நடந்துள்ளது. வங்கதேசம் - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள்ளாகவே வெறும் ஒன்றரை நாளில் முடிவை எட்டியுள்ளது. இதற்கு மக்கே ஆடுகளத்தின் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கப்படாமல், அனைவருடைய பேச்சும் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்டார்க்கின் பந்துவீச்சை புகழ்ந்து மட்டுமே மையம் கொண்டுள்ளது. இதனால் இந்தியாவிற்கு ஒரு நியாயம், ஆஸ்திரேலியாவிற்கு ஒரு நியாயமா என்ற வாதத்தை ரசிகர்கள் முன்வைத்துள்ளனர்.

ban vs aus
இரண்டாக வெட்டப்பட்ட கிரிக்கெட் பந்து.. கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை!

போட்டியில் என்ன நடந்தது?

போட்டியை பொறுத்தவரை அதன் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 64 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது, ஆஸ்திரேலியா 210 ரன்கள் எடுத்து 146 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் வங்கதேசம் 95 ரன்களுக்கே சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. முதல் நாளில் மட்டும் பதினெட்டு விக்கெட்டுகள் வீழ்ந்தன. இரண்டு முழு நாட்கள் முடிவடைவதற்கு முன்பே டெஸ்ட் போட்டி நிறைவடைந்தது. மேலும், இந்த போட்டியில் வெறும் 750 பந்துகள் மட்டுமே வீசப்பட்டதால், இது வரலாற்றிலேயே நான்காவது மிகக் குறுகிய டெஸ்ட் போட்டியாகவும், ஆஸ்திரேலியா மண்ணில் 2வது மிகக் குறுகிய போட்டியாகவும் பதிவானது.

ஆஸ்திரேலியாவுக்கு இந்த வெற்றி மிகவும் அவசியமானதாக இருந்தது. டர்வினில் வங்கதேசம் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த பிறகு, மற்றொரு தோல்வி அவர்களின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) பயணத்தையே தலைகீழாக்கிருக்கும். அதுமட்டுமில்லாமல் 140 ஆண்டுகளாக சொந்தமண்ணில் ஒயிட்வாஷை சந்திக்காத ஆஸ்திரேலியா, ஒரு மாபெரும் வரலாற்று தோல்வியை சந்தித்திருக்கும். ஆனால் அதற்கு பதிலாக, அவர்கள் மக்கேயில் ஆணித்தரமாக பதிலடி கொடுத்து, வங்கதேசத்தின் எண்ணத்தை முறியடித்தனர்.

அதேநேரம் இந்தப்போட்டியில் ஆஸ்திரேலியா வென்றவிதம், டெஸ்ட் ஆடுகளங்களுக்குப் பயன்படுத்தப்படும் தரநிலைகள் குறித்து ஒரு நியாயமான கேள்வியை எழுப்புகிறது. ஆஸ்திரேலியா வரலாற்று தோல்வியை தவிர்ப்பதற்கே இந்த ஆடுகளத்தை தேர்வுசெய்ததா என்ற கேள்வியை சிலர் எழுப்பியுள்ளனர்.

ban vs aus
'போட்டி இன்னும் முடியவில்லை.. ஆஸ்திரேலியாவை தோற்கடிப்போம்' - வங்கதேச வீரர் நம்பிக்கை

திட்டமிட்டே செய்ததா ஆஸி..?

உண்மையில் வங்கதேசத்தைப் பொறிக்குள் சிக்க வைப்பதற்காக ஆஸ்திரேலியா வேண்டுமென்றே ஒரு "மோசமான" இரண்டு நாள் ஆடுகளத்தை வடிவமைக்கவில்லை. இதற்குமுன் பழக்கமில்லாத குளிர்கால போட்டி அட்டவணை மற்றும் சோதிக்கப்படாத புதிய டெஸ்ட் மைதானம் ஆகியவற்றின் பக்கவிளைவாகவே இந்தக் கடுமையான சூழல் உருவாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. மெல்போர்ன் மற்றும் சிட்னி போன்ற தெற்குத் தலைநகரங்கள் ஆகஸ்ட் மாதத்தில் மிகவும் குளிராகவும் ஈரப்பதமாகவும் இருப்பதால், போட்டிகள் வெப்பமண்டல வடக்குப் பகுதிகளான டர்வின் மற்றும் மக்கேவுக்கு மாற்றப்பட்டதாகவும், மிகவும் நெருக்கடியான சர்வதேசப் போட்டி அட்டவணையைச் சமாளிப்பதற்காகவே ஆஸ்திரேலியா இந்த முடிவை எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

எப்படி இருப்பினும் வெளிநாட்டு ஆடுகளங்கள், ஆசிய ஆடுகளங்களுக்கு இடையேயான வேறுபாடு தொடர்ந்துகொண்டே இருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ban vs aus
அசைக்கமுடியாத 140 ஆண்டுகால சாம்ராஜ்ஜியம்.! இது நடந்தால்.. வங்கதேசம் காலடியில் கிரிக்கெட்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com